(Reading time: 23 - 46 minutes)

"நாம் மீண்டும் சந்திப்போம் சம்யுக்தா" என்று கூறி அவர்கள் சென்றனர்.

அவர்கள் கிளம்பிச் சென்றதும் சம்யுக்தன் "பார்த்திபா! எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறாய்?" என்று கத்தினான். பார்த்திபனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. "பார்த்திபா! வெளியே வா!" என்று மறுபடியும் குரலை உயர்த்தி சம்யுக்தன் அழைத்தான். அப்போது ஒரு புதர் மறைவிலிருந்து பார்த்திபன் வெளியே வந்தான்.

பார்த்திபனைப் பார்த்த சம்யுக்தன், " தயவு செய்து நான் கூறுவதை பொறுமையாகக் கேள்." என்றான்.

"நீ எதுவும் கூறத் தேவையில்லை. இன்றோடு நம் நட்பு முறிந்தது" என்று கோபத்துடன் பார்த்திபன் கூறினான்.

"நான் சொல்வதைக் கேட்பாயா மாட்டாயா"

"எதுவும் கேட்கப் போவதில்லை. நான் கிளம்புகிறேன்"

"நம் எதிரியைக் கண்டு பிடித்துவிட்டேன் என்று நான் கூறினாலும் கேட்க மாட்டாய் போலிருக்கிறது. சரி, நீ கிளம்பு"

உடனே கோபம் குறைந்து எதிர்பார்ப்பு பெருகி, "என்ன சொல்கிறாய்?" என்று ஆவல் மேலிட பார்த்திபன் கேட்டான்.

"என் காலணியில் ஓர் இரும்புத்துண்டு நீண்ட நாட்களாக தொல்லை செய்து கொண்டிருந்தது. அதை சரி செய்ய நேரம் இல்லாமல் போய்விட்டது. நேற்று மோர்க்காரியின் வீட்டின் அருகில் சண்டையிட்டு அவன் தப்பியபிறகு நான் எதேச்சையாக என் காலணியைப் பார்த்தேன். அந்த சிறு இரும்புத்துண்டில் ரத்தக்கறை இருந்ததைப் பார்த்தேன். ரத்தக்கறை எப்படி வந்தது என்று யோசித்தபோது நான் அவன் மார்பில் என் காலால் தாக்கியது ஞாபகம் வந்தது." என்று கூறிக்கொண்டே மரத்தில் எறியப்பட்ட கத்தியை எடுத்து பார்த்திபனிடம் கொடுத்தான்.

பார்த்திபன் ஒன்றும் புரியாமல் முழித்தான்.

"அந்த கத்தியில் ஏதேனும் வாசம் வருகிறதா என்று பார்"

"ஏதோ மூலிகை வாசம் வருகிறதே"

"மிகச்சரியாக சொன்னாய்."

சம்யுக்தன் தன் இடுப்பில் செருகியிருந்த இன்னொரு கத்தியை எடுத்து "இது ஆற்றங்கரையில் என் மீது வீசப்பட்ட கத்தி. இதில் என்ன வாசம் வருகிறது என்று பார்" என்று கூறினான்.

பார்த்திபனும் அந்த கத்தியை முகர்ந்து பார்த்தான். "இதிலும் அதே மூலிகை வாசனை தான் வருகிறது...ஆனால் சற்று வாசம் குறைந்துள்ளது" என்று அதிர்ச்சியோடு கூறினான்.

"நேற்று அவன் என்னுடன் சண்டையிட்டபோது அவனுடைய கத்தியின் பிடி தளர்ந்திருந்தது. அந்த கத்தியை நழுவவும் விட்டான். ஆற்றங்கரையில் அவன் என் மேல் கத்தியை வீசியதும், தன் இன்னொரு கையால் அந்த கையை பிடித்துக் கொண்டு ஓடியதும் அவன் கையில் ஏதும் காயம் இருக்குமோ என்று சந்தேகம் உண்டானது. மோர்க்காரின் வீட்டில் அவனுடன் சண்டையிட்டபோது அவன் கத்தியை நழுவ விட்டதும் என் சந்தேகம் ஊர்ஜிதமானது. அதைத் தெரிந்துகொள்ளத்தான் கொய்யாப்பழத்தை அவன் மணிக்கட்டின் மேல் வீசி எறிந்தேன்.அந்த கொய்யாப்பழத்திலும் அதே மூலிகை வாசனை வந்தது. அவன் கையில் ஏற்பட்ட காயத்திற்குத் தான் மூலிகை மருந்து பூசியிருக்கிறான் என்று புரிந்து கொண்டேன். அதை வைத்து தான் அவனைப் பரிசோதிக்க ஆரம்பித்தேன். பரிசோதனையும் வெற்றி பெற்றது."

