(Reading time: 22 - 44 minutes)

காவலர்கள் அக்குடிசையை நாற்புறமும் சூழ்ந்து காவல் புரிந்தனர். சம்யுக்தன் அதைக் கவனித்தவாறே, "நம் நண்பனை வைத்தியரிடம் ஒப்படைத்து விட்டாயா?"

என்று கேட்டான்.

"முதலில் அந்த காரியத்தைச் செய்து விட்டுத்தான் அரண்மனைக்குச் சென்றேன். அவன் வந்தானா?"

"அதைப் பற்றி பிறகு சொல்கிறேன்" என்று கூறிவிட்டு காவல்தளபதியிடம் சென்று, அவரை வணங்கி விட்டு, "காட்டில் தன் நண்பர்களின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. வீரர்களை அனுப்பி அவர்களின் நிலை என்ன ஆனது என்று தெரிந்து வரச் சொல்லுங்கள்" என்று கூறினான்.

காவல்தளபதி, "எல்லாமே நீங்களே செய்து விட்டு உதவிக்கு மட்டும் எங்களை நாடி வருகிறீர்கள்" என்று கூறி சில வீரர்களை காட்டுப் பகுதிக்கு அனுப்பினார்.

அதிகாலைப் பனி குளிர்ச்சியாக இருந்தாலும், சம்யுக்தனின் உள்ளத்தில் எரிந்துகொண்டிருந்த தீயை அணைக்க முடியாமல் தவித்தது. சம்யுக்தன், இளவரசனின் பக்கம் செல்லாமல் வேறு பக்கமாய் ஒரு வித சிந்தனையுடன் நடந்துகொண்டிருந்தான். காட்டில் அகப்பட்ட தன் நண்பர்களின் கதி என்ன ஆனது என்று அவனால் கற்பனை செய்ய முடியவில்லை. அப்படி கற்பனை செய்து பார்த்தால், அது விபரீதமாகத் தோன்றுகிறது. அடிக்கடி அக்குடிசையின் கதவையே நோட்டமிட்டபடி தன் சிந்தனையைச் செலுத்திக் கொண்டிருந்தான்.

இளவரசருக்கு சம்யுக்தனின் நிலை கண்டு ஒரு வித மகிழ்ச்சியும் குதூகலமும் உண்டானது என்னவோ உண்மை தான். 'கற்பனாக் கதையில், நாயகன் வீர தீரச் செயலைச் செய்து மக்களிடம் பாராட்டைப் பெறுவான். அதே போல் சம்யுக்தனும் எண்ணியிருக்கிறான். ஆனால், நிலைமையோ அவனுக்கு எதிராக அமைந்து விட்டது' இளவரசரின் மனதில் இவ்வாறான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

யாரும் யாரிடம் பேசிக்கொள்ளவில்லை. இளவரசர் ஓருபக்கம்; சம்யுக்தனும் பார்த்திபனும் ஒரு பக்கம்; காவல் புரியும் வீரர்கள் ஒரு பக்கம் என அந்த இடமே ஆழ்ந்த அமைதியில் சூழ்ந்துகொண்டிருந்தது. சில நாழிகை இப்படியே கடந்தது.

சூரியனின் ஒளிக்கதிர்கள் இருளைக் கிழித்து பூமிக்கு வர இன்னும் சில நாழிகை இருந்தது. தாமரை மொட்டுக்கள் சூரியனை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தன. தாய்ப் பறவைகள் தங்கள் குஞ்சுகளிடமிருந்து விடைபெற்று இரை தேடப் பறந்து சென்றன. குஞ்சுகள் தாயைப் பிரிந்த ஏக்கத்தில்  "கீச்..கீச்.." என்று சோக கீதம் பாடின. வானில் விண்மீன்கள் விடைபெறத் தயாராக இருந்தன. கவிஞர்களின் காவிய கற்பனையான நிலா, இரவு முழுவதும் பூமியைப் பார்த்துக்கொண்டிருந்த களைப்பில் சற்று ஒளி மங்கி காணப்பட்டது. மரங்களின் இலைகளிலும் புற்களின் நுனிகளிலும் பனித்துளிகள் முத்துக்களைப் போல் மின்னிக் கொண்டிருந்தன.

