(Reading time: 17 - 34 minutes)

தொடர்கதை - கன்னத்து முத்தமொன்று  - 01 - வத்ஸலா

Kannathil muthamondru

ர்....ரிஷ்!!! ஹர்ரி...,,,,ஷ்!!!! ஹர்ரி .ஷ்!!! மொத்த கூட்டமும் கூவிக்கொண்டிருந்தது

அவன் ஹரிஷ் சுவாமிநாதன்!!!

ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிதானப்படுத்திக்கொண்டான் அவன். நின்ற இடத்திலிருந்து சில அடிகள் நடந்து திரும்பினான்.

நெடுநெடு உயரமும் ஒற்றை பார்வையில் பல நூறு விஷயங்களை கிரஹித்து கொள்ளும் தீர்கமான பார்வையும் உச்சரிக்கும் வார்த்தைகளில் நிறையவே நிதானமும், ,பார்ப்பவர்கள் மனதில் ஒரு சின்ன மரியாதையை தோற்றுவிக்கும் கம்பீரமான நடையும் அவனது அடையாளங்கள்.

அவன் அருகில் ஓடி வந்து அவனை தோளோடு அணைத்து சிரித்தான் நண்பன் ரகு. ரகுராம் சுப்ரமணியன்!!! கண் சிமிட்டி கட்டை விரல் உயர்த்தினான்.

‘சும்மா அதிருது. கீப் ராக்கிங்..’ என்றபடி தட்டிக்கொடுத்தான் ஹரிஷை.

ஹரிஷும் அணைத்துக்கொண்டான் நண்பனை. ரகுவுடன் பழக்கம் ஏற்பட்டது இப்போது சில நாட்களாகத்தான். ஆனால் பார்த்தவுடன் ஒருவருக்கொருவர்  மனதால் நெருங்கிவிட்டது இவனுக்கே சற்று ஆச்சர்யம்தான்.

அரங்கமே தவிப்பின் எல்லையில் இருக்க நிதானத்தின் மொத்த உருவமாக நின்றிருந்தான் ஹரிஷ். பொதுவாக பதற்றம் என்ற ஒன்றை அவனிடம் காண முடியாது. அவன் கடந்து வந்த பாதைகள், அவன் அடைந்த தோல்விகள் எல்லாமே அவனுக்கு நிதானத்தை கற்றுக்கொடுத்திருந்தன.

அந்த நிதானமே அவனை இன்று செலுத்திக்கொண்டிருக்கிறது. மொத்த தேசமும் அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறது. அதற்கு மேலாக அவனை செலுத்திக்கொண்டிருக்கிறது அந்த பூங்கொத்து. ஆம் அவனது பூங்கொத்து!!!

அனுராதா!!!

அவளும், அவள் அவன் மீது கொண்டிருக்கும் அந்த நம்பிக்கையும், நேசமும் அவளே அறியாமல் அவள் அவனுக்கு பரிசளித்த அந்த பூங்கொத்தும் எல்லாமே அவனுக்குள்  உற்சாக மழையை பொழிந்துக்கொண்டிருக்கின்றன.

சில நாட்களுக்கு முன்னால் நடந்த அந்த நிகழ்வு நினைக்கும் போதே அவனுக்குள் பல நூறு உணர்வுகள்.

அன்று கோவையில் இருந்தான் அவன். நேரம் இரவு எட்டரையை தொட்டிருந்தது. வீடு முழுவதும் நிசப்தம். ஹாலில் அப்பா, அண்ணன், அண்ணி என அனைவரும் அமர்ந்திருந்தும் நிசப்தம். அப்போது ஒலித்தது அவன் கைப்பேசி.

‘சொல்லுடா..’

‘என்னடா எல்லாம் எடுத்து வெச்சிட்டு கிளம்பிட்டியா???’ அழைத்து கேட்டவன் அவனது நண்பன் ரகு.

‘எஸ். அல்மோஸ்ட் ரெடி..’ சொன்னான் இவன்.

‘எதிலே கிளம்பறே...’

‘பஸ்லே...’

‘பச்...ஏன்டா.. கார்லே வரவேண்டியதுதானே. வீட்டிலேதான் அத்தனை கார் இருக்கில்ல..’

‘அதெல்லாம் எங்க அப்பாவோடது. என்னோடது இல்லை.’ இவன் சற்றே அழுத்தி சொல்ல ஒரு நொடி விழி நிமிர்த்தி பார்த்த அப்பா மறுபடியும் லேப் டாப்பில் ஆழ்ந்தார்.

மறுமுனை கொஞ்சம் மௌனமானது. ஹரிஷின் நடவடிக்கைகளை இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக புரிகின்றன ரகுவுக்கு.

‘சரி... எதிலேயோ வந்து சேர்...’ சொல்லி முடித்தான் ரகு.

அப்பா சுவாமிநாதன் பெரிய தொழிலதிபர். இதில் எல்லாம் அவன் கால் வைப்பதில் பெரிய விருப்பம் இல்லை அவருக்கு..

முன்பு அவனுக்கு வந்த தோல்விகள், அவமானங்கள்  அவனை விட அவரையே அதிகம் பாதித்தது என்று சொல்ல வேண்டும். அதன் பிறகு அவனுடன் முகம் பார்த்து பேசுவதுகூட இல்லை. அதில் நிறையவே நியாயமும் இருக்கிறது.

இப்போது இந்த வாய்ப்பு கிடைத்த பிறகு வெளிப்படையாக எதுவும் சொல்லாவிட்டாலும் கொஞ்சம் ரகசிய புன்னகைகள்  மலர்கின்றன  அவர் முகத்தில்.

இவன் அழைப்பை துண்டித்த மறுநொடி நிசப்தத்தை கிழித்துக்கொண்டு ஒலித்தது அந்த குரல்.

‘சித்....த.....ப்.....பா..’

ஓடி வந்து அவன் கால் கட்டிக்கொண்டாள் அவனது அண்ணன் மகள் ஐந்து வயது அனுராதா. அண்ணன், அண்ணியின் முகத்தில் கூட நிறைவாய் ஒரு புன்னகை.

‘அனு பாப்பா ..’ மண்டியிட்டான் இவன். சட்டென இவன் கன்னத்தில் விழுந்தது முத்தம்.

‘தேங்க்யூ அனு பாப்பா ..’ அள்ளிக்கொண்டான் குழந்தையை. அந்த முத்தத்தின் ஈரம் அவனை எங்கோ கொண்டு சென்றது.

‘அனுராதா’ தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் ஒரு முறை. சில்லென்ற பனி மழையில் நனைந்த உணர்வு அவனுக்கு. அந்த பெயர் அவனது மனதின் அடி ஆழத்தில் பதிந்த பெயர். அவனே அறியாமல் அதே பெயரையே குழந்தைக்கும் வைத்திருந்தான் அண்ணன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.