(Reading time: 22 - 44 minutes)

உடனே பூபதி, "என் பெயர் பூபதி. நான் செல்வந்தர் காளிதாசனின் மகன். பார்த்திபனால் இந்நிலைக்கு ஆளானேன். ஏற்கனவே பல இன்னல்களைக் கொடுத்த அவன் இறுதியில் என் குதிரையையும் களவாடிச் சென்று என்னை வீதி வீதியாக அலைய வைத்துவிட்டான்" என்றான்.

உடனே பார்த்திபன் முந்திக்கொண்டு, "ஒரு சிறு திருத்தம் மன்னா, நான் குதிரையை திருடிக்கொண்டு வரவில்லை. ஒரு அவசர காரியம். அதனால் குதிரையை எடுத்துக் கொண்டு வந்தேன். அரணமனைக்கு வெளியில் தான் அது இருக்கிறது. இவனை அந்த கழுதையை...இல்லை..இல்லை...மன்னிக்கவும்...அந்த குதிரையை எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள்" என்றான்.

பூபதி, "நீ எடுத்துக் கொள்ளச் சொன்னால் நான் எடுத்துக் கொள்வேனா? நான் என்ன உன் வேலைக்காரனா? முதலில் என் குதிரையை கழுதை என்று அவமதித்ததற்கு மன்னிப்பு கேள். என்னை வீதி வீதியாக அலைய வைத்ததற்கு நான் உன்னைச் சும்மா விடமாட்டேன்" என்று கத்தினான்.

அப்போது பார்த்திபன், "மன்னா, தங்கள் முன் எப்படி பேசுகிறான் பாருங்கள்" என்றான்.

உடனே நிதானத்திற்கு வந்த பூபதி, "மன்னிக்க வேண்டும் மன்னா, இவன் செய்த காரியம் அப்படி. நீங்களே இதற்கு ஒரு நல்ல தீர்ப்பு வழங்குங்கள், மன்னா" என்றான்.

மன்னர் நடப்பதைப் பார்த்து வெறுத்து, காவலாளியைப் பார்த்தார். மன்னரின் குறிப்பை உணர்ந்த காவலாளிகள் இருவர் பூபதியை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துச் சென்றனர்.

"மன்னா, தீர்ப்பு கொடுக்காமலேயே என்னை வெளியேற்றுகிறீர்களே, இது நியாயமா" என்று கத்திக்கொண்டே பூபதி சென்றான்.

அவன் சென்றதும் பார்த்திபன் மன்னரைப் பார்த்து, "மிகச் சரியான தீர்ப்பு மன்னா" என்றான்.

மன்னர் சம்யுக்தனைப் பார்த்து, "சம்யுக்தா, வருங்காலத்தில் இந்நாட்டின் சிறந்த வீரனாக விளங்குவாய் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. நீ உன்னையே செம்மையாக்கிக் கொள்ள இன்னும் சிறிது காலம் பிடிக்கும். அது வரையில் இம்மாதிரியான ஆபத்தான காரியங்களில் அவசரப்பட்டு இறங்காதே; எதுவாக இருந்தாலும் தன்னிச்சையாக செயல்படாமல் அரண்மனைக்கு தகவல் தெரிவித்துவிடு. அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஒருவன் செய்யும் தவறுகள் தான் அனுபவமாகப் பிறக்கின்றன. ஆயிரம் ஏடுகளிலிருந்து கற்கும் அனுபவத்தை விட ஒரு தவற்றிலிருந்து கற்கும் பாடம் நல்ல அனுபவத்தைப் பெற்றுத் தரும். நான் சொல்பவற்றை புரிந்து கொள்வாய் என்று நினைக்கிறேன். நீங்கள் இருவரும் செல்லலாம்" என்றார்.

அரச சபை கலைந்தது. மன்னர் ராஜகுருவைத் தனியாக சந்தித்தார். சம்யுக்தன் கொடுத்த ஓலையை அவரிடம் மன்னர் கொடுத்தார். அதைப் பார்த்து அதிர்ந்த ராஜகுரு, "நாம் தான் அவசரப்பட்டு சம்யுக்தனை பழித்து விட்டோம். அவன் செய்தது மிகச் சரியே." என்றார்.

தொடரும்...

பாகம் - 01 - அத்தியாயம் 05

பாகம் - 01 - அத்தியாயம் 07

{kunena_discuss:1135}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.