(Reading time: 33 - 65 minutes)

நிச்சயதார்த்தம். புடவை வாங்க வேண்டும். அவன் உறவினர் கிளம்பிவிட்டனர். வீட்டில் அக்காவிற்கு உடல் நிலை சரியில்லை. பிரசவத்திற்கு வந்திருக்கிறாள் அவள். அம்மா அப்பா இருவரும் வரமுடியாத சூழல்.

அலுவலகத்தில் இருந்த எனக்கு தகவல் தந்தனர். அவனிடம் தெரிவித்தேன். அப்பாவிடம் அவனே பேசிவிட்டு என்னை குறிப்பிட்ட கடைக்கு வரச்சொன்னான். வாசலில் என்னை தனியாக வரவேற்றவன் என் காரை திருப்பி அனுப்பிவிட்டான். “மேடத்தை நானே வந்து டிராப் பண்ணிடுவேன்.”

“ஆன்டீஃஸ் என்ன சொல்லுவாங்கன்னுல்லாம் பார்க்காத...உனக்கு என்ன பிடிக்குமோ அதுதான் வாங்கனும்...நாம ரெண்டு பேரும் மட்டுமா வரலாம்னு நினச்சேன் பட் அது யாருக்கும் சரியா படலை..அதான்..” சொல்லிக்கொண்டே கூட்டி போனான். என் கண் பார்த்து பார்த்து ஒரு புடவை செலெக்க்ஷன்.

அனைவருமாக ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வந்திருந்தவர்களை வழி அனுப்பிவிட்டு அவனுடன் கிளம்பினேன். கொடும் மழை. வெள்ளம். சாலையில் வாகனங்கள் ஆங்காங்கே.

“இதுக்கு மேல கார் எங்கயாவது ஸ்ட்ரக் ஆகிடும், மாட்டிகிடுவோம்”. யார் யாரையோ அலைபேசியில் அழைத்தான். “எலெக்ட்ரிக் ட்ரெய்ன் மட்டும் உங்க ஏரியாவுக்கு போகுதாம். ரோட் ப்ளாக். கம்.”

இரவு மணி 10. என்றாவது ஒருநாள் உறவினர் திருமண ரிஷப்ஷனுக்காக, அவசர மருத்துவதேவைக்காக தவிர நான் வெளிவராத நேரம். இன்று இவனுடன் தெருவில். வாங்கிய புடவையை அதன் ப்ளாஸ்டிக் உரையுடன் தன் நெஞ்சோடு சட்டைக்குள் வைத்தான். இதை உங்க வீட்டில் குடுக்கனும்...கையில் வைத்திருந்தால் என்னவாம் நான் நினைக்கும் முன் அடுத்து அவன் இடுப்பில் சொருகியது பிஸ்டல். மிரண்டேன்.

என் கண்ணை படித்திருப்பான் போலும். “இத்தனை மணிக்கு உன் கூட தனியா....கண்டிப்பா வேணும்...” சில விஷயங்களில் இவன் நிச்சயமாக என் அப்பாதான். மனதில் தோன்றியது.

 மெல்ல நடக்க ஆரம்பித்தோம். மழை நின்றிருந்தது. சிறு சாரலும் ஆங்காங்கே காலுக்கடியில் ஓடும் நீரும், இரவும் அவனும். எதோ ஒரு பாதுகாப்பு உணர்வு.

நிச்சயமாய் இப்படியும் ஒரு நாள் என் வாழ்வில் வரகூடும் என கற்பனையிலும் கண்டதில்லை.

அவன் நடை கம்பீரம், அழகு என்று அப்பொழுதுதான் கவனித்தேன். கால்களும். ஆனால் என் உணர்வுகளை அவை தொடவில்லை. அலையடிக்கவில்லை மனம்.

சிறு வெளிச்சத்தில் அவன் பக்கவாட்டு தோற்றம் பார்த்தேன். சின்னதாய் சிரித்தபடி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். பேசியபடி ரயில் நிலையத்தை அடைந்தோம். எலெக்ட்ரிக் ட்ரெயினில் என் முதல் பயணம்.

மணி 11. “இந்த நேரத்தில் லேடிஸ் கம்பார்ட்மெண்ட் வேண்டாம். இங்க வா” சில ஆண்கள் குழுவாக ஒரு புறம் நிற்க மறு புறம் வாசலருகில் நான்.

அடித்து மோதி முக முற்றம் பெருக்கி, சாரல் நீர் தெளித்து கூந்தல் கோலமிட்டது காற்று.

என் மேல் படாமல் கண்ணிய தொலைவில் பிறை நிலவாய் என்னை முப்புறம் சூழ்ந்திருந்தான் அவன். வெளிச்சத்தில் அவன் சிரிக்கும்போது பற்கள் மீது தோன்றும் ஒளிசிதறலை கவனித்திருந்தேன் நான். இவன் அருகாமையில் ஏன் பயம் வர மறுக்கிறது?

