(Reading time: 23 - 46 minutes)

சம்யுக்தன் பூங்கொடியைப் பார்க்காமல் வரைந்த காட்சியைப் பார்த்துக் கொண்டே "இவனுக்குப் பித்துப் பிடித்து விட்டதா என்று எண்ணுகிறாயா பூங்கொடி" என்று கேட்டான்.

சம்யுக்தன் பேசியது எதுவும் காதில் நுழையாமல் பூங்கொடியின் மனதில் எண்ணங்கள் முட்டி மோதிக் கொண்டிருந்தன, அவள் மரம் போல் அசைவற்று நின்று கொண்டிருந்தாள்.

"நான் கேட்ட கேள்விக்கு பதில் இன்னும் வரவில்லையே" என்று சம்யுக்தன் மீண்டும் கேட்டான்.

தன் கட்டுப்பாட்டிற்குள் மீண்டும் நுழைந்த அவள், "என்ன சொன்னீர்கள் அத்தான்?" என்று பரிதாபமாகக் கேட்டாள்.

"சரியாகப் போயிற்று போ. நீ இவ்வுலகில் தான் இருக்கிறாயா, வானத்தில் பறந்து கொண்டிருக்கிறாயா" என்று கேட்டுக் கொண்டே தன் கழுத்தில் இருந்த முத்து மாலையைக் கழற்றி தோட்டத்துச் செடிகளின் மத்தியில் தூக்கி எறிந்தான். அம்முத்துமாலை ஒரு செடியின் மேல் விழுந்து தொங்கிக்கொண்டிருந்தது.

"ஏன் அதை வீசி எறிந்தீர்கள்?"

"கழுத்தை அறுத்துக் கொண்டிருந்தது, அதனால் தான்"

பூங்கொடி சம்யுக்தனின் கண்களை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சம்யுக்தன் அவளுடைய மலர் போன்ற கைகளை தன இரு கைகளால் அணைத்து, "நான் யாரிடமும் உதவி பெறும் நிலையில் இல்லை" என்றான்.

பார்த்திபன் பூங்கொடியின் வீட்டின் வெளியே நின்று கொண்டு, "போனவன் இன்னும் வரவில்லையே. ஒருவேளை படுத்துத் தூங்கிவிட்டானா. இவனை நம்பி வந்து இப்படித்தான்  நடுவழியில் அகப்பட்டுக் கொள்கிறேன்" என்று தன் மனக்குமுறல்களை புலம்பித் தள்ளிக் கொண்டிருந்தான்.

அப்போது தூரத்தில் ஒரு குதிரை மிதமான வேகத்துடன் வந்துகொண்டிருந்தது. பார்த்திபன், வருவது யாரென்று குதிரை வந்த திசையையே  பார்த்துக் கொண்டிருந்தான். குதிரை அவன் அருகில் வந்ததும் பார்த்திபனின் முகம் சிவந்து போனது. குதிரையிலிருந்த பூபதி பார்த்திபனை ஏளனமாகப் பார்த்தான்.

"என்ன பார்த்திபா, நாட்டுக்குக் காவல் புரிந்துகொண்டிருந்தாய். எப்போதிருந்து வீட்டிற்குக் காவல் புரிய ஆரம்பித்தாய்?"

"ஒரு நாள் உன் குதிரை உன்னைக் குப்புறத் தள்ளிவிட்டு ஓடியதல்லவா, அதைப் பார்த்ததிலிருந்து தான்."

பூபதி குதிரையிலிருந்து கீழே இறங்கியபடியே, "நான் கேட்டதற்கும் நீ சொல்வதற்கும் என்ன சம்பந்தம்."

"இதே கேள்வியைத்தான் நான் உன்னிடம் கேட்கிறேன். வீட்டின் வெளியே நின்றால் நான் வீட்டுக் காவல்காரனா? இதுவே நான் வீட்டின் உள்ளே இருந்தால், வீட்டின் முதலாளியாகி விடுவேனா?"

"நீ, வேறு வீட்டின் முன் நின்றிருந்தால் நான் கேட்டிருக்கமாட்டேன். நீ என் மனைவியாகப் போகின்றவளின் வீட்டின் முன் அல்லவா நிற்கின்றாய். அது எதற்கு?" என்று பார்த்திபனின் மேலாடையைப் பிடித்துக் கேட்டான்.

"பூபதி, நீ ஏன் அடிக்கடி பைத்தியம் போலவே நடந்து கொள்கிறாய். என் மேலாடையைப் பிடித்த ஒருவனையும் நான் உயிரோடு விட்டதில்லை." என்று கூறி பார்த்திபன் தன் வாளை உறையிலிருந்து உருவினான்.

வாளைப் பார்த்து பயந்த பூபதி, "பார்த்திபா, நீ என்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய். உன் ஆடையின் மேல் வண்டு இருந்தது. அதைத்தான் துரத்தினேன்"

"துரத்திவிட்டாயல்லவா? அமைதியாக உட்கார்"

"நான் பூங்கொடியைப் பார்க்கச் செல்ல வேண்டுமே?"

பார்த்திபன் அவனை முறைத்தான்.

"சரி, சரி. பிறகு பார்த்துக்கொள்கிறேன்" என்று கூறி பார்த்திபனின் அருகில் அமைதியாக உட்கார்ந்தான்.

சில நாழிகைகள் அமைதியாகக் கடந்து போயின. அப்போது, வீட்டிலிருந்து யாரோ வெளியே வரும் காலடி ஓசை பூபதியின் காதுகளில் விழுந்தது. பூபதி தலையை நீட்டி யாரென்று பார்த்தான். சம்யுக்தனும் அவன் பின்னால் பூங்கொடியும் வந்த காட்சி, வயிற்றில் நெருப்பை மூட்டியது போலிருந்தது. அவனுடைய கண்கள் பாம்பின் விஷத்தைக் கக்கின. மனதிற்குள், 'உன்னை எப்படி பழி வாங்குகிறேன் பார்' என்று சபதம் எடுத்துக் கொண்டான்.

வெளியே வந்த சம்யுக்தன் பூபதியைப் பார்த்து கண்டும் காணாதது போல் பார்த்திபனிடம், "நாம் செல்லலாம்" என்று மட்டும் கூறி குதிரையின் அருகில் சென்றான்.

பார்த்திபன் உட்கார்ந்தபடியே சம்யுக்தனைப் பார்த்து, "வெகு சீக்கிரத்தில் வந்துவிட்டாயே. இன்னும் நான்கைந்து வருடங்கள் கழித்து வர வேண்டியதுதானே. நான் இங்கேயே உட்கார்ந்து தியானம் செய்து மோட்சம் அடைந்திருப்பேன்" என்றான்.

சம்யுக்தன் குதிரையில் அமர்ந்து "செல்லலாம்" என்றான்.

"உன் அதிகாரத்தை என்னிடம் மட்டுமே காட்டு" என்று சலித்தபடியே கூறி பார்த்திபன் குதிரையில் ஏறினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.