(Reading time: 14 - 28 minutes)

"ஏண்டி வரனுக்குப் பேச வாரவங்க என்ன டெம்போவிலா வருவாங்க.. நல்லா எனக்கு வாயில வந்துரும்.. நம்ம அவுட் ஹவுஸ் மேல் மாடிக்கு ஒரு தம்பி குடி வந்துருக்கு.. அதான் இன்னிக்குச் சாமான் செட்டோட வந்து இறங்கிருக்கு..", என்று அவள் சொல்லி முடிக்கும் போதே வாயிலில் நிழலாடியது.

மூவரும் அந்தப்பக்கம் பார்த்தனர்.

அங்கே சுமார் இருபத்தெட்டு முப்பது வயது மதிப்பிடக்கூடிய ஒரு கம்பீரமான ஆண் கையில் ஒரு டிரேயுடன் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தாள் தமயந்தி.

மடக்கியிருந்த காலைச் சட்டென்று கீழே தொங்கவிட்டுத் தன் தலை அலங்காரத்தைச் சரிசெய்தபடி, "வாங்கத் தம்பி..", என்று குரல் கொடுத்தாள்.

சீரான நடையில் உள்ளே வந்தவன், "ஆன்ட்டி.. இந்தாங்க.. லேடீஸ் யாரும் இல்லை அதான் நானே பால் காய்ச்சி கொண்டு வந்திருக்கிறேன்..", என்று அமர்ந்திருந்த மூவருக்கும் பால்பாயாச கிளாசைத் தந்தான்.

மென்முறுவலுடன் பதவிசாய் டம்ளரை நீட்டியவனைப் பார்த்தத் தமயந்திக்கு அவனை ஏனோ உடனேயே ரொம்பவும் பிடித்துப் போனது.

"தாங்க்ஸ்" என்று சொல்லிப் பால் டம்ப்ளரை பெற்றுக் கொண்டவள்,

"உக்காருங்க சார்.. அது என்ன சார் எல்லோரும் பாலைக் காய்ச்சிக் கொடுப்பாங்க.. நீங்க பாயாசமே வைச்சிட்டீங்க..", என்று அவனை உபசரித்தாள்.

லேசாய்த் தயங்கியபடி ரேணுகாவைப் பார்த்துவிட்டு அமர்ந்தான் அந்த இளைஞன்.. “ஆமாங்க ஆன்ட்டி.. நிறையப் பேருக்குப் பால் பிடிக்காது.. அதான் டேரக்ட்டா பாயாசமே வைச்சிட்டேன்..” என்று பதவிசாய்ச் சொன்னவன்..

"ஆன்ட்டி.. இவங்க தான் உங்க பெண்ணா.. உங்களுக்கு இரண்டு மகள்களா?..", என்று கேட்டதுதான் தாமதம், ரேணுகாவின் முகம் இஞ்சித் தின்றார் போல் ஆனது..

மனதுள்.. 'பாதகத்தி.. குட்டிப் பொண்ணு மாதிரி டிரெஸ் போட்டுகிட்டு வந்திருக்காப் பாரு என் மானத்தை வாங்க..', என்று நினைத்தபடி..

"அய்யோ தம்பி என்ன காமெடி செய்யறீங்க.. தமா இவர் பேரு சிங்காரவேலன்.. தம்பி அது என்னோட ஓரகத்தி.. தமயந்தி இதோ இந்தப் பாப்பா மணிக்குட்டி தான் என் பொண்ணு.. சரி தம்பி.. நல்லா எல்லாச் சாமான் செட்டும் வந்து சேர்ந்துச்சா.. தனியாச் சமையல் எல்லாம் நீங்களே செஞ்சுக்குவீங்களோ?.. ஏன் அம்மா வரலையா?.. அன்னிக்கு அட்வான்ஸ் குடுத்தப்பவும் தனியாத்தான் வந்தீங்கன்னு நம்ம சார் சொன்னாரு.. அதான் கேக்குறேன்..", என்று நல்லவிதமாய்ப் பேசினாள்.

