(Reading time: 23 - 46 minutes)

பார்த்திபன் பேசியதை எல்லாம் கேட்ட சம்யுக்தன் ஒரு பெருமூச்சோடு தன் பிடியைத் தளர்த்தி "நான் இங்கே இருப்பது உனக்கு எப்படி தெரிந்தது?" என்று கேட்டான்.

"எவ்வளவு காலம் உன் நண்பனாக இருக்கிறேன். நீ எங்கே செல்வாய்? எங்கே இருப்பாய் என்று தெரியாதா? என்னைக் காட்டுப் பகுதியில் அலைய வைத்து விடுவாயோ என்று பயந்திருந்தேன். ஆனால் நீயோ கிழங்கின் சுவையான மணத்தைத் தூது அனுப்பி நீ இருக்குமிடத்தை எளிதில் அடைய வைத்துவிட்டாய். என் அலைச்சலும் என் உடலின் வலியும் மிச்சமாயிற்று."

"அதற்கு ஏன் திருடன் போல் பதுங்கி பதுங்கி வந்தாய்?"

"எல்லாம் ஒரு முன்னெச்செரிக்கை தான். நீ முகத்தைக் காட்டாமல் முதுகைக் காட்டிக் கொண்டிருந்தாய். ஒரு வேளை எதிரியாக இருந்து நான் தனியாக அகப்பட்டுக் கொண்டால், என்ன ஆவது? ஒரு பிரளயமே நடக்கும் அல்லவா? தேவை இல்லாமல் ஓர் உயிரை எடுத்துவிட்ட பாவம் என்னை வந்து சேரும் அல்லவா?" என்று கூறிக்கொண்டே சம்யுக்தன் கீழே வைத்திருந்த கிழங்கை பார்த்திபன் சுவைக்க ஆரம்பித்தான்.

சம்யுக்தன், "அதை தயவு செய்து கொடுத்து விடு. எனக்கு மிகவும் பசிக்கிறது" என்றான்.

பார்த்திபன், "எனக்கும் ஒரு சாண் வயிறு இருக்கிறதல்லவா? அதற்கும் பசி எடுக்காதா? உன்னிடம் சேர்ந்ததிலிருந்து உணவு, உறக்கம் எல்லாம் மறந்து வெகு நாட்களாயிற்று. தாயைப் பிரிந்த கன்றைப் போல உணவில்லாமல் நான் பரிதவித்து விட்டேன். சிறிது நேரம் பேசாமலிரு. என் பசித்த வயிறு கொஞ்சம் சாந்தி அடையட்டும்" என்று கூறிக்கொண்டே கிழங்கை ருசிக்க ஆரம்பித்தான்.

சம்யுக்தன் பசியோடு, வேறு ஏதேனும் சாப்பிடலாமா என்று சுற்றி பார்த்தபோது, அங்கு காய்த்துத் தொங்கிய கொய்யாப்பழங்களைப் பார்த்து அவன் கண்கள் குளிர்ச்சியடைந்தன. அதன் பிறகு, அவன் பார்த்திபன் கிழங்கு உண்ணுவதைத் தடுக்காமல், சில கொய்யாப் பழங்களைப் பறித்து சாப்பிட ஆரம்பித்தான்.

பார்த்திபன் கிழங்கை சாப்பிட்டு முடித்துவிட்டு சம்யுக்தனிடம், "நீ அரசசபையில் ஒரு விஷயத்தை மறைத்தாய் அல்லவா? அதைக் கண்டு பிடித்துவிட்டேன்" என்றான் .

சம்யுக்தன் அவனை வெறித்தான்.

"உன்னை நோக்கி எறியப்பட்ட அந்த கத்தி, அதைத் தானே நீ மறைத்தாய்?"

"ஆமாம்"

"ஏன் அதை சொல்லாமல் மறைத்தாய்?"

"எதிரிகளைக் கையும் களவுமாகப் பிடிக்க அது தான் துருப்புச் சீட்டு"

"புரியவில்லையே"

"புரிந்துகொள்ளும் நேரம் வரும். அதுவரை காத்திரு."

"நம் நண்பர்கள் என்ன ஆனார்கள்? அவர்களைப் பற்றி ஏதும் தடயம் கிடைத்ததா ?"

சம்யுக்தன் "இல்லை" என்று தலையை ஆட்டி, "அவர்களைக் கண்டுபிடித்தால் தான் குற்ற உணர்ச்சியிலிருந்து என்னால் மீண்டு வர முடியும். ஆனால் அவர்களைப் பற்றிய ஒரு தடயம் கூட கிடைக்கவில்லையே. என்ன ஆனார்கள் என்று யூகிக்கவும் முடியவில்லை. நடுக்கடலில் தத்தளிப்பது போலிருக்கிறது." என்றான்.

"நீயாவது நடுக்கடலில் தத்தளிக்கிறாய். நான் தண்ணீரே இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன்."

சம்யுக்தன் புரியாமல் விழித்தான்.

"ஏதோ மாய மந்திரம் நடப்பது போலிருக்கிறது. நம் நண்பர்களைக் காணவில்லை. ஏதோ ஒரு பெரிய பிரச்சனையில் தேவையில்லாமல் தலையிட்டு வசமாக மாட்டிக்கொண்டு விட்டோமோ என்று தோன்றுகிறது. ஆபத்து நம் தோள் மீது உட்கார்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்."

அதைக்கேட்ட சம்யுக்தன் சிரித்தான்.

"எதற்கு சிரிக்கிறாய்? நான் சொன்னது உண்மையா இல்லையா நீயே சொல்"

சம்யுக்தன் மேலும் சிரித்து, "நீண்ட நாள் உபயோகிக்காத உன் அறிவை இன்று தான் நீ உபயோகிக்கிறாய்." என்றான்.

அப்போது சில குதிரைகள் கனைக்கும் சத்தம் கேட்டது.

சம்யுக்தன் பார்த்திபனிடம், "சீக்கிரம் மரத்தின் பின்னால் மறைந்து கொள். ஒரு வேளை எதிரியாக இருக்கலாம். ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், மறைந்திருந்து தாக்கு." என்றான்.

பார்த்திபனும் அவ்வாறே செய்தான். சம்யுக்தன் யார் வருகிறார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது, குதிரைகளில் வந்த மூவர் சம்யுக்தனைப் பார்த்து, குதிரையை நிறுத்தினார்கள். "என்ன சம்யுக்தன், இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று குதிரையில் வந்த அரண்மனை வீரர்களில் ஒருவன் கேட்டான்.

"நாட்டைப் பார்த்து பார்த்து சலித்து விட்டது. அதனால் தான் ஒரு மாறுதலுக்கு காட்டைப் பார்க்க வந்தேன். நீங்கள் என்ன இந்த பக்கம்?"

"எல்லாம் உன் நண்பர்கள் என்ன ஆனார்கள் என்று தெரிந்து கொள்ளத்தான். ஆனால் நீ எதுவும் தெரியாதது போல் கேட்பதைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.