(Reading time: 23 - 46 minutes)

குதிரையின் வேகத்தைக் குறைத்து அக்காட்டை சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே மெதுவாக சென்று கொண்டிருந்தான். பச்சிலைகளின் வாசமும் பறவைகளின் கானமும் சூரியனை மறைத்துக்கொண்டு நிழலை அள்ளித்தரும் மரங்களும் அவனை வரவேற்றன. மா, கொய்யா மரங்கள், பறித்துச் சுவைக்க மனிதர் யாருமின்றி காம்புகளில் கனிகளை பாரமாக சுமந்துகொண்டிருந்தன. அந்தப் பழங்களை பறவைகளும் குரங்குகளும் சுவைத்துக்கொண்டிருந்தன.

சம்யுக்தன் குதிரையிலிருந்து இறங்கி தன் நண்பர்கள் எப்படி காணாமல் போயிருப்பார்கள் என்று சிந்தித்துக்கொண்டே தன் வாளை எடுத்து வழியை மறைத்துக்கொண்டிருந்த செடிகளை வெட்டி பாதையாக்கிக் கொண்டே சென்றான். அவன் பின்னாலேயே குதிரையும் வந்துகொண்டிருந்தது. ஏதாவது மனிதர்கள் மற்றும் குதிரைகளின் காலடித்தடங்கள் தென்படுகின்றனவா என்று பார்த்துக்கொண்டே நடந்தான். ஆனால் அவன் எதிர்பார்த்தது போல் அங்கே எந்த சுவடுகளும் இல்லை.

ஏதோ கனவில் நடப்பது போல் உணர்ந்துகொண்டே சென்றுகொண்டிருந்தபோது வழியில் ஒரு பெரிய மரம் பட்டுப்போயிருப்பதைப் பார்த்தான். மற்ற மரங்களைப் போலில்லாமல் அது காய்ந்து ஆங்காங்கே கரையான் அரித்து, துளைகளோடு பரிதாபமாகக் காட்சி தந்து கொண்டிருந்தது. அப்போது அந்த மோர்க்காரி ஒரு பட்டுப்போன மரப்பொந்தில் ஓலையை எடுப்பதாக சபையில் கூறியது நினைவுக்கு வந்தது.

உடனே, அம்மரத்தின் அருகில் சென்று சோதனை செய்ய ஆரம்பித்தான். அப்போது அம்மரத்தில் ஓர் அகலமான பொந்து இருப்பது அவன் கண்களில் பட்டது. ஓலையை இங்கே தான் வைத்திருப்பார்கள் என்று யூகித்துக் கொண்டு ஏதேனும் ஓலை இருக்கிறதா என்று ஓர் எதிர்பார்ப்போடு அம் மரப்பொந்தில் கையை விட்டான். அவன் கையில் எதுவும் தட்டுப்படவில்லை. ஏமாற்றத்தோடு அப்பொந்திலிருந்து கையை எடுத்தான். அப்போது அவன் மனதில் கேட்டுக் கொண்டிருந்த கேள்விக்கு விடை கிடைத்தது. நாம் சரியான வழியில் தான் வந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்தான்.

களைப்பும் பசியும் சேர்ந்து சம்யுக்தனின் உடலை வாட்ட ஆரம்பித்தது. அவன் வலுவிழந்துகொண்டே செல்வது போல் அவனுக்குத் தோன்றியது. அவன் சிறிது தூரம் நடந்து, தன் கத்தியை உபயோகித்து பூமியில் புதைந்திருந்த கிழங்குகளை தோண்டி எடுத்தான். காய்ந்த சருகுகளை குவித்து, ஒரு காய்ந்த மூங்கில் குச்சியை சரி பாதியாக வெட்டி அதில் ஒரு குச்சியில் ஒரு சிறிய பிளவை ஏற்படுத்தினான். அந்த பிளவில் ஒரு காய்ந்த சருகை வைத்தான். பிறகு இரண்டு குச்சிகளையும் ஒன்றோடு ஒன்று உரச ஆரம்பித்தான். அவன் முகத்திலிருந்து வியர்வை சிறு சிறு துளிகளாக வழிந்து பூமியை ஈரப்படுத்திக் கொண்டிருந்தது. அவன் உள்ளங்கைகள் ரத்தச் சிவப்பாக மாறியது. விரல்கள் வலிக்க ஆரம்பித்தன. இருந்தும் விடாப்பிடியாக குச்சிகளை உரசினான். நீண்ட முயற்சிக்குப் பிறகு குச்சியில் சொருகியிருந்த அந்த காய்ந்த சருகின் மேல் புகை வர ஆரம்பித்தது. சம்யுக்தன் உரசுவதை நிறுத்தி விட்டு மெதுவாக ஊதினான். காய்ந்த சருகு எரிய ஆரம்பித்தது. உடனே இன்னொரு சருகை எடுத்து எரிந்து கொண்டிருந்த சருகு அணையாமல் அதன் மேல் வைத்தான். அது தீப்பிடித்ததும் மற்ற சருகுகளை அதன் மேல் போடவும் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

