அதைக் கேட்ட இளவரசர், "இவர்கள் தவறே செய்திருந்தாலும் இவர்களுக்கு உதவுவது நம் கடமை அல்லவா. இவன் சொன்னதைக் கேட்டு துரிதமாக நடவடிக்கை எடுக்காமல் வசை பாடி நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறீர்களே" என்று கோபத்தோடு கூறினார். பார்த்திபன், 'நான் காண்பது கனவா இல்லை நனவா. இளவரசரா நமக்கு சாதகமாக பேசுகிறார்?' என்று மனதில் நினைத்துக்கொண்டான்.
இளவரசர், "சீக்கிரம் நம் வீரர்களுடன் சென்று சம்யுக்தனுக்கும் அந்த பெண்மணிக்கும் பாதுகாப்பு கொடுங்கள்" என்று கட்டளையிட்டார். தளபதி, குழுமியிருந்த வீரர்களிடம், "சீக்கிரம், விரைந்து செயல் படுங்கள்" என்று கூற, எல்லாரும் அங்கிருந்து புறப்பட்டனர். இளவரசர் அங்கிருந்த ஒரு காவலாளியிடம், "இத் தகவலை மன்னரிடம் தெரியப்படுத்தி விடு" என்று கூறி விட்டு, பார்த்திபனின் தோள்களை தட்டி, "சரி, வா. நாமும் செல்வோம்" என்று கூறி முன்னே சென்றார். பார்த்திபனும் அவரைத் தொடர்ந்தான் .
இப்போது நம் கதையின் நாயகன் சம்யுக்தனைச் சென்று பார்ப்போம்.
வைக்கோற்போர் தீயின் வெளிச்சத்தில் தெரிந்த அந்த உருவத்தைக் கண்டு சம்யுக்தன் ஆச்சர்யப்படவில்லை. சம்யுக்தன், யாரை எதிர்பார்த்து காத்திருந்தானோ அவனே தான் அது. சம்யுக்தனின் வீரம் கோபதாகத்தால் இன்னும் பன்மடங்கு பெருகி இருந்தது. புயலுக்குப் பின்னே வரும் அமைதி அங்கே முன்னேயே இருந்தது. தன் நண்பர்களின் கதி என்ன ஆயிற்று என்று தெரியாமல் இருந்த கவலை, அவனைப் பார்த்த மாத்திரத்தில் கடுங்கோபமாக மாறியது.
ஆற்றங்கரையில் சம்யுக்தன் சந்தித்த அதே மனிதன் தான் அவன். அவன் தலைப்பாகையோடு சேர்ந்த துணியால் முகத்தை மறைத்து கண்கள் மட்டும் தெரியுமாறு காட்சி தந்து கொண்டிருந்தான். பசியுள்ள வேங்கை, இரையை நெருங்கவிடாமல் யாராவது தடுத்தால் சீறிப் பாய்வது போல் அந்த மனிதனின் உள்ளம் வெறிகொண்டு துடித்தது.
ஆற்றங்கரையில் தொடங்கி வைத்த கணக்கை இப்போது முடித்து விட வேண்டும் என்று சம்யுக்தன் தன் வாளை வெறியோடு உருவி அவனை நோக்கி முன்னேறிச் சென்றான். சம்யுக்தன் வாளை உருவிக்கொண்டு சென்ற காட்சி பாலைவனத்தில் ஒரு பெரும் புயல் புழுதியைக் கிளப்பிக் கொண்டு வருவதுபோல் இருந்தது. அவனும் சம்யுக்தனுக்கு சளைத்தவன் இல்லை என்பது போல் தன் கூரிய கத்தியை கையில் ஏந்தி சம்யுக்தனின் நெஞ்சைத் துளைக்க பாய்ந்து ஓடிவந்தான். இரண்டு மதம் கொண்ட யானைகள் மோதுவதற்கு தயாராவது போலிருந்தது அக்காட்சி.
