(Reading time: 19 - 38 minutes)

அப்போ கண்டிப்பா பிரச்சனையாகும்.. அதுக்கு நீ கூட இருக்க கூடாது... யோசி.. அதுக்கு நீ வீட்ட விட்டு போய் தான் ஆகணும்... என்று மனம் சொல்லிய அடுத்த நொடி சில்லிட்ட உணர்வு வந்தது..

கூட்டைவிட்டு வெளியே போக பயப்படும் குஞ்சினை போல வெளி உலகை பார்த்து பயப்பட்டாள் அதுவும் கீழே விழுந்து அடிபட்ட பறவையானது அடுத்த அடியை வைக்கவே பயந்தது..

ஒரு புறம் வீட்டினை பற்றிய கவலையும், மறுபுறம் வெளி உலகை பற்றிய பயமும் அவள் கண்முன் பூதாகரமாய் தெரிந்தது.

எதாவது ஊர்ல எதாவது லேடீஸ் ஹாஸ்டல் போய் இருந்திடலாம்.. இங்க இருக்குறதை விட அங்க போயிடலாம் என்றது மனம்.. ஆமா அதுதான் சரி.. போயிடனும் போயிடனும் என்று மனம் மீண்டும் மீண்டும் சொல்லிகொண்டது.. சில மணி நேரம் மனம் குழம்பி ஒரு முடிவுக்கு வந்ததும் ஒரு பெருமூச்சினை எடுத்துக்கொண்டு கண்களை மூடினாள்.

காலையில் இருந்து தந்தையின் அருகில் இருந்ததாலோ மனதில் இருந்த சோர்வோ அயர்ந்து தூங்கிப் போனாள் மித்ரா.. அவ்வப்போது கண்திறந்து மித்ராவை பார்த்தவளுக்கு.. இனிமேல் அவளை பார்க்க போவதில்லையே, சண்டை போட இனிமையாய் நேரம் கழிக்க தோழியாய் இனி யாரும் இருக்க போவதில்லையே என்று தோன்றியது.

வெகு நேரம் முழித்திருந்தவள் தகுந்த நேரம் வரும்வரை காத்திருந்தாள்.. தனிமையில் இருந்த பொழுதே இந்த மன மாற்றம் தோன்றிவிட முடிந்தவரை துணிகளை எடுத்து வைத்தாயிற்று. மனதில் முடிவு செய்திருந்தது போல..  தொலைபேசியில் மணியை பார்த்தாள், மணி 4 என்று பறைசாற்ற... சத்தமெழுப்பாமல் எழுந்து முன்பே எடுத்து வைத்திருந்த பையை ஒருமுறை திறந்து பார்த்துவிட்டு மெதுவாக கதவை திறந்தாள், போகும் முன்னர் தங்கையை திரும்பி பார்த்தவளுக்கு மனம் பாரமாக இருந்தது.. ஆனால் எல்லாம் அவளது நன்மைக்கு தான் என்று தேற்றிக்கொண்டு பெற்றோரின் புகைப்படத்தை கையில் எடுத்துக்கொண்டு.. பயப்பட கூடாது கீர்த்தி என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு... வீட்டில் இருக்கும் கத்தியை எடுத்து பையினுள் வைத்துக்கொண்டு... கிளம்பினாள்.

மணி கொஞ்சம் கடந்திருந்தது ஆனால் விடியவில்லை... வெகு சில ஆள் நடமாட்டம் தான் இருந்தது... குனிந்த தலையை தூக்காமல் எங்கு போகிறோம் என்று புரியாமல் பயணத்தை துவங்கினாள். மனதில் நான்கு ஐந்து ஊர்களை பார்த்து வைத்திருந்தாள், அங்கு இருக்கும் விடுதியின் எண்களை கூட தொலைபேசியில் குறித்து வைத்திருந்தாள். எந்த ஊருக்கு செல்வது என்பதையே முடிவு பண்ணாமல் கோயம்பேடு சென்றுவிட்டு நினைத்த ஊர்களில்  எது முதலில் கண்ணில் படுகிறதோ அதில் ஏறிக்கொள்ளும் எண்ணத்தில் இருந்தாள்.

