(Reading time: 19 - 38 minutes)

“சரி ஆன்ட்டி” என்றுவிட்டு கிளம்பினர் இருவரும்..

மித்ராவுக்கு சந்தோஷப்படுவதா துக்கப்படுவதா என்றே புரியவில்லை.. இதுவே.. அக்காவிற்கு இப்படி நடப்பதற்கு முன்பு நடந்திருந்தால் இந்நேரம் மித்ரா குதியாட்டம் போட்டிருப்பாள். மனதை பெரிதும் சிரமப்படுத்தி அடக்கிக்கொண்டு.. அவனோடு வண்டியில் சென்றாள்... லாவகமாக தான் ஓட்டினான்.. நல்ல பெயரை கைப்பற்றும் வகையில் மேடுபள்ளம் பார்த்து மெதுவாக கூட்டி சென்றான்..

மித்ராவின் மூளை தான் ஒரு நிமிடம் விடாமல் அரட்டை அடித்தது... “மித்து.. அடக்கிவாசி.. அக்காவோட ஆளு.. உனக்கு மாமா.. கண்ட்ரோல் கண்ட்ரோல்... இவன் நம்மள இம்ப்ரெஸ் பண்ண நல்லவனா நடிக்குறானா இல்ல கீர்த்தியோட தங்கச்சின்னு நல்லவனா இருக்கானா இல்ல நிஜமாவே நல்லவனா இல்ல... பிரிண்ட்ஸ் சொன்ன மாதிரி ஒருவேல பொண்ணுங்களே புடிக்காதோ...” இப்படி மூச்சே விடாமல் போக..

“ஐயோ... ஸ்டாப் ஸ்டாப்” என்று பல்லை கடிந்துக்கொண்டு மூளையை திட்டினாள்... சட்டென வண்டி நிக்கவும் தான் சத்தமாக பேசிவிட்டோமோ என்று உள்ளூர உதறிப் போனது அவளுக்கு...

“என்னாச்சு? ஏன் வண்டிய நிறுத்த சொன்ன???”

“அது அது... துப்பட்டா பறந்துட்டே இருந்துச்சு... அதா...” என்று சரியாக இருந்த துப்பட்டாவை மீண்டும் சரி செய்துக்கொண்டாள்.

“ம்ம்ம்.. பார்த்தே பார்த்தே.. துப்பட்டா பறந்ததையும் பார்த்தே... அதோட சேர்ந்து நீ கனவுலகுல பறந்ததையும் பார்த்தே... கொஞ்சம் பத்திரமா ஒக்காரும்மா... வீட்ல போய் விடனும்” என்று முறுவலோடு சொல்லிவிட்டு வண்டியை கிளப்பினான். வெக்கமாக போய்விட்டது அவளுக்கு.. என்னடா இது இப்படி அசிங்கபட்டுடோமே.. என்று நினைத்துக்கொண்டு மூளையை திட்டி நிகழ்காலத்திலேயே இருந்தாள்.

அவளை இறக்கிவிட்டு விட்டு வீட்டின் பலகணியை நிமிர்ந்து பார்த்தவன்.. அதில் வெளிச்சம் தெரியாமல் இருக்கவும்.. யோசனையோடு இருந்தான். அவனது முகம் மாறுவதை கண்டதும் “நான் போய் பார்த்துட்டு கால் பண்றேன் படுத்துருப்பாளா இருக்கும்” என்று அவனுக்கு தைரியம் கூறினாலும் அவளுக்குள்ளும் நடுக்கமாக தான் இருந்தது. அவன் கண்ணைவிட்டு நீங்கும் வரையும் மெதுவாக நடந்தவள், நகர்ந்ததும்.. இரண்டு இரண்டு படிகளாக தாவி... மூச்சிரைக்க வீட்டின் முன் நின்றாள், கதவு சாத்தாமல் வெளிச்சம் இன்றி இருக்கவும் இதயம் வேகமாக துடிக்க துவங்கிவிட்டது... “மெதுவாக கீர்த்தி... கீர்த்தி...” என்று ஒவ்வொரு விளக்காக போட்டாள்.

