(Reading time: 22 - 44 minutes)

மன்னரைப் பணிய வைக்க அவன் செய்கின்ற சதித் திட்டங்களையும், அங்கு மார்த்தாண்டனைக் கண்காணிக்க ஒற்றர்கள் அனுப்பப்பட்டு அவர்கள் கொல்லப்படுவதையும் நினைத்துப் பார்த்தான்.

பின்னர், ஆற்றங்கரையில் நடந்த நிகழ்வுகளுக்குள் அவன் மனம் தாவிச் சென்றது. சங்கிலியில் எதோ ஓர் இணைப்பு விடுபட்டிருப்பதை அவன் மனம் சொல்லிக்கொண்டிருந்தது. சம்யுக்தனும் தன் கற்பனாசக்தியைக் கொண்டு அது என்னவாக இருக்கும் என்று யூகித்துப் பார்த்தான். அவனுக்கு ஒன்றும் பிடிபடவில்லை.

அப்போது இடுப்பில் வைத்திருந்த தீய்ந்த ஓலையை எடுத்து மறுபடியும் படித்தான். "உங்களை யாராவது சந்தேகித்தால், நீங்கள் உயிரோடு இருக்கக் கூடாது..." இதையே அவன் மனம் பல்லாயிரம் தடவை படித்தது. அதற்கான காரணம் தெரிந்தால், சங்கிலியின் இணைப்பு துல்லியமாக முழுமை பெற்று விடும். நடக்க இருக்கும் ஆபத்தையும் தடுத்து நிறுத்தலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தான்.

பனித்துளி அவன் மேல் மெல்லப் படிந்து அவன் கொண்ட ஆத்திரத்தை சற்று தணித்தது.  கண்கள் அந்த குடிசையை கண்காணித்துக்கொண்டிருந்தன. கூண்டிலிருக்கும் மானைத் தேடி எப்படியும் மோப்பம் பிடித்து சிங்கம் வந்து விடும். அதைத் தடுக்க, காவல்காரன் போல் காத்துக்கொண்டிருந்தான்.

அப்போது ஒரு குதிரையின் காலடி சத்தம் "டக்..டக்...டக் " என்று கேட்டது. சம்யுக்தன் சத்தம் வந்த திசையை நோக்கினான். பார்த்திபன் தான் கையில் தீப்பந்தத்துடன் குதிரையில் வந்து கொண்டிருந்தான்.

பார்த்திபன் ,சம்யுக்தனின் குதிரையைப் பார்த்து, "என்ன இவன், குதிரையை இங்கேயே நிறுத்தி வைத்துள்ளான். நாமும் அப்படியே செய்வோம். ஏதாவது தவறு நேர்ந்தால் எல்லாவற்றிற்கும் நானே காரணம் என்று ஒட்டு மொத்த பழியையும் என் தலையில் சுமத்தி விடுவான். எதற்கு வம்பு" என்று முணுமுணுத்துக் கொண்டே குதிரையை நிறுத்தி விட்டு சம்யுக்தனை நோக்கி சென்றான்.

பார்த்திபனைக் கண்டதும் சம்யுக்தன், "நீ மட்டும் வந்திருக்கிறாய். எங்கே மற்ற வீரர்கள்?" என்று கேட்டான்.

"அவர்கள் குதிரை லாயத்திற்கு சென்று குதிரையை எடுத்து வர சற்று நேரம் பிடிக்கும்" என்றான் பார்த்திபன்.

"நீ மட்டும் சீக்கிரம் வந்திருக்கிறாயே?".

"சீக்கிரம் வந்திருக்கிறாய் என்று மட்டும் கூறாதே. நான் நடந்து வந்திருந்தால் கூட இரண்டு நாழிகைக்கு முன்பே வந்து சேர்ந்திருப்பேன். அவனைப்போலவே இருக்கிறது அவன் குதிரையும்"

"யாரந்த அவன்?"

"அவன் தான், அவன் தானப்பா, உன் சொந்தக்காரனும் கூட, பேர் மறந்து விட்டதே" என்று தலையைச் சொரிந்தபடியே யோசித்து, "ஆங்..ஞாபகம் வந்துவிட்டது..பூபதி..பூபதி.."

சம்யுக்தன் நீண்ட பெருமூச்சை விட்டு சில அடிகள் முன்னே நடந்தான். பார்த்திபன் அவன் பின் சென்றுகொண்டே அவன் வந்த கதையை விவரிக்க ஆரம்பித்தான்.

"நான் வரும்போது என்னவோ, குதிரை மெதுவாகத்தான் வந்தது. வழியில் ஒரு பெருச்சாளி குறுக்கே ஓடியது. அதைப் பார்த்து பயந்த குதிரை வந்த திசையிலேயே திரும்பி ஓடியது பார்...அப்பப்பா...அப்படி ஓர் ஓட்டம். அதை அடக்கி திரும்பி வருவதற்குள் பாதி உயிரே போய்விட்டது"

பார்த்திபனின் நகைச்சுவையை ரசித்தபடியே நடந்துகொண்டிருந்தான் சம்யுக்தன்.

பார்த்திபன் கதையைத் தொடர ஆரம்பித்தான். "ஆனால் ஒன்று சம்யுக்தா, இந்த குதிரையை எடுத்துக்கொண்டு போர்களத்திற்கு சென்றால், கண்டிப்பாக உயிருக்கு உத்தரவாதம் இருக்கும். வாள்சண்டையை பார்த்து குதிரை பயந்து வந்த வழியே ஓடும். நாமும் தப்பித்துவிடலாம். எப்படி என் யோசனை?" என்று கேட்டான்.

அதைக் கேட்ட சம்யுக்தன், திரும்பி பார்த்திபனை முறைத்தான்.

"என்னை ஏன் முறைக்கிறாய். பூபதி, அவன் குதிரையை அப்படி பழக்கப்படுத்தி வைத்திருக்கிறான்"

குதிரை லாயத்தில் குதிரையைப் பெற்றுக்கொண்ட வீரர்கள் வேகமாக குடிசையை நோக்கி விரைந்தனர். உடலை நடுங்க வைக்கும்படி குளிர் காற்று வீசியது. மரங்களின் இலைகள் சர சர வென்று ஓசை எழுப்பிக்கொண்டிருந்தன. வீரர்கள் தங்கள் காரியத்தைச் செய்து முடிக்க வேகமாக சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, அவர்கள் சென்றுகொண்டிருந்த வழியில் ஓர் உருவம் கண்ணிமைக்கும் நேரத்தில் குதிரையில் கடந்து சென்றது. அதைப் பார்த்த நான்கு வீரர்களும் ஒரு கணம் திடுக்கிட்டனர். அவர்களைக் கடந்து சென்ற உருவம் காட்டுப்பாதையை நோக்கி சென்று மறைந்தது. அவ்வீரர்கள் செய்வதறியாது விழித்தனர்.

அப்போது அவ்வீரர்களில் ஒருவன், "யாரது? இந்நேரத்தில் காட்டுப்பாதையில் செல்வது?" என்று மற்ற வீரர்களைப் பார்த்து கேட்டான். "தெரியவில்லையே, இன்று நடப்பவை எல்லாம் விசித்திரமாக உள்ளது. கண்டிப்பாக இதுவும் ஓர் ஆபத்து தான்" என்று இன்னொரு வீரன் கூறினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.