"அது சரி, அவர்கள் மேல் எப்படி உனக்கு சந்தேகம் வந்தது?"

"அரசசபையில் நாம் இருக்கும் போது தான் நம் நண்பர்களைக் காணவில்லை என்று அவர்களைத் தேடிச் சென்று வந்த வீரர்கள் சொன்னார்கள். திரும்பவும் இவ்வளவு குறுகிய நேரத்தில் அவர்கள் நம் நண்பர்களைத் தேடி வந்ததாகச் சொன்னது நம்பும் படியாக இல்லை. இது முதல் தவறு. நான் சொன்னதும் அந்தக் கத்தியை வீச அவன் ஒப்புக்கொண்டது இரண்டாவது தவறு. கத்தியைக் குறி தவறாமல் வீசியது மூன்றாவது தவறு. வீசியதும், வலியால் ஆற்றங்கரையில் செய்தது போலவே செய்தது நான்காவது தவறு. அவன் பூசி வந்த மூலிகை ஐந்தாவது தவறு. இதை எல்லாம் வைத்து தான், அவன் தான் முகமூடி அணிந்து வந்தவன் என்று தெரிந்து கொண்டேன்"

"அவர்களைப் பிடித்து அரசரிடம் ஒப்படைத்திருக்கலாமே"

"இல்லை, இல்லை. நான் அவர்களைத் தாக்கி இருந்தாலும் அவர்கள் என்னைத் தாக்கி இருந்தாலும், அரசசபையில் நாம் இன்னொரு முறை தலைகுனிந்து நிற்க வேண்டிய சூழ்நிலை உருவாகியிருக்கும். காணாமல் போன நம் நண்பர்களைக் கண்டு பிடிக்கும் வரை அவசரப்பட்டு ஏதும் செய்யக்கூடாது."

"அது சரி, என்னை ஏன் அவர்களிடம் மாட்டி விட்டாய்?" என்று பார்த்திபன் கேட்டான்.

"அவன் கத்தியை வீசி எறிந்ததும் தான் அவசரப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்து கொண்டான். உடனே சுதாரித்துக் கொண்டு பின்னால் இருந்த வீரனைப் பார்த்தான். அந்த வீரன் அந்தப் பார்வைக்கு அர்த்தம் புரிந்து கொண்டு உறையிலிருந்து வாளை உருவினான். நான் அதைக் கவனித்து விட்டேன். அதனால் தான் நீ அங்கே ஒளிந்து கொண்டிருப்பதை அவர்களிடம் சொன்னேன். ஓட்டத்தில் உன்னை யாரும் வெல்ல முடியாது என்று எனக்குத் தெரியும். நான் நினைத்தது போலவே நீயும் அவர்களிடம் அகப்படவில்லை. அவர்கள் என்னைத் தாக்கி எனக்கு ஏதேனும் நேர்ந்திருந்தால் உன்னால் அவர்களைப் பற்றிய ரகசியங்கள் வெளிவந்திருக்கும். அதனால் பயந்து என்னை விட்டு விட்டார்கள்."

அவன் சொன்னதைக் கேட்ட பார்த்திபன்," உனக்கு உடம்பெல்லாம் மூளையடா! இதில் என்ன வேடிக்கை என்றால் மர்ம மனிதனுக்கே நீ ஒரு மர்ம மனிதனாகி விட்டாய்." என்றான்.

அதைக் கேட்ட சம்யுக்தன் புன்முறுவல் செய்தபடி, "இன்று இரவு எப்படியும் அவர்கள் நம்மைத் தாக்க வருவார்கள். நம் நண்பர்களுக்கு ஏற்பட்ட கதி தான் நமக்கும் ஏற்படப்போகிறது" என்றான்.

"இன்றும் என் தூக்கத்திற்கு உலை வைத்து விட்டாயா" என்று பெருமூச்சுடன் பார்த்திபன் கூறினான். 

தொடரும்...

பாகம் - 01 - அத்தியாயம் 06

பாகம் - 01 - அத்தியாயம் 08

{kunena_discuss:1135}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.