(Reading time: 19 - 38 minutes)

06. அடையாளம்!!! - ப்ரீத்தி

Adaiyalam

வர்கள் மருத்துவமனை அடையும் முன்பே விரேன் அங்கு இருந்தான். தேவையான டெஸ்ட் எல்லாம் எடுத்துக்கொண்டிருந்தனர். வருத்ததோடு வேகமாக மகளும் அம்மாவும் வர, அங்கே வரவேற்பில் இருந்த பெண் குறிப்புக்கு ஏற்றார் போல முதல் தளத்திற்கு அனுப்பிவைத்தார். ஏறிய முதலே விரேன் கண்ணில் பட்டுவிட ஓடி சென்று அவனிடம் அழுகையை அடக்கியவாறு பேசினார், “எப்படிப்பா இருக்காரு? எதாவது சொன்னாங்களா? என்னாச்சு” என்று கண்ணில் இருந்து தானாக கண்ணீர் கொட்டியது.

“ஒன்னுல ஆன்ட்டி அங்கிள்க்கு எதுவும் இல்ல... காலுல சின்ன fracture தான்... கட்டு போட்டிருக்காங்க... சீக்கரம் சரியாகிடும்னு சொன்னாங்க.. மயக்க மருந்து குடுத்திருக்காங்க... நீங்க கவல படாதீங்க...”

“உள்ள போய் பாக்கலாமாப்பா” என்று வேண்டுதலாக கேட்டவரை பார்க்க பரிதாபமாக தான் இருந்தது.

“கண்டிப்பா பார்க்கலாம்.. ஆனா இப்படி அழுதுகிட்டே இல்ல.. கண்ண தொடைங்க... நானும் இன்னும் அங்கிள உள்ள போய் பார்க்கல..” என்று இருவரையும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான். அவர்கள் உள்ளே வரவும் டாக்டர்கள் அவரை பரிசோதித்து விட்டு வெளியே வந்தனர்.

அருணாவை கண்டதுமே மனைவியாக இருக்கும் என்று உணர்ந்துக்கொண்ட டாக்டர்... “அவருக்கு ஒண்ணுமில்லம்மா அழாதீங்க.. கண்ணு முழிக்குற நேரம் தான்... நீங்க பார்த்து பேசுங்க ஆனால் அழாதீங்க..” என்று கூறிவிட்டு சென்றார்.

கண்களை துடைத்துக்கொண்டு உள்ளே சென்று அவரை மெத்தையில் அடியோடு காணவும் மீண்டும் அழுகை வரத்தான் செய்தது.. மித்ராவும் விரேனும் பொறுமையாக காதோரம் ஆறுதல் சொல்ல கடினப்பட்டு கண்களை துடைத்துக்கொண்டு அவரது கண்களை துடைத்துக்கொண்டார்.

மெல்ல மயக்கம் களைந்து கண்களை திறந்த அருள், சுற்றி இருப்போரை பார்த்தார்.. மெல்லிய முறுவல் ஒன்று அங்கிருந்தோரை பார்த்து தந்துவிட்டு மூத்த மகளை தேட துவங்கியது கண்கள். அதை உணர்ந்தவள், “கீர்த்தி... வரலப்பா...” என்றாள் மெல்லிய குரலில்...

அவர் ஏன் என்று கேட்கவில்லை.. கேட்கும் துணிவும் இல்லை... “ஹ்ம்ம்... அவளும் எவ்வளவு தான் தாங்குவா... பாவம்” என்று கண்கள் கலங்கியது...

“அங்கிள் அழாதீங்க.. ஒன்னும் இல்லை... நம்ம திரும்பி கீர்த்தியை பழையபடி மாத்திரலாம்...”

“எங்கப்பா.. என்னாலையே அதை மறக்க முடியலை.. வெளிய கண்ணுல படுற பொண்ணுங்க எல்லாம் என்னோட பொண்ணு மாதிரியே தெரியுறாங்க... அவளை ஒழுங்கா பார்த்துக்காம விட்டுட்டேனு தோணுது...”

