(Reading time: 23 - 46 minutes)

"அதே தான். என் தாய் தந்தையார் இன்னும் அவனை  சிறுபிள்ளையாகவே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். எனக்கு என் சகோதரனைப் பற்றித் தெரியும். அவனுக்கு எந்த ஆபத்தும் நேராது."

"பெற்றவர்கள் மனது பித்தல்லவா. அதனால் தான் பாசத்தில் பயந்திருப்பார்கள்"

"ஓ...சற்று முன் உன் முகத்தில் பயரேகைகள் படர்ந்திருந்தனவே. அது எதற்கு?" 

"நானும் முதலில் தைரியமாகத் தான் இருந்தேன். ஆனால் உன் அண்ணன் ஓர் ஓவியத்தைத் தீட்டி என் மனதில் பய அலைகளை ஏற்படுத்திவிட்டார்."

"ஓவியமா?"

"ஆம். நீயே பார்" என்று கூறி பூங்கொடி முன்னே செல்ல சகுந்தலையும் அவளைப் பின்தொடர்ந்தாள்.

சகுந்தலை சம்யுக்தன் வரைந்திருந்த ஓவியத்தைப் பார்த்தாள். "இதைக் கண்டா நீ பயப்படுகிறாய்?"

பூங்கொடி "ஆமாம் " என்று தலையசைத்தாள்.

"இதில் என்ன இருக்கிறது. இது ஒரு சாதாரணமான ஓவியம் தானே?"

"இல்லை, சகுந்தலை. இதில் ஒரு விஷயம் நம் எண்ணங்களுக்கு அகப்படாமல் மறைந்திருக்கிறது"

"எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை. நீ பயந்திருக்கிறாய். அதனால் தான் மனதில் ஏதேதோ கற்பனைகள் செய்து கொண்டு புலம்புகிறாய்."

தான் சொல்ல வந்ததை புரிந்துகொள்ளாத சகுந்தலையிடம் மேலும் இதைப் பற்றிப் பேச பூங்கொடிக்கு மனமில்லை. அதனால் அமைதியாக இருந்தாள்.

"சரி, வா. நாம் புறப்படலாம்" என்று சகுந்தலை பூங்கொடியிடம் கூறினாள்.

"எங்கே அழைக்கிறாய்?"

"எல்லாம் நாம் வழக்கமாக செல்லும் இடத்திற்குத் தான்" என்று கூறி பூங்கொடியின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.

ருக்கு வெளிப்புறம் ஒரு பாழடைந்த மண்டபம். அங்கே மர்ம மனிதன் யாரையோ எதிர் பார்த்துக் காத்திருந்தான். அவன் ஒரு பட படப்போடு அந்த பாழடைந்த மண்டபத்தை நோட்டமிட்டவாறே அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். மண்டபத்தினுள் இருள் கௌவ்விக் கொண்டிருந்தது. வௌவ்வால் கூட்டம் ஆங்காங்கே மண்டபக் கூரையில் தொங்கிக்கொண்டிருந்தன.

சம்யுக்தனுடன் ஆற்றங்கரையிலும் மோர்க்காரியின் வீட்டின் அருகிலும் மோதியது அவன் மனக் கண்ணில் ஓடிக்கொண்டிருந்தது காட்டுப் பகுதியில் சம்யுக்தன் தன்னை யாரெனக் கண்டுபிடித்தது அவன் கனவிலும் நினைத்துப் பார்த்திராத ஒன்று. தான் அறிவின்மையாக நடந்துகொண்டதை எண்ணித் தன்னைத்தானே குறைபட்டுக் கொண்டான்.

அப்போது சிலர் அந்த மண்டபத்தின் அருகில் எச்சரிக்கையாகப் பதுங்கிப் பதுங்கி வந்தனர்.

அவர்களைக் கண்டதும் மர்ம மனிதன், "நீங்கள் இங்கு வருவதை யாரும் பார்க்கவில்லையே?" என்று கேட்டான்.

வந்தவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் "இல்லை" என்று பதிலளித்தனர்.

"அரண்மனைக்கு சம்யுக்தன் வந்தானா?"

ஒருவன், "இல்லை, நான் கண்கொத்திப் பாம்பாய் கவனித்துக் கொண்டிருந்தேன். அவன் வரவில்லை" என்று கூறினான்.

"நல்லது. அரண்மனையில் நம்மைப் பற்றி ஏதாவது சல சலப்புகள், வதந்திகள் கசிந்தனவா?"

"இல்லை. வழக்கம் போல் எல்லோரும் அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். நம்மைப் பற்றி எவ்வித சந்தேகமும் யாருக்கும் எழவில்லை."

"இன்று இளவரசன் எந்தப் பகுதியில் காவல் புரிகிறான்?"

"தெற்குப் பகுதியில்"

"இன்று சம்யுக்தனைக் கொன்று விட்டால் தான் நாம் நினைத்தது நடக்கும். அவன் ஒருவனால் நம் திட்டம் பாதி அழிந்தே விட்டது." என்று கூறி, வந்தவர்களில் ஒருவனைப் பார்த்து "நீ இளவரசன் காவல் புரியும் இடத்திகுச் சென்று அவனைக் கண்காணித்துக்கொள். நாங்கள் அனைவரும் சம்யுக்தன் காவல் புரியும் இடத்திற்குச் சென்று அவனைத் தீர்த்துக் கட்டுகிறோம். எங்களுக்கு ஏதும் நேர்ந்தாலும் நம் திட்டத்தைச் செயல்படுத்த நீயிருப்பாய்." என்று கூறினான்.

அதைக் கேட்ட இன்னொருவன், "ஒரு சிறு பயலுக்கு இவ்வளவு முக்கியத்துவமா? அவனை எல்லாம் திட்டம் தீட்டாமலே கொன்று விடலாமே?" என்று கேட்டான்.

மறுப்பாய் தலை அசைத்து, "நீ சொல்வது தவறு. என் உணர்ச்சிகளில் விளையாடி என்னைச் சுலபமாக கண்டுபிடித்து விட்டான். அவன் பலசாலி மட்டுமல்ல. ஒரு சிறந்த சாணக்கியனும் கூட." என்று மர்ம மனிதன் பதிலுரைத்தான்.

அப்போது குதிரையின் சத்தம் கேட்டு அனைவரும் திடுக்கிட்டனர். "நீங்கள் அனைவரும் உள்ளே சென்று மறைந்து கொள்ளுங்கள். நான் வருவது யாரென்று பார்க்கிறேன்." என்று மர்ம மனிதன் கூறினான். உடனே அனைவரும் விரைவாக மண்டபத்தினுள் சென்று மறைந்து கொண்டனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.