(Reading time: 17 - 34 minutes)

ஏழு எட்டு  வருடங்கள் இருக்குமா அவளை பார்த்து???’ அவன் மனம் கணக்கு போட்டது. இப்போதெல்லாம் அவள் நினைவு அடிக்கடி வந்து வந்து போகிறது.

சில நொடிகளில் ஏதேதோ பழைய நினைவுகளில் விழுந்து எழுந்தான் அவன். சின்ன புன்னகையின் பின்னே தனது உணர்வுகளை மறைத்து விட்டு, குழந்தைக்கு ஒரு முத்தம் கொடுத்தான் .

‘சித்தப்பா... கிளம்பட்டுமா???’. வர டூ மந்த்ஸ் ஆகும்.

‘டூ மன்த்ஸ்ஆ??? இரண்டு விரல் காட்டி கேட்டது குழந்தை.

‘எஸ்.. பேபி.. வரும்போது உனக்கு பிடிச்சது எல்லாமே வாங்கிட்டு வரேன் சரியா..’ குழந்தையின் நெற்றி முட்டினான். ‘நீ தாத்தா, அப்பா, அம்மா எல்லார்கிட்டேயும் சொல்லிடறியா சித்தப்பா கிளம்பராங்கன்னு..’ என்றபடி குழந்தையை இறக்கி விட்டான் அவன்.

அது ஓடிச்சென்றது அவனது தந்தையிடம் ‘தாத்தா.. சித்தப்பா கிளம்பறாங்க..’

‘ம்...’ என்று ஒரு முறை குழந்தையை பார்த்து சொல்லிவிட்டு மறுபடியும் லேப்டாப்பில் மூழ்கினார். இல்லை இல்லை மூழ்குவது போல் நடித்துக்கொண்டிருந்தார். அது அவனுக்கும் தெரியும்.

பூஜை அறையின் முன்னால் சென்று சாஷ்டாங்கமாக விழுந்து எழுந்தான்.. அந்த மரியாதை இறைவனுக்கு மட்டுமல்ல அப்பாவுக்கும் சேர்த்துத்தான். இது அப்பாவுக்கும் தெரியும்.

‘அனு.. ‘ அப்பா அழைத்தார் குழந்தையை. சித்தப்பா மோதிரம் போட்டிருக்கானா பாரு.’ அவர் சொல்ல ரகசியமாய் ஒரு புன்னகை ஹரிஷின் இதழ்களுக்குள்.

‘மோதிரம் போட்டிருக்கானா பாரு.’ இதுதான் அவர் எப்போதும் அவனுக்கு கொடுக்கும் ஆசீர்வாதம். சில வருடங்களுக்கு முன்னால் ஒரு பிறந்தநாளைக்கு வாங்கி அவரே அவனுக்கு அணிவித்த வைர மோதிரம் அது.

‘அவர் அவனுடன் இருக்கமாட்டாரம். பேச மாட்டாராம். அவர் வாங்கிக்கொடுத்த மோதிரம் மட்டும் அவனுடன் இருக்க வேண்டுமாம்’. சிரித்துக்கொண்டான் மெல்லமாய். அதற்குள் வாசலில் டாக்சி வந்திருந்தது.

‘சித்தப்பா மோதிரம் போட்டிருக்கியா சித்தப்பா..’

‘மோதிரமெல்லாம் போடலைன்னு சொல்லிடு செல்லம். அது எனக்கு பிடிக்கலை. இனிமே போட மாட்டேன்.  நான் கிளம்பறேன்...’ சொல்லிவிட்டு பைகளை எடுத்துக்கொண்டு நகர்ந்தான்.

அவன் அந்த மோதிரத்தை அணிந்திருக்கிறான் என அவருக்கு நன்றாகவே தெரியும். அது அவருக்கு தெரியுமென அறியாதவனும் இல்லை இவன்.