சம்யுக்தன் வாளை எடுத்து வீச முற்பட்டபோது அவனும் தன் கூரிய கத்தியை எடுத்து சம்யுக்தனைத் தாக்க பாய்ந்து வந்தான். பாய்ந்து வந்த அவனை சம்யுக்தன்,தன் காலால் நெஞ்சில் எட்டி உதைத்தான். நிலை தடுமாறி விழுந்த அவனுக்கு சம்யுக்தனின் வீரம் புரிந்து போயிருக்கும். அவன் அடிபட்ட நாகம் போல் சீறிப்பாய ஆயத்தமானான். சம்யுக்தன் அவனை மேலும் அடித்துக் கீழே தள்ளியபோது, அவனுடைய கத்தி பிடி தவறி கீழே விழுந்தது. கீழே விழுந்த அவன், தன் கத்தி எங்கே என்று தேடி எடுக்க முற்பட்டபோது சம்யுக்தன் தன் கால்களால் அந்த கத்தியை அவனிடம் தள்ளினான்.
அதை எடுத்துக் கொண்டு அந்த மனிதன் அவனைத் திரும்பவும் தாக்க முற்பட்டபோது திடீரென்று குதிரைகளின் காலடிச் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டான். முன்னே வைத்த அவன் கால்கள் இப்போது பின்னோக்கி சென்றன. ஏதோ ஆபத்து வரப்போகிறது என்று அவன் உள்மனதில் மணியடித்தது. தன்னை யாரும் பார்த்து விடக்கூடாது என்று உணர்ந்த அவன் அங்கிருந்து ஓட ஆரம்பித்தான். சம்யுக்தனும் அவனை விரட்டினான். அந்த மனிதன் இருட்டில் ஓடி மறைவதற்கும் இளவரசர் காவலர்களுடன் அங்கே வருவதற்கும் சரியாக இருந்தது. சம்யுக்தன் மறுபடியும் அவனை தப்பிக்க விட்டு விட்டோமே என்ற விரக்தியில் வாளை வீசி எறிந்தான்.
குதிரையிலிருந்து இறங்கிய இளவரசர், சம்யுக்தன் வீசி எறிந்த வாளை எடுத்து, சற்றே ஏளனம் கலந்த சிரிப்புடன் அவனை நோக்கி, "கோபம் உச்சந்தலையில் நின்று நடனம் ஆடிக்கொண்டிருப்பது போலிருக்கிறதே, என்ன ஆயிற்று?" என்று கேட்டார்.
இளவரசன் தன்னை நகையாடுவது தெரிந்தும் சம்யுக்தன் மிகக் கனிவாக, "ஒன்றுமில்லை, இளவரசே" என்று கூறினான்.
"ஒன்றுமில்லாமலா ஒருவனைத் துரத்திக் கொண்டு சென்றாய்?" என்று இளவரசன் கேட்டதும், சம்யுக்தனின் கண்கள் இளவரசனின் கண்களை நேருக்கு நேர் சந்தித்தன. அவன் மட்டும் இளவரசனாக இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் அவன் செய்த பரிகாசத்திற்கு தக்க பதிலடி கிடைத்திருக்கும்.
இளவரசனை முறைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தபோது, "வாளை மறந்துவிட்டு செல்கிறாயே" என்று இளவரசர் சம்யுக்தனின் வாளை அவனிடம் கொடுத்தார்.
சம்யுக்தன் தன் வாளைப் பெற்றுக்கொண்டு பார்த்திபனிடம் சென்றான். "என்ன, இளவரசரை முறைத்துக்கொண்டிருக்கிறாய்? அவர் தான் நமக்கு உதவி செய்ய முன்வந்தவர். அவரை போய் முறைத்துக்கொண்டிருக்கிறாயே" என்று பார்த்திபன் சொன்னான். சம்யுக்தன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.