(Reading time: 22 - 44 minutes)

"வாருங்கள், அந்த ஆபத்தைத் தொடரலாம். அவனைப் பிடித்தால் ஏதேனும் விஷயம் வெளிப்படும் அல்லவா" என்று ஒருவன் கூறினான். மற்ற வீரர்களும் அவன் கூற்றை ஆமோதித்து அந்த காட்டுப் பாதையை நோக்கி சென்றனர்.

வெகுநேரமாகியும் வீரர்களைக் காணாமல் சம்யுக்தன் சிறிய மனக்கலக்கத்திற்கு ஆளானான். அதைப் பார்த்த பார்த்திபன், "ஏன் சம்யுக்தா, இப்படி கலக்கம் அடைகிறாய்? அவர்கள் வந்துவிடுவார்கள். ஒரு வேளை குதிரை கிடைக்காமல் இருக்கலாம் அல்லவா" என்றான். அந்த கருத்து சம்யுக்தனின் மனதிற்கு ஆறுதல் தரவில்லை.

ஏதோ ஒன்று தவறாக நடந்துகொண்டிருக்கிறது என்று அவன் மனதில் எச்சரிக்கை மணி ஒலித்தது. வீரர்கள் அவ்வளவு நேரம் வராததைப் பார்த்தால் ஏதோ ஒன்று நடந்திருப்பதைப்போல் தோன்றுகிறதே என்று அவன் சிந்தித்துக்கொண்டிருந்த வேளையில் அந்த ஓலையில் எழுதப்பட்டிருந்த வாசகம் மறுபடியும் அவன் நினைவுக்கு வந்தது. உடனே ஓலையை எடுத்துப் பார்த்தான்.

அதில், "உங்களை யாராவது சந்தேகித்தால், நீங்கள் உயிரோடு இருக்கக் கூடாது...." என்று எழுதி இருந்ததை பார்த்தான்.

தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் மீண்டும் அந்த ஓலையை உன்னிப்பாக படித்தபோது அதில், ஓர் ஓரத்தில் புகைபட்டு தெளிவாகப் படிக்கமுடியாத படி ஒரு வார்த்தை சிறியதாய் எழுதப்பட்டிருந்ததையும் கவனித்தான். அவன் கண்கள் அகல விரிந்து அவன் மூளைக்குள் ஓர் ஆச்சர்யகுறி தென்பட்டது. அது என்ன வார்த்தை என்று மனதில் எண்ணியவாறே அதைப் படித்தான். "மற்றவர்.." என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்த்து ஒரு கணம் அதிர்ந்து போய்விட்டான். இதை நான் எப்படி கவனிக்காமல் விட்டேன் என்று தன்னைத்தானே நொந்துகொண்டு, எஞ்சிய வார்த்தைகள் என்னவாக இருக்கும் என்று கற்பனைக் குதிரையை ஓடவிட்டான்.

"மற்றவர்களுக்கு தெரிந்துவிடக் கூடாது ...."

"மற்றவர்களுக்கு சந்தேகம் வருவதுபோல் நடந்து கொள்ளக் கூடாது.."

"மற்றவர்களுடன் நெருங்கிப் பழகக் கூடாது..."

இவ்வாறாக பலவாறு அந்த வாக்கியத்தை நிறைவு செய்து பார்த்தும் சம்யுக்தனுக்கு மனநிறைவு வரவில்லை. எதுவும் புலப்படவில்லையே என்று தன் காலை பூமியில் ஓர் உதை உதைத்து தன் வெறுப்பை வெளிப்படுத்தினான்.

அப்போது பார்த்திபன், "இன்னும் நம் எதிரியைக் காணவில்லையே. நம் வீரத்தைக் காட்ட சந்தர்ப்பமே கிடைக்காது போலிருக்கிறதே" என்று புலம்பிக்கொண்டிருந்தான்.

அப்போது சம்யுக்தன் பார்த்திபனைப் பார்த்து, "நான் உன்னிடம் சில கேள்விகள் கேட்பேன். உன் அறிவை உபயோகப்படுத்தி ஒழுங்காக பதில் கூறு" என்றான்.

பார்த்திபன், "நமக்கு அறிவு என்று ஒன்று இருக்கிறதா? இத்தனை நாட்களாய் என் கண்களுக்கு அகப்படவேயில்லையே" என்று முணுமுணுத்துக்கொண்டே சம்யுக்தனிடம், "என்ன வேண்டுமோ, கேள் சம்யுக்தா" என்றான்.

"இந்த சதித் திட்டத்திற்கு நீ தான் மூல காரணம் என்று வைத்துக்கொள்வோம்" என்று கூறினான். அதைக் கேட்ட பார்த்திபனின் முகம் வெளிறிவிட்டது.

"சம்யுக்தா, அதற்கு நான் காரணம் இல்லை. என்ன உளறிக் கொண்டிருக்கிறாய். குளிரில் மூளை மழுங்கி விட்டதா" என்று பதறிக்கொண்டு கேட்டான்.

"நான் வைத்துக்கொள்ளலாம் என்று தான் கூறினேன். நீ தான் காரணம் என்று சொல்லவில்லை. சரியாகப் புரிந்துகொள்"

"சரி, சொல்லு" என்று பார்த்திபன் பயத்தோடு கூறினான்.

"நீ தான் அந்த சதிகாரக் கூட்டத்திற்கு தலைவன். நீ உன் திட்டங்களை ஓலை மூலம் எழுதி உன் வீரர்களுக்குத் தெரியப்படுத்துகிறாய். அவ்வோலையில் 'இந்த ரகசியம் யாருக்கும் தெரியக் கூடாது. தெரிந்தால் நீங்கள் உயிரோடு இருக்கக் கூடாது' என்று எழுதிவிட்டு பிறகு, மற்றவர்....என்று ஒரு வாக்கியத்தைத் துவங்குகிறாய். அது என்ன வாக்கியம் என்று சொல்" என்று சம்யுக்தன் கேட்டான்.

"ஏன் இப்படிக் கேட்கிறாய்? எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது"

"எல்லாம் ஒரு விசயத்திற்காகத்தான். தயவு செய்து கூறு"

பார்த்திபன் சிறிது நேரம் யோசித்து, "நானாக இருந்தால்.....'மற்றவர்களுக்கு இந்த ரகசியம் தெரிய வந்தால், அவர்களும் உயிரோடு இருக்கக்கூடாது' என்று எழுதியிருப்பேன்" என்றான்.

அதைக் கேட்ட சம்யுக்தன், "அதே தான். அதே தான். இந்த வாக்கியத்திற்கும் நம் வீரர்கள் இவ்வளவு நேரம் வராமலிருப்பதற்கும் ஏதோ ஓர் ஒற்றுமை இருப்பது போல் தோன்றுகிறதே..." என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். அப்போது அவன் கண்களில் அந்த ஆற்றங்கரைக் காட்சி மின்னல் போல் வந்து சென்றது. ஒருவகையில் நமக்கும் அந்த ரகசியம் தெரிந்தது போல் தானே. நம் உயிருக்கும் ஆபத்து இருப்பதைப் போல் தெரிகிறதே. ஆம்..ஆம் இரண்டிற்கும் ஒற்றுமை இருக்கிறது என்று சொல்லிக்கொண்டான்.

சற்றும் தாமதிக்காமல் பார்த்திபனிடம், "நம் நண்பர்களை ஆபத்து சூழ்ந்திருப்பது போல் தெரிகிறது. நீ இங்கேயே இக்குடிசைக்கு காவலாக இரு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.