இப்போது என்ன ஆறுதல் சொல்ல முடியும் என்று வருத்தமாக இருந்தது... இருந்தாலும் “நீங்களே இவ்வளவு சோர்ந்து போயிட்டால் அங்க கீர்த்தியும் இன்னும் ஒடஞ்சுப் போக மாட்டாளா... இப்ப உங்களுக்கு இப்படி ஆனதும் மேலும் கஷ்ட்டமா தானே இருக்கும்...”

“எங்கப்பா.. இந்த நிலமையில கூட அப்பாவுக்காக ஓடி வரணும்னு தோணலையே அவளுக்கு” என்று மனவருத்தத்தை கொட்டினார் அருணா...

“என்ன அருணா பேசுற நீ... அவ இருக்க நிலமையில..” என்று மனத்தாங்கல் அதிகரிக்க துவங்கியதும்.. விரேன் நிலையை மாற்றினான். “சரி விடுங்க அங்கிள் பதட்டபடாதீங்க... ஆன்ட்டி அவங்க வேதனையை சொல்றாங்க...” ஏதேதோ நிலைமை மாற பேசிவிட்டு மித்ராவை தனியாக அழைத்தான், “மித்ரா வீட்ல என்னாச்சு??”

அவள் நடந்தவற்றை எல்லாம் கூறவும்... பொறுமையாக கேட்டான்.

“ம்ம்ம்ம்....”

“நானே வந்ததும் சொல்லனும்னு நினைச்சேன்... நீங்க போய் கொஞ்சம்... கொஞ்சம் அவகிட்ட பேச முடியுமா??? இப்போ என்ன நிலையில இருக்கான்னு தெரியலை...”

மெல்லிய முறுவல் தந்தவன்... “ம்ம்ம் நான் பார்த்துக்குறேன்.. நான் கிளம்பிட்டா இங்க யாரு துணைக்கு இருப்பா...” என்று விட்டு அலைபேசியை எடுத்துகொண்டு தனியாக சென்றான். மித்ராவின் மனம் முரண்டு பிடிக்க தான் செய்தது... “அக்கா காதல் இல்ல சொல்றா, இவனோ அவளுக்காக உருகுகிறான்... ஒருவேளை அக்காவுக்கே தெரியாமல் இவனை விரும்புகிறாளோ... பிரச்சனை என்றதும் இவனை தானே அழைத்தாள்... இது நட்பு மட்டும் தான்னு எப்படி நினைப்பது” என்று குழந்தை போல அவன் மீது இருக்கும் ஈர்ப்பு காதலாய் மாறுவது புரியாமல் குழம்ப துவங்கினாள்.

“ச்சே.. எந்த நேரத்துல என்ன நினைப்பு... இதெல்லாம் கூடாது மித்ரா.. ஒருவேல ரெண்டு பேரும் லவ் பண்ணா என்ன பண்றது.. உன் மனச கட்டுபடுத்து..” என்று தன்னை தானே திட்டிக்கொண்டு தந்தையிடம் வந்தாள்.    

ன்னை அவ்வாறு கூறியதை கேட்டுவிட்டு ஸ்தம்பித்து போனவள் தான், கண்ணில் கொட்ட துவங்கிய கண்ணீரை துடைக்க தோன்றாமல் அமர்ந்திருந்தாள்... தானே சுமை இருக்க அவர்களை தேடி வர, அவர்களுக்கு என்றும் நீங்கா சுமையாய் மாறிவிடுவோமோ என்ற பயம் தலை தூக்க துவங்கியது. நிகழ் காலத்தில் இருந்து தொலை தூரம் சென்றவள் போல மருத்துவமனை நினைப்பு கூட இல்லாமல் தனை மறந்து அழுதாள், என்னால தான் இப்படி அப்பாவுக்கு ஆகிடுச்சு கண்டிப்பா என்ன பத்தி தான் யோசுச்சுகிட்டு போகிருப்பாங்க... என்று மனம் ஒரு புறம் தனியாக போய்க்கொண்டு இருந்தது. அமைதியாக இருந்த அறையில் திடுமென ஒலி கேட்கவும் தூக்கிபோட்டு எழுந்தாள், அது கைபேசியின் அழைப்பு தான் என்று புரிந்துக்கொண்டு ஆசுவாசப்படுத்திக்கொள்ள சிறிது நேரம் ஆனது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.