முதல் அறையிலேயே சோபாவில் சாய்வாக படுத்து கண்களை மூடி இருக்கவும்.. அருகில் போய் தலையை கோதிவிட்டு அவள் தூங்கிக்கொண்டு இருக்கிறாள் என்று உறுதி செய்துக்கொண்ட பின்பு தான் நிம்மதியாக இருந்தது அவளுக்கு. அவளது ஸ்பரிசத்தில் கண்விழித்தவள்... “வந்துட்டியா மித்ரா.. அப்பா எப்படி இருக்காரு???”

அதை போன் பண்ணி கேட்டுருக்கலாம் என்று சொல்ல வந்த நாவினை அடைக்கிகொண்டு “இப்போ பரவால்ல... இன்னும் 2 நாள் அங்க இருக்கணும்னு சொல்லிருக்காங்க..” என்றுவிட்டு எழுந்தாள்.

“ஓ... நான் திரும்பி வராமலே இருந்திருக்கலாம் இல்லையா மித்ரா...” அவள் சொல்லுவதை கேட்டவளுக்கு ஒருநிமிடம் பதறிப்போனது... “என்ன ஒளருற கீர்த்தி, நீ கிடைக்காம வீட்ல எல்லாரும் எப்படி இருந்தாங்கன்னு தெரியுமா... என்ன பேச்சு இது.. நீயும் அம்மா அப்பாவோட நிலைமை புரிஞ்சுக்கோ... கொஞ்சம் அவகாசம் வேணும்..” என்று பதட்டத்தில் பேசிவிட்டாள்.

சிறிது நேரம் கழித்துத்தான் அவளுக்கு கீர்த்தியின் மனநிலை புரிந்தது... அவள் கடந்து வருவது சிறிய துயரம் அல்ல.. அந்த நேரத்தில் நாம் இப்படி பேசுவதும் சரியல்ல என்று.. வெளியே வந்து பார்க்கும் பொழுது.. அங்கு கீர்த்தி இல்லை... சந்தேகத்தோடு அவர்களது அறையை பார்த்த பொழுது... அங்கு உறங்குவது போல படுத்திருந்தாள்...

“ச்சே.. என்ன மாதிரி தப்பு பண்றோம்... இப்ப நம்மள அவ தப்பால்ல நினைச்சிருப்பா... இனிமே அப்படி பேச கூடாது” என்று நினைத்துக்கொண்டாள்.

அருகிலே மித்ரா வந்து கண்ணயரும் வரை கண்கள் மூடியே இருந்தாள் கீர்த்தி.. மெதுவாக திறந்த கண்களில் கருவிழியை முந்திக்கொண்டு கண்ணீர் வெளியே வந்தது. என்ன தவிர்த்து மனதை திசை திருப்ப நினைத்தாலும் அது தோற்று போக அந்த முயற்சியையே கைவிட்டாள். வெளியே சொல்லுவதால் வந்த பரிசு தான் தந்தைக்கு ஏற்பட்ட விபத்து என்று மனம் பறை சாற்றியது. அன்னைக்கும் தன்னை பிடிக்கவில்லை, தங்கையும் தன்னை சிறிது சிறிதாக வெறுக்க துவங்கிவிடுவாள். இனி இங்கிருந்து என்ன செய்ய போகிறோம்.. நம்மால் இவர்களுக்கு இனி ஒருபோதும் மகிழ்ச்சி வர போவதில்லை.. சத்தமில்லாமல் அழுதாள் மூளை மனதை குழப்ப துவங்கியது...

வெளியே போ என்றால் எங்கே போவது?? மீண்டும் அந்த கொடியவனின் கையில் மாட்டிக்கொண்டால்??? அயோ என்று தூக்கிப்போட்டது... ஒரு சில வினாடிகள் ஆசுவாச படுத்திக்கொண்டாள்... சரி கீர்த்தி பொறுமையாக யோசி.. இனிமேலும் அம்மா அப்பாவால நீ கூட இருந்தால் நிம்மதியா இருக்க முடியாது.. உன்ன பத்தின நினைப்புலையே வேதனையில இருப்பாங்க... அடுத்து மித்ராவுக்கு கல்யாண பேச்சு வரும்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.