(Reading time: 13 - 25 minutes)

14. துடிக்கும் இதயம் உனதே உனது!!! - மது

Thudikkum ithayam unathe unathu

காதலில் கட்டுண்ட ஆண் பெண் மூன்று நிமிடங்களுக்கு ஒருவரை ஒருவர் உற்று நோக்கின் அவர்களது இதயத்துடிப்பு ஒரே தாள கதியில் இயங்குவதாக சொல்லப்படுகிறது

ர்ஷினி அடி மேல் அடி வைத்து அந்த அறையில் எட்டிப் பார்த்த போதே கதவின் பின் சென்று மறைந்து கொண்டான் ராம்.

அவள் உள்ளே நுழைந்து எட்டிப் பார்த்த வேளை பின்னோடு வந்து அவள் மெல்லிடையை  ஓர் கரம் கொண்டு வளைத்து அலாக்காய் தூக்கி தட்டாமாலை சுற்றினான்.

வர்ஷினி தன்னியல்பாய் திடுக்கிட்டது ஒரு கணம் தான். அன்றே ஜானவியின் நிச்சயதார்த்த விழாவின் போது சில நொடிகளே என்றாலும் தன்னவன் ஸ்பரிசம் அவளது ஒவ்வொரு அணுவிலும் பதிந்து போயிருந்ததே…

காற்றில்  அவள் ஊஞ்சலாட அவனது கரங்களில் இருந்தவாறே மெல்ல திரும்பி தன்னிரு கைகள் கொண்டு பூமாலையாய் ராமின் கழுத்தை அலங்கரித்தாள் அவனின் அர்ஷூ.

காற்றும் அவர்கள் தனிமையின் இனிமையைக் கலைக்க மனமின்றி சற்றே தள்ளி நிற்க இருவருமே அந்த இன்ப நிலையில் இருந்து வெளி வர மனமின்றி கட்டுண்டு கிடந்தனர்.

இரு இதயங்கள் காதல் பாடத்தை மௌன மொழியில் படித்துக் கொண்டிருந்த தருணம்.

காலமோ இங்கு எனக்கு ஏது வேலை என்று கடிகார முள்ளோடு தர்க்கம் செய்ய சென்று விட்டிருந்தது.

‘ராம்’ அந்த மௌனத்தின் கனம் தாங்க இயலாது அதை முதலில் உடைத்தாள் வர்ஷினி.

‘அர்ஷூமா’ அவள் இப்போது தான் மண்ணில் முதன்முதலில் கால் பதிப்பவள் போல மெல்ல அவளை இறக்கி விட்டான் ராம். தரைக்கு அவள் பாதங்களை தான் தாரை வார்த்தான். தன் அணைப்பில் இருந்து அவளை விடுவித்தான் இல்லை.

உரிமையாய் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள் வர்ஷினி.

இமைகள் மூடிய நிலையை மெல்ல துறந்த வர்ஷினியின்  விழிகளில் பட்டது அந்த அகலமான ஜன்னலும் அந்த ஜன்னலில் தனது வைர முத்தங்களைப் பதித்துக் கொண்டிருந்த மழைத்துளிகளும்.

‘ராம்’ அவள் அவனை அழைத்த விதத்திலேயே அவளது அழைப்பில் ஆச்சரியம் கலந்த கேள்வியை அவள் முகம் பாராமலேயே உணர்ந்து கொண்டான்.

எப்படி வந்தது இந்தப் புரிதலும் அன்னியோன்யமும். அவனுக்கே வியப்பு தான்.

‘இவள் பெயரைத் தவிர வேறேதும் அறியேன். இருந்தும்..’என்று சிந்தித்த நொடி அவளைப் பற்றிய விவரங்களை கேட்க எண்ணி அணைப்பை சற்றே தளர்த்தி அவள் முகம் பார்த்த நொடி

‘ராம்’ அவள் முகம் முழுவதும் கொள்ளை ஆனந்தம். அதில் கொள்ளைப் போனது அவனது மனமும் சிந்தையில் உதித்த கேள்வியும்.

‘என்னடா’ என்றான் அவன். மயிலிறகை தேனில் தோய்த்து வருடுவதைப் போல ஓர் இதம் பரவிற்று அவளின் உள்ளே.

நிலாவை மறைத்த மேகம் போல அவள் வதனம் மறைத்த முடி கற்றைகளை மெல்ல அவன் ஒதுக்கி விட கசிந்துருகித்தான் போனாள் பெண்ணவள். 

தேகம் முழுவதும் பாய்ந்தோடிய அந்த இனிய உணர்வினை கண்மூடி தன் நினைவுகளில் பதித்தாள்.

‘அர்ஷூ என்னடா’ அவன் மீண்டும் அழைக்க இப்போது அவளிடம் ஓர் குழந்தையின் குதூகலம் ஒட்டிக் கொண்டது.

‘மழை ராம்’ ஜன்னலை நோக்கி ஓடிச் சென்றாள் அவள்.

‘மை ஸ்வீட் பேபி’ மழையைக் கண்டு மழலையானவளிடம் மயங்கினான்.

அவள் அந்தப் பெரிய கண்ணாடி ஜன்னல் வழியே மழையை ரசித்துக் கொண்டிருக்க அவளைப் பின்னோடு அணைத்து அவள் தோளில் தாடைப் பதி்த்து தானும் மழையை ரசித்து நின்றான்.

‘மழைன்னா உனக்கு ரொம்ப பிடிக்குமா அர்ஷூமா’

‘ஆமா எனக்கு மழைன்னா ரொம்ப பிடிக்கும். அதை விட எனக்கு மழையில் நனைவது தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும்’ என்றவள் மேலே சொல்லும் முன் குறுக்கிட்டான் ராம்.

‘மழையில நனைவியா...நோ நோ   அது கூடாது’

இது என்ன இவரும் வருண் அண்ணா மாமா மாதிரி மழையில் நனைய கூடாதுன்னு சொல்றார் என்று சிணுங்கியவாறே ராமை நோக்கித் திரும்பியவள் பொய்க்கோபம் கொண்டாள்.

அவள் அவ்வாறு திரும்பியதும் ஒரு கையினால் அவளது கன்னத்தை மெல்ல வருடி ‘என் சக்கரக்கட்டி வெல்லக்கட்டி ஸ்வீட் பேபி மழையில கரைந்து போயிட்டா’ குறும்பு இழையோட அவன் சொல்லவும் வர்ஷினிக்கு உற்சாகம் தொற்றிக் கொண்டது.

‘மழை ஒன்னும் என்னை கரைச்சுடாது. நான் கரையாம இருக்க நீங்க அழாம இருக்கணும்’ அவள் சொல்லவும் புரியாமல் விழித்தான் ராம்.

‘நான் உங்க கண்ணுக்குள்ள தானே இருக்கேன். அப்புறம் எப்படி மழையில் கரைந்து போவேன். என் ராம் அழுதா தான் கரைஞ்சு போயிடுவேன்’ அவள் சிரித்துக் கொண்டே சொல்லவும் சட்டென அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

‘உன்ன கரைந்து போக விட மாட்டேன்டா செல்லம். நான் எப்போதும் அழவே மாட்டேன். என் கண்ணுக்குள் இதயத்தினுள் பத்திரமா பாதுகாப்பேன் உன்னை’ உணர்ச்சி பெருக்குடன் அவன் சொல்ல உருகி விட்டிருந்தாள் வர்ஷினி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.