(Reading time: 22 - 44 minutes)

நம் நாட்டிலேயே இவளை கொல்ல முனைந்தவர்கள், சொந்த நாட்டில் மட்டும் இவளை விட்டு விடவா போகிறார்கள்? ராஜ முறைப்படியே இவளைக் கொன்று விடுவார்கள். இவளை சிறையில் அடைத்து விடலாம். செய்த தவற்றிற்கு தண்டனை அனுபவித்தது போலவும் இருக்கும்; இவள் உயிரோடும் இருக்கலாம். நான் என் கருத்தை முன் வைத்து விட்டேன்; ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் தங்கள் உரிமை" என்று கூறி ராஜகுரு அமைதியானார். 

ராஜகுருவின் கருத்தைக் கேட்ட மன்னரும், சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தார்.

அரச சபை புயலுக்கு பிந்திய அமைதியைப் போல காட்சி தந்தது. யோசனையைக் கலைத்த மன்னர், எல்லாரையும் பார்த்து, "ராஜகுரு சொல்வது தான் எனக்கு மிகச் சரி என்று படுகிறது. சிறிது காலம் இவள் சிறையில் இருக்கட்டும்; செய்த பாவத்திற்கு தண்டனை அனுபவித்தது போலிருக்கும்" என்று கூறி "இவளைச் சிறையில் அடையுங்கள் !" என்று வீரர்களைப் பார்த்து கட்டளையிட்டார். வீரர்கள் அவளை சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

அதன் பிறகு எல்லாருடைய பார்வையும் சம்யுக்தன் மற்றும் பார்த்திபன் மேல் விழுந்தது. பார்த்திபன், "எல்லோரும் என்னையே பார்க்கிறார்கள்; எனக்கு சற்று கூச்சமாக இருக்கிறது. நான் உன் பின்னால் மறைந்துகொள்கிறேன்" என்று கூறி சம்யுக்தனின் பின்னால் மெதுவாக மறைந்துகொண்டான்.

மன்னர், சம்யுக்தனை நோக்கி விட்டு சபையில் இருந்தோரைப் பார்த்து, "மந்திரி தேவராஜன் இருந்திருந்தால், சம்யுக்தன் செய்தவற்றை எண்ணி புளகாங்கிதம் அடைந்திருப்பார். அவரை இந்த இக்கட்டான நேரத்தில் வேறு ஒரு முக்கிய பொறுப்பு கொடுத்து அனுப்பியது தவறு தான்" என்று சற்றே ஏளனம் தொனிக்கும் குரலில் கூறினார்.

சம்யுக்தன் மன்னரை ஒரு குற்ற உணர்ச்சியுடன் நோக்கி, "மன்னித்து விடுங்கள், அரசே!" என்று கவலை தோய்ந்த குரலில் கூறினான்.

"நான் உன்னை மன்னிப்பது பெரிதல்ல சம்யுக்தா. நீ செய்த செயலில் ராஜகுருவுக்குத் தான் அதிக மனக்கஷ்டம். இவ்வயதில் தன்னால் எதுவும் செய்ய முடியும் என்ற தலைக்கனம் தோன்றுவது இயல்பே. ஆனால், அனுபவமின்மையால் செய்யும் காரியம் தன் உயிரை மட்டுமன்றி பிறர் உயிரையும் குடித்துவிடும். நீ எதுவாக இருந்தாலும் எங்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கவேண்டும்; தன்னிச்சையாக செயல்பட்டிருக்கக்கூடாது" என்று சொல்லிக்கொண்டிருந்தபோது சில வீரர்கள் அரச சபையில் நுழைந்தனர்.

மன்னருக்கு பணிவான வணக்கங்களைத் தெரிவித்து விட்டு, "இவர்களின் நண்பர்கள் மூவரையும் தேடி காட்டையே அலசி ஆராய்ந்து விட்டோம். ஆனால், எங்கு தேடியும் அவர்களைக் காணவில்லை" என்று கூறினார்கள்.

