(Reading time: 23 - 46 minutes)

தொடர்கதை - சாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 08 - சிவாஜிதாசன்

Samrat Samyukthan

அத்தியாயம் 1.8 : ஆபத்து வலையில் சம்யுக்தன்

மாலை நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. சூரியனின் வெப்பம் மெல்லத் தணிய ஆரம்பித்தது.

சம்யுக்தனின் தங்கை, சகுந்தலை, தன் அழகிற்கு மேலும் அழகு சேர்க்க அலங்காரம் செய்து கொண்டிருந்தாள். தன்னுடைய நீண்ட கூந்தலை பின்னலிட்டுக்கொண்டே, இதழ்களில் காதல் ரசம் சொட்டும் கானம் ஒன்றைப் பாடினாள். பின்னி முடித்தவுடன் ஒரு வெற்றிக் களிப்பை முகத்தில் காட்டிவிட்டு பின்னலை பின்னால் இட்டாள். அந்த பின்னல் இரு நாகங்கள் பின்னிப் பிணைந்து உறவாடிக் கொண்டிருப்பது போல் இருந்தது. அலங்காரம் முடிந்ததும் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து, ஒரு வெட்கம் கலந்த புன்னகையை வீசினாள்.

அப்போது சம்யுக்தனின் தந்தை தேவராஜன் வீட்டினுள் நுழைந்தார். அலங்காரம் முடிந்த பின்னும் கண்ணாடியில் தன் அழகை ரசித்துக்கொண்டிருந்த சகுந்தலை, கண்ணாடியில் தன் தந்தையின் உருவம் தெரிந்ததும், கனவில் மிதந்திருந்த அவள் கனவைக் கலைத்து எழுந்து நின்றாள்.

மந்திரி தேவராஜன் தன் கோபத்தை கண்களில் காட்டியபடியே "உன் அண்ணன் எங்கே?" என்று கேட்டார். தன் தந்தையின் செல்லப்பிள்ளையான சகுந்தலை அவர் கோபமாக இருப்பது தெரிந்தும் சிறு புன்னகையை வீசியபடியே, "அண்ணன் இன்னும் வரவில்லை தந்தையே" என்றாள்.

தேவராஜனின் குரலைக் கேட்டதும் சம்யுக்தனின் தாயார் புஷ்பவதி ஒரு சிறிய குவளையில் தண்ணீர் கொண்டு வந்து தேவராஜனிடம் கொடுத்தார். உஷ்ணத்திலிருந்த தேவராஜன் மறுமொழி பேசாமல் அக்குவளையை வாங்கி நீரைப் பருகினார். ஆயினும் உஷ்ணம் அடங்கியபாடில்லை.

தேவராஜன் குவளையை புஷ்பவதியிடம் கொடுத்தவாறே, "உன் பிள்ளை என்ன காரியம் செய்திருக்கிறான் தெரியுமா?" என்று கூறிக்கொண்டே ஓர் இருக்கையில் அமர்ந்தார்.

புஷ்பவதி, "நம் பிள்ளை என்று சொல்லுங்கள். அவன் ஏதேனும் நல்ல விஷயம் செய்தால் என் பிள்ளை! என் பிள்ளை! என்று மார் தட்டிக் கொள்கிறீர்கள். ஏதேனும் தவறு புரிந்து விட்டால் மட்டும் உன் பிள்ளை என்று கூறி எல்லாவற்றிற்கும் நான் தான் காரணம் என்பது போல சொல்கிறீர்கள்" என்று புன்முறுவலுடன் சொன்னார்.

அதைக் கேட்ட சகுந்தலை, "அப்படிச் சொல்லுங்கள் தாயே!" என்று கூறினாள்.

