(Reading time: 23 - 46 minutes)

தொடர்கதை - சாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 07 - சிவாஜிதாசன்

Samrat Samyukthan

அத்தியாயம் 1.7 : வேடம் கலைந்தது

ம்யுக்தனும் பார்த்திபனும் அரண்மனையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார்கள்.

பார்த்திபன் சம்யுக்தனிடம், "நீ எல்லா உண்மைகளையும் சொல்லி விட்டாய் தானே?" என்று கேட்டான்.

சம்யுக்தன் அவனைத் திரும்பிப் பார்த்து, "அதிலென்ன சந்தேகம்? கூட நீயும் தானே இருந்தாய். தெரியவில்லையா?" என்று கேட்டான்.

"அது இல்லை, எதையோ நீ விட்டு விட்டதைப் போல என் மனது குடைகிறது."

சம்யுக்தன் எதுவும் பதிலுரைக்காமல் அமைதியாக வந்தான்.

"உன்னைத் தான் கேட்கிறேன், பதில் கூறு" என்றான் பார்த்திபன்.

"என்ன பதிலை என்னிடமிருந்து எதிர்பார்க்கிறாய்? உனக்குத் திறமை இருந்தால் நீயே கண்டுபிடித்துக்கொள்"

"அது இருந்தால் இவ்வளவு நேரம் உன்னிடம் ஏன் கெஞ்சிக் கூத்தாடிக் கொண்டிருக்கிறேன்".

"அது இல்லை என்று நீயே ஒப்புக்கொள்கிறாய் அல்லவா, அமைதியாக வா"

"சம்யுக்தா, நீ சொன்ன காரியத்தை எல்லாம் செய்து படக்கூடாத அவமானங்களை எல்லாம் பட்டுவிட்டேன். தயவு செய்து கூறு. இல்லையென்றால் என் தலையே வெடித்து விடும் போலிருக்கிறது."

"சொல்கிறேன், அது வரை பேசாமல் என்னுடன் வா"

இருவரும் அரண்மனை நுழைவாயிலை அடைந்தனர். பூபதி, அங்கே கட்டப்பட்டிருந்த சில குதிரைகளின் நடுவே நின்று புலம்பிக்கொண்டிருப்பதைப் பார்த்தனர்.

"இன்னும் இவன் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறான். வா, சென்று பார்க்கலாம்" என்று பார்த்திபன் அழைத்தான்.

"நமக்கு இன்னும் சில வேலைகள் இருக்கின்றன. வா, செல்லலாம்" என்று கூறிய சம்யுக்தன் அங்கு கட்டப்பட்டிருந்த தன் குதிரையை அவிழ்த்து வரச் சென்றான்.

"பூபதியை விட வேறு முக்கியமான வேலை இவ்வுலகில் எனக்கு இல்லை" என்று கூறிய பார்த்திபன் பூபதியை நோக்கி நடந்தான். பார்த்திபன் பூபதியை நெருங்க நெருங்க அவன் புலம்புவதைக் கேட்க முடிந்தது.

பூபதி, "அந்த பார்த்திபன் என் குதிரையை எங்கு மறைத்து வைத்திருப்பான்?" என்று ஒரு குதிரையின் மேல் கை வைத்துக்கொண்டே புலம்பிக்கொண்டிருந்தான்.

அவனை நெருங்கிய பார்த்திபன், "என்ன செய்து கொண்டிருக்கிறாய், பூபதி?" என்று கேட்டான்.

பார்த்திபனைப் பார்த்ததும் கோபத்தில், "எங்கேயடா என் குதிரை?அதை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய்?" என்று அவன் உடையை உற்று நோக்கினான்.

"குதிரை என்ன கொய்யாப்பழமா? ஆடைக்குள் மறைத்து வைப்பதற்கு? உனக்கு ஏதேனும் பார்வைக் கோளாறா?"

"ஏன் அப்படிக் கேட்கிறாய்"

"இவ்வளவு நேரம் ஒரு குதிரையின் மேல் கை வைத்து புலம்பிக் கொண்டிருந்தாயே, அது தான் உன் குதிரை, குருடனே" என்று கூறி விட்டு பார்த்திபன் சம்யுக்தனிடம் சென்றான்.

அப்போது பூபதி குதிரையைப் பார்த்து, "இதுவா என் குதிரை? எள்ளும் கொள்ளும் போட்டு வளர்த்து கொழு கொழுவென்று இருந்த என் குதிரையை, இப்படி ஒரே இரவில் பஞ்சத்தில் அடிபட்டது போல் மாற்றி விட்டானே, கிராதகன்" என்று சொல்லிக்கொண்டே குதிரையிடம், "என் கண்ணே, உன்னைக் காணாமல் தவித்து விட்டேன்" என்று சொல்லி குதிரையைத் தடவி விட்டான். ஆனால் குதிரையோ அவனைப் பார்த்து மிரண்டு கட்டப்பட்டிருந்த கயிற்றை அறுத்துக் கொண்டு வேகமாக ஓடியது. "ஏன் ஓடுகிறாய்? நில்..நில்.." என்று கத்திக்கொண்டே பூபதி அதன் பின்னால் ஓடினான்.

குதிரையைத் துரத்திக்கொண்டு ஓடும் பூபதியைப் பார்த்த பார்த்திபன், "இந்தக் குதிரைக்காகவா இப்படி சண்டைக்கு வந்தான். குதிரையே அவனிடமிருந்து தப்பித்தால் போதும் என்று ஓடுகிறது" என்று சொல்லி சிரித்தான். அதைக் கேட்டு தன் குதிரையோடு நடந்து வந்த சம்யுக்தனின் முகத்தில் புன்னகை அரும்பியது.

"சரி, இந்த நகைச்சுவையில், நீ மறைத்ததை மறந்து விட்டேன் பார். அது என்னவென்று கூறு" என்று பார்த்திபன் கேட்டான். 

"அது ஒன்றும் பெரிய விசயமில்லை. எனக்கு ஒரு சிறிய வேலை பாக்கி இருக்கிறது. நான் அதை முடித்துவிட்டு வருகிறேன்" என்று கூறி தன் குதிரையில் ஏறி அமர்ந்தான் சம்யுக்தன்.

"என்னை விட்டுவிட்டு எங்கு செல்கிறாய்?"

"பிறகு சொல்கிறேன்" என்று கூறி, குதிரையின் வயிற்றை தன் குதிகாலால் அழுத்தினான். சிறிய கனைப்போடு குதிரை, சம்யுக்தனை சுமந்துகொண்டு கிளம்பியது.

பார்த்திபன், "மறுபடியும் என் உதவியை நாடி வருவாயல்லவா, அப்போது பார்த்துக்கொள்கிறேன்" என்று முணுமுணுத்துக்கொண்டான்.

ராஜகுரு அந்த தீய்ந்த ஓலையைப் பார்த்தவாறே சிந்தனையில் மூழ்கியிருந்தார். அரசர், சம்யுக்தன் கூறியவற்றையெல்லாம் தன் மனதில் காட்சிகளாக நகர்த்திக்கொண்டிருந்தார். எதை வைத்து சம்யுக்தன் செய்தது சரி என்று ராஜகுரு கூறினார்; விளங்கவில்லையே என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் ராஜகுருவின் மௌனத்தைப் பொறுக்க முடியாமல், "ராஜகுருவே! ஏதாவது பேராபத்தை நம் நாடு எதிர்கொள்ளப்போகிறதா?" என்றார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.