மன்னர், "சரி, நீங்கள் செல்லலாம்" என்று கூறிவிட்டு சம்யுக்தனை நோக்கி, "நீங்கள் சிறுபிள்ளைத்தனமாக செய்த காரியத்தால் ஏற்பட்ட விளைவைப் பார்த்தீர்களா?" என்று கூறி சம்யுக்தனுக்கு பேசும் அவகாசத்தைத் தந்தார். 

சம்யுக்தன், "மன்னா, மறுபடியும் நாங்கள் செய்தவற்றிற்கு தங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நாங்கள் முதலில் சந்தேகத்தோடு தான் தொடர்ந்தோம். ஆனால் போகப் போக தான் நிலைமை பூதாகரமாக மாறியதை உணர்ந்தோம். அந்நேரத்தில் அவர்களை எப்படி பிடிப்பது என்பது மட்டுமே சிந்தனையில் இருந்ததே தவிர, வேறு எதுவும் எங்களுக்கு தோன்றவில்லை. ஏனென்றால் அவர்களின் நடவடிக்கை அவ்வாறு இருந்தது. நாங்கள் அவர்களுக்கு இணையாக அவ்வளவு வேகமாக முயற்சி செய்தும், எங்களுக்கு கிடைத்தது அந்த தீய்ந்த ஓலை மட்டும் தான். ஒரு வேளை நீங்கள் சொன்னது போல் சற்று பொறுமையாக இவ்விசயத்தை கையாண்டிருந்தால் நமக்கு சாதகமாக இது முடிந்திருக்கலாம். இனி, எங்கள் மேல் பழிச் சொல் வராதபடி நாங்கள் நடந்து கொள்கிறோம்" என்று பணிவாகக் கூறினான்.

"உன் பின்னால் நிற்பவன் யார், பார்த்திபனா?" என்று மன்னர் கேட்டார்.

உடனே பார்த்திபன், "ஐயையோ, மன்னருக்கு என் பெயர் தெரிந்திருக்கிறதே" என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே மன்னரைப் பார்த்தான் .

"நீ ஏன் பேசாமல் அமைதியாக இருக்கிறாய்?"

"நான் சொல்ல நினைத்ததை எல்லாம் சம்யுக்தனே ஒன்று விடாமல் சொல்லிவிட்டான், மன்னா. இனி நான் சொல்ல என்ன இருக்கிறது" என்று பதிலுரைத்தான்.

"எல்லா பாரத்தையும் சம்யுக்தனின் தோளில் இறக்கி விட்டு அவன் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறாயே? நல்ல நண்பன்" என்று கூறி மன்னர் பெருமூச்சு விட்டார்.

அப்போது அரச சபை நுழைவாயிலில் ஒரு சல சலப்பு ஏற்பட்டது. மன்னர், "என்ன அங்கே குழப்பம்?" என்று கேட்டார்.

அப்போது காவலாளி ஒருவன், "மன்னா, யாரோ ஒருவன் தங்களை அவசரமாகக் காணவேண்டும் என்று வெளியே ஒரு பிரளயமே செய்துகொண்டிருக்கிறான்" என்றான்.

மன்னர், "அவனை வரச் சொல்" என்று கட்டளையிட்டார்.

உடனே காவலாளி அவனை உள்ளே அழைத்து வந்தான். உள்ளே நுழைந்தவன், பார்த்திபனைப் பார்த்ததும் அவனருகில் வேகமாக சென்று, "சண்டாளா, எங்கே என் குதிரை?" என்று கேட்டான்.

அப்போது பார்த்திபன். "ஐயோ, பைத்தியம்...பைத்தியம்" என்று அலறினான்.

பொறுமையிழந்த மன்னர், "யாரிவன்? எதற்காக சண்டை போட்டுக்கொள்கிறீர்கள்?" என்று வினவினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.