(Reading time: 23 - 46 minutes)

"ஆகாய கங்கையிலே அல்லிப் பெண் நனைந்தாட

காதலன் கவி பாட

கண்களில் காதல் பிணைந்தாட

காற்றிலே பறந்தோட

காதல் உலகத்தில் இருவரும் உறவாட

விரைந்து வா என் தலைவா ! "

என்று கானம் பாடிக்கொண்டே சம்யுக்தனின் அருகில் வந்து அவன் கையைப்பிடித்து அவனுடன் காதல் வானிலே பறந்தாள். இருவரும் காதல் மயக்கத்தில் உறவாடினார்கள்.

தோட்டத்திற்கு பக்கமாக இருந்த வாசற் கதவில் இடித்த பின்பு தான் சம்யுக்தன் கனவுலகில் இருந்து நிஜ உலகிற்கு வந்தான்.

தோட்டத்தில் பூங்கொடி ரோஜாமலர்களைப் பறித்துக்கொண்டிருந்தாள். மலரே மலரைப் பறிப்பது போலிருந்தது அக்காட்சி. மற்றவர்கள் பூக்களைப் பறித்தால் செடியைத் துன்புறுத்திப் பிடிவாதமாகப் பூக்களைத் தங்கள் வசப்படுத்துவது போலிருக்கும். ஆனால் பூங்கொடியின் மென்மையான விரல்கள் பூக்களின் மேல் பட்டவுடன் செடிகளே அப் பூக்களைப் பரிசாக அளிக்கும். இறைவன் பெண்மைக்கு மட்டும் மென்மை தந்து அவளுக்குத் தாய்மையும் கொடுத்து இவ்வுலகில் படைத்திருப்பது அதிசயத்திலும் அதிசயம்.

சம்யுக்தன் பூங்கொடி மலர்களைப் பறிக்கும் அழகைப் பார்த்துத் தன்னை மறந்து நின்று கொண்டிருந்தான். பூங்கொடியின் அழகும் மனமும் சம்யுக்தனை எப்போதோ கவர்ந்து விட்டது. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவளிடம் பழகுவது ஆண் மகனுக்கே உண்டான ஒரு சிறப்பு.

சம்யுக்தனின் கால்கள் பூங்கொடியின் அருகில் சென்றன. பூக்களின் நறுமணத்திற்கு இடையே அவனின் வாசமும் கலந்து வந்து பூங்கொடியின் இதயத்தில், அருகில் தன் காதலன் இருக்கிறான் என்பதை உணர்த்தியது. தன் கண்களால் பெண்மைக்குரிய நாணத்தோடு அவனை நோக்கினாள். விழிகள் நான்கும் சந்தித்தன. மௌனங்கள் பேசின. இதயங்கள் ஒன்று கூடின. உள்ளங்கள் உறவாடின. சம்யுக்தன் பூங்கொடியை அணைத்தான்.

அவன் அணைப்பில் மகிழ்ந்த அவளுடைய முகம் வாடிப்போன மலர் போல் ஆனது. சம்யுக்தனின் இதயம் வேகமாக துடித்துக்கொண்டிருந்ததே அதற்கு காரணம். அவன் ஏதோ ஆபத்தின் வாசலில் நுழைந்து கொண்டிருப்பதை அந்த இதயத்தின் ஒலி கூறியதைப் போலிருந்தது. போர் துவங்கும் முன் முழங்கும் போர் முரசைப் போல அவள் காதுகளில் அந்த இதயத் துடிப்பு ஒலித்துக்கொண்டிருந்தது. சம்யுக்தனுக்கோ முட்டையிலிருந்து வெளிவந்த கோழிக் குஞ்சை தாய்க்கோழி தன் இறகுகளால் அணைத்து தன் உடற் சூட்டில் அதைப் பாதுகாப்பது போல் அவளுடைய அரவணைப்பு இருந்தது.

பூங்கொடி கவலையோடு அவன் முகத்தைப் பார்த்தாள். அதனை உணர்ந்த சம்யுக்தன் அவள் எண்ணத்தை ஆமோதிப்பதாய் சிறு புன்னகையை இதழில் தவழ விட்டு தலையசைத்தான்.

"அரண்மனையில் நடந்த விசயத்தைக் கேள்விப்பட்டிருப்பாய் என்று எண்ணுகின்றேன்."

அவள் "ஆமாம் " என்று கூறிக்கொண்டே ஒரு மலரைப் பறித்தாள்.

"மற்றவர்கள் போல நீயும் என் மேல் கோபப்படுகிறாயா இல்லை வருத்தப்படுகிறாயா."

"கோபமோ வருத்தமோ நான் கொண்டால் அது தங்கள் மேல் நம்பிக்கை இல்லாதது போல் ஆகி விடுமே. நான் எப்படி அவ்வாறு நினைப்பேன்."

"நீயாவது புரிந்து கொண்டாயே. அதுவே மிக்க மகிழ்ச்சி."

"காதலர்களுக்குள் புரிதல் அவசியம் தானே" என்று கூறி தன் பவள இதழ்களால் சிரித்தாள்.

கவலையில் இருந்த சம்யுக்தனின் மனம் பூங்கொடியின் இதமான சொற்களால் சற்று குளிர்ந்தது.

சிறிது நேரம் இருவரின் நடுவே மௌனக் காற்று வீசிக்கொண்டிருந்தது.

பூங்கொடி சம்யுக்தனைப் பார்த்துக்கொண்டே,"அத்தை மாமாவை சந்தித்தீர்களா?" என்று கேட்டாள்.

"இந்நேரம் என் வீட்டிற்கு எல்லா விசயமும் சென்றடைந்திருக்கும். என் தந்தை என் மேல் பயங்கர சினத்துடன் இருப்பார். தாயார் என் மேல் உள்ள பாசத்தால் அழுதுகொண்டிருப்பார். இப்போது நான் அங்கு சென்றால், இன்று நான் வெளியில் செல்ல என் தாய் அனுமதிக்க மாட்டார். இன்று எனக்கு முக்கியமான பணி ஒன்றை இருக்கிறது. அதை முடிக்கவேண்டும்."

"என்ன அது?" என்று பூங்கொடி கேட்டாள்.

"இன்று காட்டுப் பகுதிக்குள் காவல் புரியப்போகிறேன்."

பூங்கொடி, "காட்டுப் பகுதிக்கா?" என்று சிறு அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்து கேட்டாள்.

"ஆம்" என்று கூறிக்கொண்டே கையில் வைத்திருந்த சிறு கத்தியை வைத்து தோட்டத்து மண் தரையில் போர்க்களம் போல் ஒரு காட்சியை வரைந்தான். அதைச் சுற்றி மரங்களை வரைந்தான், அதில் ஒரு மரம் அலங்கோலமாகவும் வித்தியாசமாகவும் புரிந்துகொள்ள முடியாதபடியாகவும் இருந்தது.

பூங்கொடி அவன் செய்கையை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஏன் இப்படி செய்கிறான் என்று மனதில் ஒரு முறை நினைத்தும் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.