(Reading time: 13 - 25 minutes)

‘நீங்க மழையில் நனைய மாட்டீங்களா. உங்களுக்குப் பிடிக்காதா’ அண்ணார்ந்து அவனைப் பார்த்துக் கேட்டாள்.

‘எனக்கு சூடா ஒரு கப் காஃபி குடிச்சிட்டே ஜன்னல் ஓரமா நின்னு மழையை ரசிக்கத்தான் பிடிக்கும்’

‘மழையில் மிளகாய் பஜ்ஜி இன்னும் சூப்பரா இருக்கும்’ அவள் சப்புக் கொட்டி சொல்லவும்

‘இங்க மிளகா பஜ்ஜி கிடைக்காது. ஆனா சூடா காஃபி கிடைக்கும்’ ராம் சொல்லவும் எப்படி என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்தி வினவினாள்  வர்ஷினி.

‘அதோ அங்க காஃபி மேக்கர் இருக்கு. மைக்ரோவேவ் கூட இருக்கு’ அந்த அறையின் ஓரத்தில் ஓர் தடுப்புக்கு அந்த பக்கம் இருப்பதாக சொன்னான் ராம்.

‘வாவ் சூப்பர். போய் சீக்கிரமா காஃபி போட்டுக் கொண்டு வாங்க ராம். மழை நின்னுட போகுது. எனக்கு நல்லா ஸ்ட்ராங்கா ப்ளாக் காஃபி சுகர் இரண்டு ஸ்பூன்’ அதிகாரமாய் உரிமையாய் அவள் சொல்லவும் சொல்லொண்ணாத ஆச்சரியம் ராமிற்கு.

சிறு வயதில் இருந்து இன்று வரை இப்படி உரிமையாய் சட்டமாய் யாரும் அவனை வேலை ஏவியது இல்லை.

ஹரிணி பூர்வி இருவருக்குமே இவன் உரிமை அளித்தும் ஒரு போதும் அவனிடம்  அவர்கள் இருவரும் அதிகாரம் செலுத்தியது இல்லை.

இப்போது வர்ஷினியின் செயல் ராமை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதில் வியப்பேதும் இல்லை.

விவரிக்க முடியாத உணர்ச்சிகளால் ஆட்கொள்ளப்பட்டு சிலையாக நின்றிருந்தான்.

‘எனக்கே எனக்கான என்னவள். என்னை அதிகாரமாய் ஏவிடும் என் இதய சாம்ராஜ்யத்தின் மஹாராணி இவள்’ அவன் ஒரு வித ஆனந்தத்தில் திளைத்திருந்தான்.

‘ராம் என்னாச்சு’ அவனின் மோன நிலையைக் கலைக்க அவனோ  அவளைப் பார்த்துப் புன்னகை செய்து வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘ஹையோ ராம் உங்களுக்கு காஃபி போட தெரியாதுன்னா சொல்ல வேண்டியது தானே. நான் சூப்பரா காஃபி போடுவேன். இருங்க நான் போய் போட்டுக் கொண்டு வரேன்’ அவன் சுட்டிக் காட்டிய அந்த தடுப்பு நோக்கிச் சென்றாள்.

அவனோ ஜன்னல் மேல் விழுந்த மழைத்துளிகளை ரசித்தவாறே அங்கேயே நின்று கொண்டிருந்தான்.

‘ராமிற்கு ப்ளாக் காஃபி பிடிக்குமா’ யோசனை செய்தவள் எனக்குப் பிடித்ததெல்லாம் என் ராமிற்கு கண்டிப்பாக பிடிக்கும் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

அங்கே இருந்த கப் நூடுல்ஸ் அவள் கண்களில் பட அதை எடுத்து மைக்ரோவேவ்வில் வைத்து சில குக்கீஸூடன் அனைத்தையும் ஒரு ட்ரேவில் அடுக்கிக் கொண்டு வந்தாள்.

‘காலையில் இருந்து சர்ஜரி செய்துட்டு இருந்திருப்பீங்களே. மதியம் என்ன சாப்பிட்டீங்களோ. அதான் நூடுல்ஸ் செய்தேன்’

அங்கிருந்த சோபா அருகில் ட்ரேயை வைத்தவள் அவனது கையைப் பற்றி இழுத்துக் கொண்டு வந்து சோபாவில் அமரச் செய்து நூடுல்ஸ் பௌலை அவன் கையில் கொடுத்து அவனது தலையை மெல்லக் கோதி விட்டாள்.

‘சாப்பிடுங்க ராம்’ அவள் சொல்ல அன்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று கணேஷ் ராமிற்கு விதித்திருந்தது போலும்.

சற்று முன்பு மழையைக் கண்டு மழலையாய் துள்ளி குதித்தவள், காஃபி போட்டுக் கொண்டு வா என்று ஏவிடும் ராணி மங்கம்மாவாக இருந்தவள், பசியறிந்து உணவை எடுத்து வந்து பரிமாறி இதமாய் தலை கோதி விடும் அன்னையாக மாறிப் போனவள் என அவளுடைய பரிமாணங்களைக் கண்டு வியந்தான்.

‘இவளே என் தாயுமானவள் என் சேயுமானவள். என் சகியும் இவளே என் சதியும் இவளே’

‘என்ன ராம் சாப்பிடாம ஏதோ யோசிச்சுட்டு இருக்கீங்க’ நின்றிருந்த நிலையிலேயே அவள் அவனைப் பார்த்து வினவ அவளை இழுத்து தன் மடியில் போட்டுக் கொண்டான்.

‘இத்தனை நாளா எங்கே இருந்த அர்ஷூமா’ அவள் கூந்தலில் முகம் புதைத்தவாறே அவன் கேட்க அவளோ அவன் முகம் பார்க்குமாறு வாகாய் அமர்ந்து கொண்டாள்.

‘இத்தனை நாளா இங்கே இருந்தேன்’ அவனது இடது மார்பை தொட்டுச் சொன்னவள் ‘என் ராம் சமத்து பையனா படிச்சு பெரிய டாக்டர் ஆகுற வரைக்கும் அமைதியா இங்கேயே இருந்தேனா.. இதுக்கு மேலேயும் பொறுமை இல்லாம உங்க முன் உங்க அர்ஷூவா வந்துட்டேன்’

அவன் மார்பில் சாய்ந்து கொண்டே அவள் சொல்லவும் சொர்க்கம் என்றால் இது தான் போலும் என்றே திளைத்திருந்தான் கணேஷ் ராம்.

‘என்ன ஒரு கப் காஃபி தான் இருக்கு’ காஃபி கோப்பையை கையில் ஏந்தியபடியே அவன் கேட்க

‘இனிமே நமக்கு ஒரே கப் தான் எப்போதும் சரியா’ என்று அவனது கைகளில் இருந்த கோப்பையைப் பற்றி உறிஞ்சினாள்.

அவள் உதடுகளை குவித்து உறிஞ்சும் அழகில் மயங்கியவன் சட்டென நிதானம் அடைந்தான். மெல்ல அவளை அருகில் அமர வைத்து தன் கைகளாலேயே அவளுக்கு நூடுல்ஸ் ஊட்டியும் விட்டான்.

‘நான் எவ்வளவு நல்ல பையன் தெரியுமா’

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.