பிறகு கிழங்குகளை ஒரு குச்சியில் செருகி எரிந்து கொண்டிருந்த நெருப்பில் வாட்டினான். சற்று நேரத்தில் கிழங்கின் மணம் காற்றில் பரவியது. வாட்டியது போதும் என்று அந்த மணமும் பசியால் வாடிய அவனுடைய வயிறும் ஒருங்கே சொல்லிற்று. வாட்டுவதை நிறுத்தி விட்டு கிழங்கின் சூடு போக அதை மெல்ல ஊதி இளஞ் சூட்டுடன் அதைச் சுவைக்க ஆரம்பித்தான். ருசியில்லாத உணவாக இருந்தாலும் பசியால் இருந்த அவனுக்கு அது தேவாமிர்தம் போலிருந்தது.

அப்போது, திடீரென்று காய்ந்து உதிர்ந்த இலைகளின் மேல் "சரக்...சரக் " என்று காலடி சத்தம் கேட்டது. கிழங்கை ருசித்துக்கொண்டிருந்த சம்யுக்தன், ஒரு கணம் சாப்பிடுவதை நிறுத்தி காதுகளை கூர்மையாக்கி உற்று கேட்டபோது அவ்வோசை நின்று விட்டது. சம்யுக்தன் மீண்டும் ருசிக்கத் தொடங்கிய போது, காலடிச் சத்தம் திரும்பவும் அவன் காதுகளில் விழுந்தது. சத்தம் வந்த திசையை திரும்பி பார்த்தபோது அந்த காலடி ஓசை சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது.

சம்யுக்தன் தன் வாளை கையிலெடுத்து எச்சரிக்கையுடன் ஓசை வந்த திசையை நோக்கி சென்றான். அப்படி செல்லும் போது ஒரு மரத்தின் பின்னால் ஒருவன் ஒளிந்து கொண்டிருப்பது புலப்பட்டது. சம்யுக்தன், மேலும் யாராவது இருக்கிறார்களா என்று நோட்டம் விட்டவாறே ஒளிந்து கொண்டிருப்பவனுக்கு தன் காலடி ஓசை கேட்காதவண்ணம் மெதுவாக சென்றான். அப்போது, சம்யுக்தனின் கைகள் ஒரு செடியில் உரசி ஏற்பட்ட சலசலப்பைக் கேட்டதும் ஒளிந்திருந்தவன் ஓடத் தயாரானான். அப்போது அவன் மேல் பாய்ந்து அவனைக் கீழே தள்ளி வாளை ஓங்கிய சம்யுக்தன் திடுக்கிட்டான்.

கீழே படுத்திருந்த பார்த்திபன், "சம்யுக்தா, உனக்கு உதவி செய்ததற்கு நல்ல கைம்மாறு செய்யத் துணிந்தாய். ஓங்கிய வாளை ஏன் நிறுத்தி விட்டாய். என் உயிரை எடுத்து உன்னிடம் இருந்து விடுதலை தா. சொர்க்கத்திலாவது நான் சந்தோசமாக இருப்பேன். அங்கே ரம்பை, ஊர்வசி, மேனகை நடனம் ஆடுவார்களாம். அதைப் பார்த்து களிப்படைவேன்." என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.