(Reading time: 23 - 46 minutes)

மாலைநேரத் தென்றல் மலர்களின் வாசனையோடு தவழ்ந்த கொண்டிருந்தது. சம்யுக்தனும் பார்த்திபனும் பூங்கொடியின் வீட்டை நெருங்கிக்கொண்டிருந்தனர்.

பார்த்திபன், "சம்யுக்தா!...." என்று ஏதோ கூற வருவது போல் அழைத்துவிட்டு பின் அமைதியானான். சம்யுக்தன் என்ன என்பது போல் அவனைப் பார்த்தான். பார்த்திபனின் முகத்தில் ஒரு வித பயரேகை படர்ந்திருப்பது தெரிந்தது.

"என்ன ஆயிற்று பார்த்திபா? பயப்படுகிறாயா?" என்று சம்யுக்தன் உதட்டில் ஒரு சிறு புன்னகையை உதிர்த்தபடியே கேட்டான்.

"நான் என் தாயைப் பார்த்து விட்டு வரட்டுமா?"

"எதற்கு?"

"இல்லை, ஏதோ ஆபத்து நேரப்போவதுபோல் படபடப்பாக உள்ளது"

"முட்டாள்தனமாக பேசாதே. எந்த ஆபத்தாக இருந்தாலும் முதலில் என்னைச் சந்தித்து விட்டுத் தான் உன்னிடம் நெருங்க முடியும்."

பார்த்திபன் சற்று யோசித்துவிட்டு, "சம்யுக்தா, உன்னை சந்தித்து விட்டால்...? பிறகு என்ன ஆகும்?"

"ஆபத்து உன்னிடம் வந்து விடும்"

அதைக்கேட்ட பார்த்திபன் அதிர்ச்சியில், "ஒரு நல்ல காரியம் செய்யப்போகிறோம். இப்படியா பேசுவது?"

சம்யுக்தன் ஏளனம் கலந்த குரலில், "முதலில் யார் ஆரம்பித்தது?" என்று கேட்டான்.

"நான் அப்படித்தான் ஆரம்பிப்பேன் சம்யுக்தா. நீ தான் தைரியம் சொல்லவேண்டும். அதை விடுத்து, ஆபத்து நேராக என்னைச் சந்திக்கும் என்று பயமுறுத்துகிறாயே. ஆனால் ஒன்று. சொல்லட்டுமா, சம்யுக்தா?"

"என்ன?"

"உன்னைவிட பெரிய ஆபத்து இனி வரப்போவது இல்லை"

அதைக்கேட்டு இருவரும் நகைத்தார்கள்.

பூங்கொடியின் வீடு வந்தது.

சம்யுக்தன், "நீ இங்கேயே இரு. நான் பூங்கொடியிடம் சற்று பேசிவிட்டு வருகிறேன்" என்று பார்த்திபனிடம் கூறினான்.

பார்த்திபன், "இன்று மிகப்பெரிய பிரளயமே நிகழப்போகிறது. அவசியம் உனக்கு இந்த காதல் லீலை தேவையா?"

"நான் செல்வது ஒரு முக்கியமான விசயத்தைப் பற்றிக் கூற" என்று கூறிவிட்டு சம்யுக்தன் பூங்கொடியின் வீட்டினுள் சென்றான்.

பார்த்திபன் தன் குதிரையிடம் "எனக்கு ஒரு காதலி இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா?" என்று கேட்டான். குதிரை மெல்ல முகத்தைத் தூக்கிக் கனைத்தது. உடனே பார்த்திபன், "புரிகிறது, புரிகிறது. உனக்கும் காதலி இல்லையே என்ற ஏக்கம். ஞாபகப்படுத்தியதற்கு மன்னிக்கவும்."

சம்யுக்தன் பூங்கொடியின் வீட்டினுள் சென்று பார்த்தான். வீட்டில் யாரும் இல்லை. "பூங்கொடி! பூங்கொடி!" என்று அழைத்தான். அவன் உதடுகள் உதிர்த்த வார்த்தைகள் வீட்டின் எல்லா அறைகளிலும் சென்று பார்த்து, அவள் இல்லையென்று மௌனத்தோடு திரும்பின. அப்போது, அவ்வீட்டுத் தோட்டத்திலிருந்து ஒரு கானம் கேட்டது. குயிலின் குரல் தேனோடு கலந்து காற்றிலே மிதந்து அவன் காதுகளில் நுழைந்தது. சம்யுக்தன் வசியப்பட்டவன் போல் அக்குரலை நோக்கி சென்றான்.

அக்கானம் கேட்க கேட்க இன்னோர் உலகத்தில் அவன் புகுந்தான். அங்கு புதிதாய்ப் பிறந்தான். அவ்வுலகத்தில் பகலில்லாமல் இரவு மட்டுமே ஆட்சி செய்து கொண்டு இருந்தது. வெண்ணிலா பிரகாசமாக தன் ஒளிக்கதிர்களை வீசியது. அந்த ஒளிக்கதிர்கள் பூக்களின் மேலிருந்த பனித்துளிகளில் பட்டு அந்த பனித்துளிகள் வைரங்கள் போல் ஜொலித்தன. மிதமான பனி அவன் உடலை நனைத்தது; உள்ளம் குளிர்ந்து; காதல் எண்ணங்கள் கவிதை மழை பொழிந்தன. சம்யுக்தனைத் தேடி ஒரு பெண் தூரத்தில் வந்து கொண்டிருந்தாள். அவள் நடந்து வரவில்லை. வான் தேவதை போல் பறந்து வந்தாள். அவளுடைய கூந்தல் கார்மேகத்தையும் பொறாமை கொள்ளச் செய்தன. அவளுடைய அழகிய முகத்தை ஒப்பிடும்போது நிலவின் அழகு ஒரு படி கீழே இருந்தது. அதைப் பார்த்த நிலவு, தன் ஒளியை மங்கச் செய்தது. ஆயினும் அந்த அழகு முகத்தின் ஒளியை மறைக்க முடியவில்லை. பூவின் இதழ்களில் ரீங்கார இன்னிசையோடு தேனைப் பருகிய வண்டுகள், குவளை மலர்களோ என்று எண்ணி தேனைப் பருக அவள் விழிகளில் வந்து மோதி ஏமாந்து சென்றன. அவள் விழிகளுக்கு ஏற்றாற்போல் புருவம் அமையவில்லையே என்று வருந்திய பிரம்மன் வானவில்லைப் பார்த்தான்; புன்னகைத்தான்; அந்த வானவில்லைப் பார்த்துக்கொண்டே அவளது புருவங்களைச் செதுக்கினான்; கரு நிற   மையில் தூரிகையை நனைத்து அப்புருவத்திற்கு வண்ணம் தீட்டினான். அவளுடைய இதழ்கள் ரோஜா மலரின் இதழைக் கொண்டு செதுக்கியது போலிருந்தது. அவளுடைய புன்னகை, இந்திரனையே சொக்கிப் போடும் அளவுக்கு மயக்கம் கொண்டதாக இருந்தது. அவள் ஒரு கானம் பாடிக்கொண்டே சம்யுக்தனை நோக்கிப் பறந்து வந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.