(Reading time: 23 - 46 minutes)

பூபதி ஓடிவந்து, "அடப்பாவி, கீழே இறங்கு. இது என்னுடைய குதிரை. மறுபடியும் களவாடிச் செல்ல பார்க்கிறாயா?" என்றான். பார்த்திபன் தலையில் அடித்தபடியே கீழே இறங்கி தன் குதிரையில் ஏறினான்.

சம்யுக்தனும் பார்த்திபனும் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். பூங்கொடி, வாசலில் சாய்ந்தபடியே சம்யுக்தன் செல்வதைக் கவனித்துக் கொண்டிருந்தாள். சம்யுக்தன் அவள் கண் பார்வையிலிருந்து சிறிது சிறிதாக மங்கத் தொடங்கி பின்னர் மறைந்து போனான். ஆனாலும் பூங்கொடி அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

பூபதி பூங்கொடியின் கண்களைப் பார்த்துக்கொண்டே, "என்ன? அந்த திசையையே பார்த்துக் கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டான்.

பூங்கொடியிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

பூபதி, "அத்தை மாமா எங்கே?" என்று கேட்டான்.

அப்போதும் பூங்கொடியின் இதழ்கள் திறக்கவில்லை.

பூபதிக்கு கோபம் தலைக்கேறியது. இருந்தும் அதை மறைத்துக்கொண்டு, ஆடையில் மறைத்து வைத்திருந்த ரத்தினக் கற்கள் பதித்த பொன் வளையல்களை வெளியே எடுத்தான். "உனக்காக ஆசை ஆசையாய் நானே பொற்கொல்லனின் அருகில் உட்கார்ந்து உனக்கு ஏற்றாற்போல் வடிவமைத்துச் செய்யச் சொன்ன வளையல்கள். பிடித்திருக்கிறதா?" என்று அவள் கண் முன்னால் அந்த வளையல்களைக் காட்டினான்.

பூங்கொடி பூபதியை நோக்கினாள். புத்தி பேதலித்தவனை எப்படிப் பார்ப்பார்களோ அப்படி ஒரு பார்வை பார்த்தாள். அவனைப் பார்த்தபடியே, "தாய் தந்தை வெளியே சென்றிருக்கிறார்கள். அவர்கள் வந்த பிறகு நீங்கள் வாருங்கள். இப்பொழுது என்னைத் தனியாக விடுங்கள்" என்று கோபப்படாமல் சற்று சாந்தமாகவே கூறினாள்.

பூபதிக்கு என்னவோ போலானது. "சரி, நான் வருகிறேன். இந்த வளையல்களைப் பூஜை அறையில் வைத்து விட்டுப் போகிறேன்." என்று கூறி அவளிடமிருந்து பதிலை எதிர் பார்த்தான். ஆனால் அவள் ஒன்றும் கூறாமல் அமைதியைக் காத்தாள். பூபதி அவளை உற்று நோக்கியபடியே பூஜை அறையில் சென்று வளையல்களை வைத்து விட்டு அவளிடம் ஒன்றும் கூறாமல் குதிரையில் ஏறிப் புறப்பட்டான்.

பூங்கொடி உயிரற்ற சிலை போலவே வாசலில் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்தாள்.

குதிரையில் சென்று கொண்டிருந்த பூபதி, பூங்கொடியின் மனதில் எப்படி இடம் பிடிப்பது என்று சிந்தித்தவாறே சென்று கொண்டிருந்தான். நாட்டிற்கு மன்னனாகவே இருந்தாலும் தன் மனதில் குடிகொண்டிருக்கும் பெண்ணை அடையாவிட்டால் வாழும் வாழ்க்கையே நரகமாகி விடும். அந்த நரகத்திலிருந்து தப்பிக்க பூபதி வழி தேடிக் கொண்டிருந்தான். 'அவள் மனத்தைக் கவர வழி என்ன? அவள் மேல் இருக்கும் காதலை எப்படி அவளுக்குப் புரிய வைப்பது?' இது போன்ற கேள்விகள் அவனுள் சுழன்றடித்தன. வழி தெரியவில்லை; பாதை நீண்டு கொண்டே சென்றது. அவன் எண்ணங்கள் குதிரையின் வேகத்தையே விஞ்சின.

அவன் இதயம் "\'பூங்கொடி..பூங்கொடி...பூங்கொடி' என்று துடித்துக்கொண்டிருந்தது. திடீரென்று ஓர் எண்ணம் மின்னல் போல் அவன் மனதில் பளிச்சிட்டது. அவன் முகம் பிரகாசமடைந்தது. ஏதோ சாதித்து விட்டதைப் போல உற்சாகம் அவன் மனதில் கரைபுரண்டு ஓடியது. பாலைவன அனலில் தண்ணீரில்லாமல் தவித்தவன் குளிர்ந்த நீரைக் கண்டால் எவ்வாறு பூரிப்படைவானோ அப்படி ஒரு பூரிப்பு பூபதியின் உடலைத் தழுவியது. 'ஆம், இது தான் வழி. இதை விட ஒரு சிறந்த வழி கிடையாது' என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.

சம்யுக்தனை விட செல்வச் செழிப்பு தனக்கிருந்தும் பூங்கொடிக்கு சம்யுக்தன் மேல் காதல் வரக் காரணம் அவனுடைய வீரம் தான். நானும் அவனைப் போல் வீரமுடையவனாக மாறினால் பூங்கொடியின் மனதில் இடம் பிடிக்கலாம் அல்லவா? ஆம்...ஆம்..ஆம்..இது தான் சிறந்த வழி என்று மீண்டும் ஒரு முறை எண்ணிக் கொண்டான். இன்று சம்யுக்தன் காவல் புரியும் இடத்திற்கு சென்று தானும் காவல் புரிந்தால், பூங்கொடிக்கு தன் மேல் நல்ல அபிப்பிராயம் வரலாம் என்று எண்ணிக் கொண்டே குதிரையை வேகமாக விரட்டினான். அவர்கள் இன்று எங்கு காவல் புரிகிறார்கள் என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது என்று சிந்தித்தவாறே சென்று கொண்டிருந்தான்.

பூங்கொடியின் மனது அவள் உடலை விட்டுப் பிரிந்து சம்யுக்தனைத் தேடி அலைந்து கொண்டிருந்தது. அவள் இன்னும் சிலையாகவே நின்று கொண்டிருந்தாள். அப்போது ஒரு கை அவள் தோள்களை உலுக்கியபோது சட்டென்று நினைவுக்கு வந்தாள். திரும்பி யாரென்று பார்த்தபோது அங்கே சகுந்தலை நின்றிருந்தாள். 

"என்ன ஆயிற்று பூங்கொடி? நான் வந்தது கூட தெரியாமல் ஏன் இப்படி சுவரில் வரைந்த ஓவியம் போல் நின்று கொண்டிருக்கிறாய்?"

"எல்லாம் உன் உடன் பிறந்த சகோதரனைப் பற்றிய கவலை தான்"

"வீட்டிலும் சம்யுக்தனைப் பற்றித் தான் பேச்சு. இங்கேயும் அதே நிலை தானா" என்று கூறிக் கொண்டே பூங்கொடியின் வீட்டினுள் நுழைந்தாள்.

"அரண்மனையில் நடந்த விஷயம் தானே?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.