(Reading time: 14 - 28 minutes)

தொடர்கதை - சண்முகசுந்தரியும்... சிங்காரவேலனும்... - 03 - ஸ்ரீலக்ஷ்மி

SS

 

'உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிக்கப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை...!! நிராகரித்தவருக்கே...!!'

*************

புயல் வேகத்தில் சென்று மறைந்த மகளையும் அவள் தோழிகளையும் பார்த்தபடிக் கேட்டருகில் இருந்த தமயந்தி அப்போதுதான் கவனித்தாள்.. அவர்கள் வாயிலை அடைத்தவாறு ஒரு டெம்போ நின்றுக் கொண்டிருந்ததையும் அதிலிருந்து சாமான்கள் இறங்குவதையும்..

சட்டென்று வீட்டில் நுழைந்த தமயந்தி.. "ஏங்க.. இங்கே பாருங்க..", என்று கணவனுக்குக் குரல் கொடுத்தாள்.

மாடியிலிருந்து ஹாலுக்கு இறங்கி வந்தவாறு, "ஏம்மா இப்போ என்ன.. ஒரு நிமிஷம் நான் போயி தயாராகி வரதுக்குள்ளே.. அப்படி என்ன நடந்து போச்சு.. பொண்ணை அனுப்பிட்டு உள்ளே நுழையும் போதே என்ன விஷயம்?.. செவிவழிச் செய்தியா இல்லை எதாவது டைரெக்ட் ஷூட்டிங்கா?.. சொல்லு.. கண்ணே..", என்றவரைப் பார்த்து முறைத்தவள்..,

"ம்ம்.. போதும் உங்க மொக்கை.. கொஞ்சம் வாசல் பக்கம் பாருங்க.. ஏதோ வண்டி வந்து நிக்கிது கேட்டுக்கு எதிரே.. நம்ம வீட்டுக்கு வரலை.. அப்போ..", என்று இழுத்தாள்.

"ஏண்டி உனக்கு இப்போ என்ன தெரிஞ்சாகணும்.. எங்க அண்ணன் வீட்டுக்கு யார் வந்திருக்காங்கன்னு தெரியணும் அவ்வளவுதானே.. அப்படியே ஒரு எட்டுப் போயி கேட்டுட்டு வந்துடறதுதானே.." என்று நக்கலடித்தார்.

"இதானே வேணாங்கிறது.. இப்படியே உங்க அண்ணன் வீட்டுக்குப் போயிட முடியுமா?", என்று தன் உடையைப் பார்த்துக் கொண்டாள் தமயந்தி.

ஐம்பத்திரெண்டு வயசு என்று கட்டாயம் யாராலும் மதிப்பிட முடியாதபடி அழகிய உருவ அமைப்புப் படைத்தவள் தமயந்தி.. நல்ல உயரமும் அதற்கேற்ற அளவான உடல்கட்டும்.. ஒரு முப்பது முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க தோற்றம்.. இன்றைய நாகரீகப்படிச் சல்வார் அணிபவள்.. அதுவே தனக்குப் பாந்தமாய்ப் பொருந்தும் வகையில் தேர்ந்தெடுத்து அணிவாள்.

அதுவே சிலசமயம் ரேணுகாவிற்கு அதுதான் அவள் கொழுந்தன் மனைவிக்குக் கடுப்பைக் கிளப்பும்.

'சின்னப் பொண்ணுக்குப் போட்டியாப் பேண்டை போட்டுகிட்டுத் திரியுறது நல்லாவா இருக்குது?..", என்று முகத்தைத் திருப்புவாள் ரேணுகா..

ஆனால் தமயந்தி இதையெல்லாம் கண்டு கொள்ளவே மாட்டாள்.. சிடி லைஃபில் வளர்ந்தவள்.. மேலும் கார் ஓட்ட, டூவீலர் ஓட்ட.. எனக்கு இந்த உடை கம்ஃபர்டபிளாக இருக்கு.. வெளியே போக வர.. ‘எப்பவும் புடவைக் கட்டிகிட்டு அது ஒரு இம்சை..’ என்பவள்.. அத்துடன் வீட்டில் நிறைய வேலைகளை அவளே செய்வாள்.. உதவிக்கு ஒன்றுக்கு மூன்று ஆள் இருந்தும் கூடச் சில வேலைகளை அவளாகவே செய்தால்தான் அவளுக்குத் திருப்தி.. அப்போதுதான் உடலும் மனதும் இளைமையாய் இருக்கும் என்ற நம்பிக்கை உடையவள்.

