(Reading time: 23 - 46 minutes)

"நெஞ்சிலிருக்கும் சோகத்தை கண்ணீராக வெளிப்படுத்திக் கேட்டால் தான் தங்களுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன்" என்று கூறிக்கொண்டே, "அலைச்சலில் களைப்படைந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்த பழத்தைச் சாப்பிட்டு களிப்படையுங்கள்" என்று கூறி சம்யுக்தன் ஒரு கொய்யாப்பழத்தைத் தூக்கி அந்த வீரனிடம் போட்டான். பழம் அவனுடைய கை மணிக்கட்டைத் தாக்கி தரையில் விழுந்தது. அந்த வீரன் வலியால் தன் மணிக்கட்டைத் தடவினான். 

"என்ன, பழத்தைப் பிடிக்காமல் நழுவ விட்டு விட்டீர்களே?" என்று கூறிக்கொண்டே அந்தப் பழத்தை எடுத்து அவனிடம் கொடுத்தான்.

"எனக்கு வேண்டாம் .பசியில்லை"

"என்ன, குதிரையைக் கட்டுப்படுத்தும் கயிற்றின் மீதான தங்களின் பிடி இறுக்கமாக இல்லையே. சற்று தளர்ந்திருக்கிறதே."

"சில நாட்களுக்கு முன்னால் கவனக் குறைவால் குதிரையிலிருந்து கீழே விழுந்து விட்டேன். அதனால் கையில் சிறு காயம் ஏற்பட்டு விட்டது."

சம்யுக்தன் குதிரையின் முகத்தைத் தடவிக் கொண்டே, "குதிரைக்கு நீங்கள் ஓய்வு கொடுக்கவில்லை போலும். அதனால் தான் உங்களைக் கீழே தள்ளி விட்டது. இப்போதாவது நீங்கள் கீழே இறங்கி குதிரைக்கு சற்று ஓய்வு கொடுக்கலாமே." என்றான்.

குதிரையில் இருந்து அவனும் கீழே இறங்கினான். அவன் இறங்கும் போது மற்ற வீரர்களின் முகங்களை சம்யுக்தன் உற்று நோக்கினான்.

சம்யுக்தன் அவனைப் பார்த்து, "நான் இங்கு ஒரு பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன். தூரத்தில் இருக்கும் எதிரியின் நெஞ்சை ஒரு கத்தியை வீசித் தாக்குவது தான் அந்த பயிற்சி." என்று கூறிக்கொண்டே இடுப்பிலிருந்த கத்தியை எடுத்தபோது அவன் கை மூட்டு அந்த வீரனின் மார்பில் இடித்தது. உடனே அவன் "ஷ்ஷ்ஷ்...." என்று வலியால் அந்த நெஞ்சைத் தேய்த்தான்.

"என்ன ஆயிற்று" என்று சம்யுக்தன் வினவினான்.

"குதிரையிலிருந்து விழுந்த காயம் தான்"

"மன்னித்துக்கொள்ளுங்கள்." என்று கூறிவிட்டு, சம்யுக்தன், "என்னுடைய இந்தப் பயிற்சியில் நீங்களும் பங்கேற்றால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன்." என்று கூறியவன், "நான் ஒரு முட்டாள். இந்த கையை வைத்துக் கொண்டு நீங்கள் எப்படி கத்தியை வீசுவீர்கள். முதலில் கத்தியை உங்களால் பிடிக்கமுடியுமா?" என்று சற்று ஏளனம் தொனிக்கும் குரலில் கேட்டான்.

மரத்தின் பின்னால் மறைந்துகொண்டிருந்த பார்த்திபன், "இவனுக்கு பித்து பிடித்து விட்டதா? எதற்கு இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறான்?" என்று மனதில் எண்ணியவாறே குழம்பிக்கொண்டிருந்தான்.

சம்யுக்தனின் கையிலிருந்து கத்தியை வாங்கிய அவ்வீரன், "யாரைப் பார்த்து என்ன சொல்கிறாய்? இங்கே இருக்கும் மரங்களில் எந்த மரத்தின் மேல் கத்தியை வீச வேண்டும். அந்த மரத்தின் மீது வீசட்டுமா?" என்று ஒரு மரத்தைச் சுட்டிக் காட்டினான்.

சம்யுக்தன், "அந்த மரத்திலா, சிறு குழந்தை கூட அதைச் செய்துவிடுமே. நீங்கள் என்ன செய்கிறீர்கள், அதோ இருக்கிறதே ஒரு மரம்" என்று பார்த்திபன் ஒளிந்து கொண்டிருந்த மரத்தைச் சுட்டிக் காட்டினான்.

பார்த்திபன், "அடப்பாவி, என் உயிரை எடுப்பதில் அவ்வளவு ஆர்வமா" என்று எண்ணியவாறே கலக்கத்தோடு நின்று கொண்டிருந்தான்.

அவ்வீரனும் குறிபார்த்து அம்மரத்தை நோக்கி கத்தியை வீசினான். அந்தக் கத்தி மரத்தினுள் பாய்ந்து செருகி நின்றது. கத்தியை வீசியதும், அவ்வீரன் வலியால் அந்த கையின் மணிக்கட்டை இன்னொரு கையால் பிடித்து அழுத்தினான்.

சம்யுக்தன், "அம்மரத்தின் பின்னால் யாரோ மறைந்து நின்று நாம் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவனை பிடித்துக் கொன்று விடுங்கள்" என்றான்.

உடனே பார்த்திபன் அலறி அடித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். இரண்டு வீரர்கள் அவனைத் துரத்திச் சென்றார்கள்.

சம்யுக்தன் தன் அருகில் நின்று கொண்டிருந்த வீரனிடம், "நன்றாக ஓடுகிறான் அல்லவா?" என்று கேட்டான். 

அப்போது பார்த்திபனைத் துரத்திச் சென்ற வீரர்கள் திரும்பி வந்தனர். "யாரது? அவன் எங்கே?" என்று கேட்டான் சம்யுக்தன்.

"அவனைப் பிடிக்கவும் முடியவில்லை. அடையாளம் காணவும் முடியவில்லை. தப்பித்துவிட்டான்."

வீரர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள். நான் அவனைப் பார்த்துவிட்டேன். அவனை எனக்கு அடையாளம் தெரியும். அவனை எங்கேயாவது கண்டால் உங்களிடம் பிடித்துக் கொடுக்கிறேன்"

"நன்றி சம்யுக்தா, இன்று நீ எந்த இடத்தில் காவல் புரிய வேண்டும்.?" என்று அவ்வீரன் கேட்டான்.

"நான் இன்று காட்டுப் பகுதியில் காவல் புரியலாம் என்று நினைக்கிறேன்"

"காட்டுப் பகுதியிலா?"

"ஆமாம். இங்கே எனக்கு ஒரு வேலை இருக்கிறது. அதனால் காட்டுப் பகுதியில் தான் இன்று என் காவல்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.