(Reading time: 23 - 46 minutes)

ராஜகுரு அமைதியாக மன்னரை நோக்கி, "நீங்கள் சொல்வதைப் போல் ஆபத்து நெருங்கிக்கொண்டு தானிருக்கிறது. ஆனால் அது எந்த திசையில் நுழையப்போகிறது" என்று என்னால் யூகிக்க முடியவில்லை என்றார்

"போர் வரப்போகிறதா?" 

ராஜகுரு ஒரு சிறு புன்னகையோடு, "போர் வருவதென்றால், இப்படி ஒற்றர்களை அனுப்பி வேவு பார்க்கச் சொல்ல மாட்டார்கள். இதில் வேறு ஏதோ சூழ்ச்சி இருக்கின்றது. அதுவும் நம் கண் முன்னாலே தான் இருக்கிறது. ஆனாலும் நம் கைகளுக்கு அகப்படாமல் நழுவிக்கொண்டே செல்கிறது" என்றார்.

"இப்போது நாம் என்ன செய்வது?"

"எதற்கும் முன்னெச்செரிக்கையாக எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். காட்டுப் பகுதியில் தான் ஓலையை பரிமாறிக்கொள்வதாக அப்பெண்மணி கூறினாள் அல்லவா? அதனால் காட்டுப் பகுதியையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். வெளியிலிருந்து எவ்வித ஆபத்தும் வரவில்லை என்றால், ஆபத்து நம் நாட்டினுள் எப்போதோ வந்து விட்டது என்று அர்த்தம். அதைக் கண்டுபிடித்து அழித்து விட வேண்டும். அதன் பிறகு நாகவனத்திற்கு நம் வீரனை ஒற்றனாக அனுப்ப வேண்டும். அவன் வீரனாக மட்டும் இல்லாமல் ஆபத்து என்றால் அதிலிருந்து தப்பிக்கும் சாதுர்யம் மிக்கவனாகவும் கூர்மையான அறிவு உடையவனாகவும் இருக்க வேண்டும். இம்முறை ஒற்றர்கள் விசயத்தில் தோற்கக் கூடாது." என்று ராஜகுரு கூறினார்.

ம்யுக்தனின் குதிரை வைத்தியரின் வீட்டை அடைந்தது. குதிரையிலிருந்து இறங்கிய சம்யுக்தனை அவ்விடத்தின் குளுமை பரவசத்துடன் அணைத்தது. ஓய்வேயில்லாமல் ஓடிக்கொண்டிருந்த சம்யுக்தனுக்கு சற்று இளைப்பாறவேண்டும் என்ற ஆசையை அவ்விடம் தூண்டியது. வைத்தியரின் வீடு ஒரு சொர்க்க பூமியாய் தோன்றியது.

மரங்கள் வெயிலை மறைத்துக்கொண்டு நிழலை அங்கு தந்து கொண்டிருந்தன. கற்களால் போடப்பட்ட பாதையில் இருபுறமும் மூலிகைச்செடிகளும் மலர்ச்செடிகளும் நிறைந்து இருந்தன. மூலிகை வாசமும் மலர்களின் வாசமும் ஒன்றாகக் கலந்து சம்யுக்தனின் உடலுக்கும் மனதுக்கும் ஒரு புத்துணர்ச்சியை அளித்தது. குளிர்ச்சியான காற்று அவனை முத்தமிட்டு அவன் முகத்தில் வழிந்த வியர்வையை மெல்லத் துடைத்தது. மரம் செடிகளின் நடுவே ஒரு பெரிய காளான் போன்ற தோற்றத்துடன் வைத்தியரின் வீடு இருந்தது.

சம்யுக்தன் அந்த வீட்டினுள் நுழைய முற்பட்டபோது, "யாரது?" என்று ஒரு குரல் அவனைத் தடுத்தது. சம்யுக்தன் திரும்பிப் பார்த்தான். வைத்தியர் மூலிகை நிறைந்த மூங்கில் கூடையுடன் வந்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் சம்யுக்தன் வணங்கினான். "ஓ, சம்யுக்தனா! வீட்டில் அனைவரும் நலமா?" என்று விசாரித்துக்கொண்டே குறுகிய வாசலின் வழியே வீட்டிற்குள் சென்றார். சம்யுக்தனும் "எல்லோரும் நலமே" என்று பதிலுரைத்தவாறே அவரைப் பின்தொடர்ந்து வீட்டினுள் சென்றான்.

"என் நண்பனின் நிலை இப்போது எப்படி இருக்கிறது?" என்று சம்யுக்தன் கேட்டான். வைத்தியரிடம் ஒரு சிறு அமைதி நிலவியது. "என்ன வைத்தியரே, அமைதியாக இருக்கிறீர்கள். அவன் உயிருக்கு ஏதாவது..." என்று படபடப்போடு வார்த்தையை இழுக்கும்போது வைத்தியர், "உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் அவன் நினைவிழந்து தான் இருக்கிறான். அவன் நினைவு திரும்ப சில நாட்கள் ஆகலாம்." என்று கூறிக்கொண்டே அந்த வீட்டின் நடுவே கட்டப்பட்டிருந்த மெலிதான திரையை விலக்கினார்.

அங்கே சம்யுக்தனின் நண்பன் நினைவிழந்து படுத்திருந்தான். சம்யுக்தன் ஒரு வித படபடப்போடு அவனருகில் சென்று கவலைதோய்ந்த முகத்தோடு அவனைப் பார்த்தான். வைத்தியர் அவனுடைய தோள்பட்டையில் ஏற்பட்டிருந்த காயத்தைச் சுட்டிக் காட்டி, "ஒரு பிரளயத்திலிருந்து தப்பி வந்திருக்கிறான் என்று நினைக்கிறேன். அவன் உள்ளத்தில் இருக்கும் பயம் தான் அவன் நினைவை செயல் இழக்க வைத்திருக்கிறது. விரைவில் மீண்டு வருவான் என்று நம்பிக்கை வைப்போம்" என்றார்.

சம்யுக்தன் எதுவும் கூறாமல் தன் நண்பனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். தன்னால் தானே இந்நிலைக்கு இவன் ஆளானான் என்று குற்ற உணர்ச்சியில் சம்யுக்தனின் நெஞ்சு குறுகுறுத்தது. அதற்கு மேல் அங்கே இருக்க முடியாமல் வைத்தியரிடம் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.

ம்யுக்தனின் குதிரை காட்டுப்பகுதியை நோக்கி விரைந்துகொண்டிருந்தது.

'ஒரு நண்பன் இப்படி நினைவில்லாமல் இருக்கிறான். காட்டில் காணாமல் போன ஏனைய நண்பர்கள் கதி என்ன ஆனதோ! அவர்களுக்கும் இதே கதி தானா, அல்லது இதை விட மோசமான நிலையில் அவர்கள் இருக்கிறார்களா. அவர்களுக்கு எதுவும் ஆகி இருக்கக்கூடாது. அவர்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்ள நானே காரணமாகி விட்டேனே. அவர்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டியது என் பொறுப்பு தான்' என்று எண்ணியவாறே காட்டுப் பகுதிக்குள் நுழைந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.