இதய துடிப்பின் ஓசையில் அருகில் கடக்கும் வண்டியின் சத்தம் கூட கேட்காத அளவிற்கு  இதய கூட்டைவிட்டு வெளியே வந்துவிடுவது போல காதினுள் கேட்க, பயத்தில் சிக்கிக்கொள்ளும் கால்களை வேகமாக செல்ல மனதிலேயே திட்டுக்கொண்டு நடந்தாள்.. எப்படியோ மூச்சிரைக்க தூரத்தில் போகும் ஆட்டோவை கை காட்டி நிறுத்தினாள். நின்ற ஆட்டோவில் ஏறுவதற்குள் பதட்டதிலேயே வேர்த்து மூச்சிரைக்க.. “கோயம்பேடு... போகணும்...” என்றாள். 

“அதுக்கு எதுக்கும்மா இப்படி மூச்சிரைக்குது... ஏறு...” என்று சொல்லும் போதே...

“கீர்த்தி...” என்று கைகெட்டும் தூரத்தில் குரல் கேட்டது... கைப்பிடியை பிடித்திருந்த கைகள் இறுக திரும்ப யோசித்தாள், இதே குரல் தான் அன்றும் காப்பாற்றியது... அதே குரல் தான் இன்றும் தடுக்கிறது... இவ்வளவு காலையில் அவன் எதற்கு இங்கு வர போகிறான்.. என்று மனம் சொல்ல உள்ளே செல்ல உந்தினாள்... “கீர்த்தி கூப்பிடுறேன்ல...” என்று மீண்டும் கேட்டது அருகிலேயே...

“என்ன சார்... எதாவது பிரச்சனையா... வீட்ல எதாவது சண்டையா...” என்று கேட்டவரின் கண்கள் நொடிபொழுதில் கீர்த்தியின் கழுத்து நெற்றி கால் என்று அனைத்தையும் அளவிட்டது.. அவள் பேசாமல் சோர்ந்து போய் கண்கலங்க பிடியை விடுத்து நிற்கவும், அருகில் வந்தவன் ஓட்டுனரை பார்த்து.. “நீங்க போங்க..” என்றான்.

அவன் இருவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு.. “இப்ப இருக்க புள்ளைங்க எல்லாம் எங்க சேர்ந்து வாழுதுங்க... 2 இல்ல 3 நாளுலேயே அடிதடி சண்டைன்னு கட்டின தாலிய கூட தூக்கி எறிஞ்சுட்டு ஆத்தா அப்பன் வீட்டுக்கு போகுதுங்க” என்று அவர் புலம்பிக்கொண்டு போவது ஆட்டோ போகும் ஓசையிலும் மெல்லிய குரலில் கேட்டு தேய்ந்தது..

அவனது முகத்தை ஏறிட முடியாமல்... அவள் மறுபுறம் திரும்பியே இருக்க... அவளது கையில் இருந்த பையினை பார்த்துவிட்டு... “நினைச்சேன்... இந்த மாதிரி ஒரு முடிவுக்கு என்னைக்காவது வருவன்னு...” என்று அடக்கமான குரலில் கூறினான்.

அவள் பதில் ஏதும் கூறாமல் நிற்க.. “எங்க போனாலும் இவன் வந்து நிக்குறானேன்னு தோணுதா... எனக்கும் அதுதான் புரியல.. எனக்கு எதுக்கு இந்த சோதனைன்னு.. ஏதோ அதிஷ்ட வசமா ப்ரிண்ட ஏர்போர்ட்டில இருந்து இங்க ட்ரோப் பண்ண வந்தேன்.. இல்லனா ஓடி போயிருப்ப தானே...” என்று கொஞ்சம் எருச்சளோடு கடுமையாக பேசினான்.

மீண்டும் அவளிடம் எதுவும் பதில் வராமல் போக, “திரும்பு கீர்த்தி உன்கிட்ட தான் பேசுறேன்..” என்றான்.. அவனது குரலோ அதில் இருந்த கடுமையோ திரும்பினாள்.. தெரு விளக்கில் கன்னத்தில் வழிந்த கண்ணீரை பார்த்ததும் மனம் கொஞ்சம் இளகியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.