"ஓ.. அப்படியா.. நான் இவங்களைப் பார்த்ததும் சட்டுன்னு தோணிச்சுக் கேட்டேன்.. இல்லை ஆன்ட்டி அம்மா அதிகம் வரதில்லை எங்கப்பா போனதுக்கு அப்புறம்.. மேலும் தம்பி தங்கையெல்லாம் இருக்காங்கல்ல.. அதான் ஊரை விட்டு அதிகம் வரமாட்டாங்க..", என்று நிறுத்தினான்.

அப்பா இல்லை என்றானது அய்யோ என்றானது தமயந்திக்கு.. பாவம் எல்லாச் சுமையும் இவன் தலையில் தான் போல என்று நினைத்தவள்..,

"என்ன செய்யறீங்க தம்பி நீங்க.. இங்கே ஏதாவது வேலைக் கிடைச்சிருக்கா? சாஃப்ட்வேரா?..", என்று ஆர்வமாய் வினவினாள்.

"இல்லங்க மேடம்.. நான் அக்ரீ எங்கினீரிங்க் முடிச்சிருக்கேன்.. எங்கத் தொழில் விவசாயம்தான்.. மேல்படிப்பும் கொஞ்சம் ஜியாலஜியில் செஞ்சேன்.. இயற்கை வேளாண்மையில் கொஞ்சம் ரிசர்ச் செஞ்சிருக்கேன்.. சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் வேளாண்மையில் இயற்கையுடன் ஒன்றிப் பெருக்குவது.. மேலும் மண்ணின் வளத்தை எப்படிப் பாதுகாத்து அதற்கு ஏற்றார் போல் விவசாயம் செய்யலாம் என்று கொஞ்சம் படித்திருக்கிறேன்.. இப்போ இங்கே கூட மண் வளம் பற்றிய லைனில் பகுதி நேர லெக்சரராக வேலை எடுத்துக் கொண்டிருக்கிறேன் ஒரு காலேஜில்.." என்றவன்..

"ஒரு காலத்தில் நன்றாய்ப் பெரிதாக இருந்த எங்கள் விவசாய நிலம் காலப்போக்கில் ஒன்றுமில்லாமல் ஆகி இப்போ கையளவு நிலமாகக் குறுகிவிட்டது.. அதை மறுபடியும் பெரிதாக்குவதே என் திட்டம்.. அதற்காகத்தான் இந்தப் பார்ட் டைம் வேலைகள் மற்றும் இது சம்மந்தமாக் கன்சல்டன்சி நடத்துகிறேன்.." என்று தன்னைப் பற்றி ஒரு சிறு அறிமுகத்தைக் கொடுத்தான்.

"சூப்பர் சார்.. நல்ல எயிம் உங்களுக்கு.. நாடு இன்னிக்கு இருக்கும் நிலையில் விவசாயத்தைப் போற்றாவிட்டால் எல்லாம் மூட்டைக் கட்ட வேண்டியதுதான்.. அதுவும் இப்போ இருக்கும் நாகரீக மோகத்தில் விவசாயத்தைப் பார்க்க யார் தான் இருக்காங்க.. ஆனா இப்படி நீங்க வேலை எடுத்துகிட்டால் அங்கே யார் பார்த்துப்பாங்க?..", என்று தமயந்தி வினவினாள்.

"தாங்க்ஸ் ஆன்ட்டி.. விவசாயம்னாலே ஏதோ பஞ்சமாபாதம்கிற மாதிரி இப்போ நாட்டுலே யங்க் ஜெனெரேஷன் முகத்தைத் திருப்பிக்கறாங்க.. அதிலே நீங்கல்லாம் சப்போர்டிங்கா இருப்பது சந்தோஷமா இருக்கு.. அங்கே ஆளெல்லாம் இருக்காங்க பார்த்துக்க.. நானும் வாரக் கடைசியில் போவேன்.. சார் சொன்னார் உங்க பொண்ணுகூட அக்ரி எங்கினீரிங்க் தான் படிக்கிறதா.. இவங்கதானா அது.. எந்தக் காலேஜ்.. எந்த இடம்..", என்று தன் பார்வையை மணிமேகலையின் மீது ஓட்டினான் சிங்கார வேலன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.