தேவராஜன் இருவரையும் கோபம் கொப்பளிக்க பார்த்தார். "நீங்கள் விதண்டாவாதம் செய்வது போல் அவன் செய்தது சிறு தவறு ஒன்றும் இல்லை. அவன் உயிரே பறி போயிருக்கும்" என்று கோபத்தையும் பாசத்தையும் கலந்து வெளிப்படுத்தினார்.

அதைக் கேட்ட புஷ்பவதி அதிர்ச்சியில் கையிலிருந்த குவளையை நழுவ விட்டார். மேகத்தைக் கிழித்து மழை பூமிக்கு வருவது போல் அவர் கண்களிருந்து கண்ணீர் கன்னத்தில் வழிந்தது. சகுந்தலை பேய் அறைந்தாற்போல் உணர்வற்று அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தாள். மூவருக்குள்ளும் பேச்சு வார்த்தை ஒரு கணம் நின்று போனது. அங்கு ஆழ்ந்த நிசப்தம் நிலவியது. உதடுகளின் சம்பாஷணை நின்றுபோய் உள்ளங்களின் சம்பாஷணை கதறி அழ ஆரம்பித்தது. புஷ்பவதி வாயில் வார்த்தை வராமல் தவித்தார். மேற்கொண்டு சம்யுக்தன் என்ன செய்தானென்று கேட்க அவர் விரும்பவில்லை. தேவராஜன் சொன்னதே அவர் இதயத்தை குத்தீட்டியால் குத்தியது போல் வலி உண்டாயிற்று. அவருக்கு, கண்களில் காட்சிகள் மங்கி தலை சுற்றியது. பூமியே சுற்றுவது போலிருந்தது.

சகுந்தலை புஷ்பவதியின் தோளில் கைவைத்து "என்ன ஆயிற்று தாயே" என்று கேட்கும் போது தான், அவர் சுயநினைவுக்கு வந்தார்.

சகுந்தலை, "அண்ணன் அப்படி என்ன செய்தார்?" என்று தந்தையிடம் வினவினாள்.

தேவராஜன் புஷ்பவதியின் முகத்தைப் பார்த்து, மேற்கொண்டு ஏதேனும் சொன்னால் அவர் மேலும் கலக்கம் அடைந்து மனம் உடைந்து போவார் என்று நினைத்து, "இதை அப்படியே விட்டுவிடுவோம்" என்று கூறினார்.

"சம்யுக்தன் எப்போது வருவான்?"

"தெரியவில்லை தந்தையே, ஆனால் வரும் நேரம் தான்"

"சிறிது நேரம் என்னைத் தனியாக விடுங்கள்" என்று தேவராஜன் கூறினார்.

சகுந்தலை தன தாயாரின் தோள்களைப் பற்றி அங்கிருந்து இட்டுச் சென்றாள். புஷ்பவதி ஒரு நடைப் பிணம் போல் அவளுடன் சென்றார். இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து துளி கூட மீளவில்லை.

தேவராஜன், தனிமையில் வெறுமையாய் உட்கார்ந்து யோசித்தார். அரசசபையில் மற்ற அமைச்சர்கள் சம்யுக்தனை பற்றி ஏளனமாகக் கூறியது அவர் நினைவில் சூறாவளியாய் சுழன்றடித்தது.

"உன் பிள்ளை அதிகபிரசங்கித்தனமான காரியத்தில் ஈடுபட்டு எல்லோருக்கும் தலைவலியை     உண்டு பண்ணிவிட்டான்" என்று ஒரு அமைச்சர் கூறினார்.

சம்யுக்தன் இப்படி அறிவின்மையாக நடந்துகொள்வான் என்று நான் எதிர்பார்க்கவில்லை" என்று இன்னொரு அமைச்சர் கூறினார்.

"சம்யுக்தனால் அவன் நண்பர்களையும் காணவில்லை. அவர்கள் கதி என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை"

இப்படி ஒவ்வொருவரும் தன மகனைக் குறை கூறியதைக் கேட்ட தேவராஜன் உடைந்து போனார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.