ஜெயித்துவிடுவானா என் மகன்??? யோசித்தபடியே அமர்ந்திருந்தார் அப்பா.

கோவை பேருந்து நிறுத்தத்தில் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருந்தான் அவன். அங்கே இருந்த ஒரு சின்ன டீக்கடையில் ஒரு டீயை குடித்துவிட்டு, இரண்டு பிஸ்கட்டுகளை வாங்கி சுவைத்தபடியே நடந்துகொண்டிருந்தான் அவன்.

ஒரு வார தாடியும், மீசையும் கண்களை மறைக்கும் ரேபேன் கண்ணாடியும் என இருந்த  அவனை யாருக்கும் சட்டென அடையாளம் தெரிய வாய்ப்பில்லை. இப்போதையும்  விட இன்னும் சில நாட்களில் அவனை இன்னும் அதிகமான பேருக்கு அடையாளம் தெரிய வாய்ப்பிருக்கிறது.

யாருக்கும் எளிதில் கிடைத்துவிடாத மிகப்பெரிய வாய்ப்பு கிட்டியிருக்கிறது. அதனோடு கொஞ்சம் பொறுப்பும் கூட!!!

நிறைய பேர் இவனுக்கு கிடைத்த இந்த வாய்ப்பை அதிர்ஷ்டம் என்று கூட சொல்வார்கள். வாழ்க்கையில் அவன் சந்தித்த தோல்விகளைதாண்டி, அவமானங்களை தாண்டி இதோ அவன் கை தொட்டிருக்கிறது அந்த வாய்ப்பு. ஒரு வாசல் மூடி இறைவன் திறந்துவிட்ட இன்னொரு வாசல் இது என இவனுக்கு மட்டுமே தெரியும்.

என்னை பற்றி, எனக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை பற்றி அனுராதாவுக்கு தெரியுமா??? அவளுக்கு என் நினைவாவது இருக்குமா??? யோசித்தபடியே நடந்தான் ஹரிஷ்.

அவன் வாழ்க்கையில் சில நாட்கள் வந்து போன வெண்பனி சாரல் அவள். ஆனால் அப்போதெல்லாம் இவனுக்கு அவள் மீது நட்பு, காதல் போன்ற எந்த உணர்வும் தோன்றியதில்லைதான். சரியாக சொல்ல வேண்டுமானால் அவளை கத்தரித்து தள்ளி நிறுத்தவே முயன்றிருக்கிறான் இவன்.

அவன் நினைவுகளுக்கு சொந்தமான அனுராதா பல நூறு கிலோமீட்டர்கள் கடந்து, நான்கு கடல் தாண்டி, மூன்று மலைகள் தாண்டி எல்லாம் இருந்துவிடவில்லை. இதோ அந்த பேருந்து நிறுத்தத்தின் உள்ளேயே இருக்கிறாள் என்பதை அவன்தான் அறிந்திருக்கவில்லை.

அவனை நோக்கியே நடந்து வந்துக்கொண்டிருந்தாள் அவள். கையில் மூன்று நான்கு பைகள். அதனோடு ஒரு பூங்கொத்து என எல்லாவற்றையும் சுமந்துக்கொண்டு தனது தோழியிடம் அளவளாவிக்கொண்டே நடந்து வந்துக்கொண்டிருந்தாள் அவள்

வந்து நின்றது அந்த குளிர்சாதன வோல்வோ பேருந்து. ஏறி தனது இருக்கையை தேடி அமர்ந்தான். கன்னத்தில் குழந்தை அனுராதா கொடுத்த முத்தத்தின் ஈரம் இன்னமும் மிச்சமிருப்பதை போல் ஒரு உணர்வு. இவனது அனுராதாவும் மனதைவிட்டு இறங்க மறுத்தாள்.

‘இவள் ஏன் இப்படி படுத்துகிறாள் இன்று???’ சொல்லிக்கொண்டே இரண்டு கைகளையும் தேய்த்து விட்டுக்கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.