மோர்க்காரியின் குடிசைக் கதவு திறந்தது. காவல் புரிந்துகொண்டிருந்த வீரர்கள் அனைவரும் ஒருங்கே திரும்பிப் பார்த்தனர். இரவு நேரத்தில் நடந்தவை ஏதும் அறியாதவளாய், மோர்க்காரி வாசல் தெளிக்க மாட்டுச்சாணம் கலந்த தண்ணீர்ப் பானையுடன் வெளியே வந்தாள். தன் குடிசையைச் சுற்றி நின்றுகொண்டிருந்த வீரர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். ஏதோ நடந்திருக்கிறது என்று அவள் உள்மனது சொன்னது. அப்போது இளவரசனும் சம்யுக்தனும் அவளருகே சென்றனர். இருவரையும் பார்த்து அவள், "யார் நீங்கள்?" என்று கேட்டாள்.

அதற்கு இளவரசர், "நான் இந்நாட்டின் இளவரசன் ரவிவர்மன்" என்று கூறி விட்டு சம்யுக்தனைத் திரும்பிப் பார்த்து, "இவர்......ஆஆஆங்...மந்திரியின் மகன்" என்று ஏளனமாகக் கூறினார். அதைக் கேட்டு சம்யுக்தன் இளவரசனை முறைத்தான். இளவரசர், "என்ன முறைக்கிறாய்? நேற்று வரை எல்லாவற்றையும் தன்னிச்சையாக நீயே தானே செய்தாய். இனி எல்லாவற்றையும் நீயே செய்து விடு. நாங்கள் எல்லாரும் உன் பின்னால் நின்று வேடிக்கை பார்க்கிறோம்" என்றான்.

பொறுமையிழந்த மோர்க்காரி, "இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?" என்று குரலில் ஒரு நடுக்கத்தோடு கேட்டாள். அவளுக்கு பதில் ஏதும் கூறாமல், சம்யுக்தன் அந்த தீய்ந்த ஓலையை எடுத்துக் காட்டினான். அவள் கண்கள் பயத்தில் அகல விரிந்தன; மூளையில் அபாய மணி ஒலித்தது; புலியைப் பார்த்த மான் போல் மிரண்டு போனாள். அவள் சுதாரிப்பதற்குள் மற்றோர் அதிர்ச்சி காத்திருந்தது.

அரண்மனை வீரர்களின் தலைவன், "உங்களைக் கைது செய்கிறோம்" என்று கூறினான். உடனே நான்கு வீரர்கள் கையில் ஈட்டியுடன் அவளை சூழ்ந்து கொண்டனர். வெள்ளம் தலைக்கு மேல் சென்று விட்டதை உணர்ந்த அவள், இனி மறுப்பதில் என்ன பயனென்று நினைத்தாள் போலும், அமைதியாகவே அவர்களுடன் சென்றாள்.

ரச சபை அவசரமாக கூடியது. மந்திரிகள் தங்கள் ஆசனங்களில் அமர்ந்து ஒவ்வொருவரின் கருத்துக்களையும் பரிமாறிக்கொண்டிருந்தனர். அப்போது, ராஜகுரு வேகமாக நடந்து வந்துகொண்டிருந்தார். அவர் அரச சபையில் நுழைந்ததும் அனைவரும் அமைதியாயினர். அவருக்கு தங்கள் சிரம் தாழ்த்தி பணிவான வணக்கங்களை செலுத்தினர். அதை அவர் கவனியாதது போல் மன்னரின் அரியணைக்குப் பக்கத்தில் இருந்த ஆசனத்தில் சென்று அமர்ந்தார். அவர் முகத்தில் கோபம், ஏமாற்றம், அதிர்ச்சி எல்லாம் ஒரு சேர படர்ந்திருந்தது. அவற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக அவர் கைவிரல்களோ ருத்திராட்ச மாலையை உருட்டிக் கொண்டு இருந்தது. அடுத்து என்ன செய்வது என்ற சிந்தனையும் ஓடிக்கொண்டிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.