(Reading time: 22 - 44 minutes)

அப்பொழுது, வாளை எடுத்து மந்திரியின் கழுத்தில் வைத்து, "உயிர் மீது வெறுப்படைந்து விட்டீர் போலிருக்கிறதே, எடுத்துவிட வேண்டியது தான்" என்று விஷம் கலந்த புன்னகையுடன் அக் கூட்டத்தின் தலைவன் கூறினான்.

"உயிருக்கு பயந்தவனில்லை இந்த நரசிம்மன். சிறு வயதிலேயே பல போர்களைக் கண்டவன். உயிருக்குப் பயந்திருந்தால் அது நடந்திருக்குமா"

"என்னைப் பொறுத்தவரை நீங்களிருவரும் இப்பூமியில் வாழத் தகுதியற்றவர்கள் . இவர்கள் இருவரின் தலையையும் கொய்து, இவர்களின் ரத்தத்தில் பூமியை நனைத்து விடுங்கள் " என்று கூறி சில அடிகள் முன்னே நடந்தான் அத் தலைவன் .

உடனே மந்திரியின் சேவகன் "ஐயா..., ஐயா.." என்று கதறினான்.

அந்த அழுகுரலைக் கேட்ட அத் தலைவன் சிறியதாய் முகம் சுழித்து, "இன்னும் நான் சொன்னதை நிறைவேற்றாமல் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?" என்று அதிகாரத்தோடு ஆணையிட்டான்.

ஒருவன் அச் சேவகனின் கையைப் பின்னால் கட்டி அவனைத் தரையில் முட்டி போட வைத்து அவனைப் பலி கொடுக்க ஆயத்தமானான். இன்னொருவன் அவன் தலையை வெட்ட வாளை ஓங்கினான்.

அப்போது அச் சேவகன் ,"ஐயா, எனக்குத் தெரிந்தவற்றை சொல்கிறேன். என்னை உயிரோடு விட்டு விடுவீர்களா?" என்று கேட்டான்.

அதைக் கேட்ட அவர்களின் தலைவன், "பரவாயில்லையே, உன் எஜமானனைப் போல் இல்லாமல் உனக்கு உயிரின் மீது ஆசை இருக்கிறதே. சரி, உனக்கு என்ன தெரியுமோ அதைச் சொல். உன்னை உயிரோடு விட்டு விடுகிறேன்" என்றான்.

சேவகன், அந்த ரகசியத்தைச் சொல்ல முற்பட்டபோது மந்திரியை ஒரு பார்வை பார்த்தான். மந்திரி சூரியனின் உக்கிரத்தோடு அவனை முறைத்துக் கொண்டிருந்தார்.

கூட்டத்தின் தலைவன், "அவரைப் பற்றிக் கவலைப் படாதே, இன்னும் சிறிது நேரத்தில் அவருடைய உயிர் ஆகாயத்தில் பறக்கப் போகிறது. நீ அந்த ரகசியத்தைச் சொல்" என்றான்.

உடனே சேவகன் மந்திரி அவனிடம் கூறியவற்றை ஒன்று விடாமல் கூறினான்.

அதைக் கேட்ட தலைவன், "இது எனக்குப் போதுமானதாக இல்லையென்றாலும், நீ உனக்குத் தெரிந்ததைக் கூறியதால் உன்னை விட்டு விடுகிறேன். உன் எஜமானர் சாவதை பார்த்து விட்டுச் செல்" என்று கூறி தன் வாளை மந்திரியை நோக்கி ஓங்கினான்.

கண்ணிமைக்கும் நேரத்தில் பூமியில் தலை உருண்டோடியது. வாளில் குருதி வழிந்து கொண்டிருந்தது. உருண்டோடியது வேறு யார் தலையும் அல்ல .அது மந்திரியின் சேவகனின் தலை தான்.

மந்திரி அவனை வியப்போடு பார்த்தார்.

"என்ன, வருத்தப்படுகிறீர்களா?" என்று கேட்டான் தலைவன்.

"வருத்தப்படவில்லை. நான் செய்ய நினைத்ததை தான் நீ செய்திருக்கிறாய்" என்று கூறினார் மந்திரி.

"நீங்கள் என்னை யாரென்று கேட்டீர்கள் அல்லவா?" என்று கேட்டுக் கொண்டே தன் வேஷத்தை அத்தலைவன் கலைத்தான்.

வேஷம் கலைந்த அம்முகத்தைப் பார்த்த மந்திரி ஆச்சர்யத்தின் விளிம்பிற்கே சென்று விட்டார். அவர் நா தழுதழுக்க "ம...ம...மன்னா.." என்றார்.

நிலவின் ஒளி விண்ணில் பிரகாசமாக ஜொலித்துக்கொண்டிருந்தது. அந்த நிலவைச் சுற்றி கோடானு கோடி நட்சத்திரங்கள் மின்மினிப் பூச்சிகளைப் போல மின்னிக்கொண்டிருந்தன. பூமியை விட ஆகாயம் அழகாக காட்சியளித்துக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில், ரோஜாபூவின் மொட்டானது தன் இதழ்களை மெல்ல விரித்து பூப்படையத் தொடங்கியது.

சம்யுக்தனின் கண்ணில் மோர்க்காரியின் குடிசை தென்பட்டது. உடனே, சம்யுக்தன் அங்கு நிலவிய அமைதியைக் குலைக்காத வண்ணம் குதிரையின் வேகத்தைக் குறைத்தான். அங்கிருந்த ஒரு மரத்தில் குதிரையைக் கட்டி அதன் முதுகில் செல்லமாக தடவி அதை ஆசுவாசப்படுத்திவிட்டு, பின்னர் மெதுவாக ஒரு பூனை போல் அந்த குடிசையின் அருகில் சென்றான். அந்த குடிசையை சுற்றி நோட்டமிட்டான். அந்த குடிசையின் கதவை மெல்ல தள்ளிப் பார்த்தான். அது உள்ளே தாழிடப்பட்டிருந்தது.

கொலைகாரன் இன்னும் வரவில்லை, மோர்க்காரி பாதுகாப்பாகத்தான் இருக்கிறாள், இந்த முறை அவனை விடக்கூடாது என்று மனதில் எண்ணிக்கொண்டு பக்கத்தில் இருந்த ஒரு பெரிய வேப்ப மரத்தின் அடியில், வாளை பூமியில் செருகி, அந்த வேப்ப மரத்தின் வெளியே தெரிந்த வேர்களின் மீது உட்கார்ந்து அந்த குடிசையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு சிந்திக்க அவகாசம் இருந்தது. அதை அவன் தவற விடவில்லை. சிந்திக்க ஆரம்பித்தான். நடந்தவை அனைத்தையும் மனதில் சங்கிலி போல் பின்ன ஆரம்பித்தான்.

எதிரி நாட்டு மன்னன் மார்த்தாண்டவர்மனை நினைத்தான். அவனை பார்த்திரா விட்டாலும், தன் தந்தை, மன்னன், ராஜகுரு ஆகியோர் பேசியதை வைத்து மனதில் அவனாகவே மார்த்தாண்டவர்மனை கொடிய விஷ நாகத்தைப் போல் கற்பனை செய்திருந்தான். வீரபுரத்தின் இயற்கை வளத்தின் மேல் மார்த்தாண்டனுக்கு ஆசை இருந்ததை நினைத்துப் பார்த்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.