அவர்கள் இருந்த பகுதி ஒருகாலத்தில் சென்னையின் புறநகர்.. இப்போதோ அங்கே இடம் கிடைப்பதே பெரிய குதிரைக் கொம்பு.. என்ன வீடுகள் பெரிதாக இருந்தாலும் நகரத் திட்டமிடல் சரியானதாக இல்லாததால் தெருக்கள் அந்தளவுப் பெரிதாய் விசாலமாக இருக்காது.. அதே சமயம் குறுகலும் கிடையாது.

இவர்கள் வீட்டிலிருந்து பார்த்தால் தெருவில் நடப்பது நன்றாகவே தெரியும் அமைப்பில் தான் இருந்தது.

படித்தவளானத் தமயந்தி ஆரம்பத்திலேயே வீடு கட்டும் போழுதே நன்கு திட்டமிட்டுப் பின்புறம் விசாலமான தோட்டம், இரண்டு அடுக்கில் வீடு, பார்க்கிங்க், என்று பிளான் போட்டுக் கட்டிக் கொண்டாள்.

ரேணுகாவோ. "தோட்டமெல்லாம் எதற்கு.. இடம் வேஸ்ட்.. இதுவே பழைய வீடு.. மீதம் இருக்கும் இடத்தில் ஒரு அவுட் ஹவுஸ், மாடியும் கீழும் கட்டினா வாடகையாவது வரும்.. இந்தத் தேறாத டெக்ஸ்டைல் ஷோரூம் எப்ப விளங்கி.. நாம எப்ப உருப்பட.. அதான்.. விள்ளாம விரியாம.. அப்படியே ஒருவாரம் முன்னாடி குழந்தையைப் பெத்து ஆட்டைய போட்டுடாளே என் ஓரகத்தி..", ஒரு நாளுக்குக் குறைந்த பட்சம் ஒரு இருபது முறையாவது வயிறெரிவாள்.

அதனாலேயே தமயந்தி அடிக்கடி அங்குப் போக மாட்டாள்.. ஆனால் இங்குத் தோட்டத்தில் தமயந்தி கண்கானிப்பில் விளையும் காய்கனிகளை எடுத்துச் செல்வதற்கு மட்டும் இரண்டு மூன்று நாளுக்கு ஒருமுறை தன் மகளை அனுப்பிவிடுவாள்.. மகாக் கருமியான ரேணுகா.

எதையோ யோசித்தபடித் தன் கணவனை நிமிர்ந்து பார்த்தத் தமயந்தி.

"என்னங்க நீங்க.. நான் புடவைக் கட்டிட்டுப் போனாலே உங்க அண்ணி என்னை வறுத்து வாயில போட்டுப்பாங்க.. இதில் இன்னிக்குக் கொஞ்சம் வெளியே வேலை இருக்குன்னு சல்வார் வேறப் போட்டிருக்கேன்.. அவ்வளவுதான்.. என்னைத் தோலை உறிச்சுத் தொங்க விட்டுரும்.." என்று அலுத்துக் கொண்டாள்.

"ஏய் இதோ பாரு சும்மா ஏதாவது பிரச்சனைச் செய்யாதே.. இப்போத்தான் சண்முகம் விஷயத்தில் நொந்து போயிருக்கு எங்க அண்ணன் குடும்பம்.. சும்மா சாதாரணமாப் பேசுறதையெல்லாம் பெரிய விஷயம் ஆக்கக் கூடாது.. லட்டு.. போம்மா போயி அண்ணிகிட்டே ஏதாவது ஒத்தாசைத் தேவையான்னு கேட்டுட்டு வா.. அதான் மரியாதை..", என்று சொன்னவர்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.