மீண்டுமாய் ரயில் நிலையத்தில் இருந்து இருபது நிமிட நடை. நேரம் போனதே தெரியவில்லை. வீடு தூரத்தில் கண்ணில் தெரிந்ததும் “உன் அப்பாக்கு ஃபோன் செய்து கேட்டை திறந்து வைக்க சொல்லு...கார் இல்லன்றதால செக்யூரிட்டிக்கு நம்ம நிக்றது தெரியாம போய்ட போகுது.” அப்பாவை அழைத்தேன்.

கேட் திறந்து வாகன வெளிச்சம் பரவியது. காரை எடுத்துக் கொண்டு அப்பா எங்களுக்காக கிளம்பி கேட்டை அடையும் போது நாங்களும் அங்கே நின்றிருந்தோம். அப்பாவிற்கு நான் இவ்வளவு தாமதமாக வந்தது பிடிக்கவில்லை. ஆனால் யாரை குறை சொல்ல? மழையையா?

“கார்ல ஏறுங்க” இருவரையும் பார்த்து சொன்னார்.

“இல்ல அங்கிள். இது நல்லா இருக்குது. ‘ஜெ’ நாம நடந்தே போலாம்தானே?”

அப்பா முகம் பார்த்தேன். அவர் முகத்தில் மென்முறுவல். காரை எடுத்துக் கொண்டு ஷெட்டை பார்த்துப் போய்விட்டார். கேட்டிலிருந்து மெல்ல நடந்து இருவரும் வீட்டை அடைந்தோம்.

அப்பாவை பிடிக்கும் தான். ஆனாலும் அவரிடம் இருந்து கூட விடுதலை கிடைப்பதாய் இது என்ன உணர்வு. இவனும் நானும் மட்டுமே ஒரு குழுவாய். அதற்கே மொத்த விடுதலையும் கொள்முதலாய். இது என்ன?

இரவு இந்த நாள் எனக்கு ரொம்ப பிடிசிருந்தது என்ற நினைவுடன் தூங்கினேன். வெகு நாளைக்கு பின் இப்படி ஒரு நினைவு.

 நிச்சயம் முடிந்தது.

“இன்னைக்கு பீச் போலாமா?” மாலை ஆறரை மணிக்கு கேட்டான்.

“நான் நைட் பீச் போனதில்லை.”

வானம் பார்த்தேன். போய் சேரும் முன் இருட்டிவிடும் என நன்றாக தெரிந்தது.

அங்கிள்ட்ட நான் பேசிக்கிறேன். அப்பாவை அழைத்து அனுமதி வாங்கினான். “நானே ஜெ வ வீட்டில் கூட்டி வந்து டிராப் பண்றேன். பை அங்கிள்”

முதன் முறை இருட்டில் மெரினா. ஆங்காங்கே பஜ்ஜி கடை, ஐஸ், மக்காச்சோளம் இன்ன பிற வெளிச்ச குடைகள்.

அவைகளை கடந்து இருட்டுடன் விளையாடிய அலைகரைக்கு கால் நடத்தினான்.

என் உள்ளத்திற்கு எதிர்பதமாய் கடல். அலையடித்துக் கொண்டிருந்தது அது. மௌனமாய் நின்றவள் கண்களில் பக்கவாட்டில் சற்றுத் தொலைவில் இருந்த அவர்கள் பட்டனர். காதலுக்கு நான் வைத்திருக்கும் வரையறைக்கு உட்படாத விளையாட்டில் அவர்கள்.

பதறிவிட்டேன். மூச்சடைத்தது. சற்று தடுமாற கால் எதிலோ இடறி நான் சரிய என் இடையோடு அவன் கரம் வளையப்போவதை உணர்ந்து துள்ளி விலகினேன்.

“ஹேய்...” ஒரு கணம் வித்யாசமாக பார்த்தான். எனக்குமே அப்போதுதான் புரிந்தது அவன் செயல் என் மன ப்ரமை என்று.

அவனுக்கும் புரிந்துவிட்டது போலும். முகத்தில் சிறு குறும்பு இழையோட சொன்னான் “கல்யாணம் வரைக்கும் என் கை உங்க மேல படாது மேடம். தாராளமா என்னை நம்பலாம்.”

அவன் வார்த்தை மனதுக்கு பிடித்தது. சற்று வெட்கம் வேறு வந்தது.

அப்பொழுதுதான் அவன் கண்ணில் அவர்கள் பட்டனர் போலும். என்னை பயம் காட்டியவர்கள்.

“இந்த இடம் சரி படாது...வா” திரும்பி நடந்தோம்.

“எதாவது சாப்டுறியா? “

“இங்கயா?!!” என் வீட்டில் அது கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயம்.

“அப்போ இங்க சாப்டுறவங்க எல்லாம்..?”

ஒரு பஜ்ஜி கடையில் உட்கார்ந்தோம். திறந்த வெளி. கடல் காற்று. இரவு முதன் முதலாய் நான் சுவைத்த மிளகாய் பஜ்ஜி. வானத்தைப் பார்த்தேன். இந்த நேரத்தையும் எனக்காக வைத்திருந்தாயா? நன்றி தெய்வமே.

வழியில் பேசிக்கொண்டு வந்தான். “எனக்கு எந்த வேலையும் ஒழுங்கா செய்யனும்...இப்போ கடவுள் உன்னை எப்பவும் சந்தோஷமா வச்சுகிடுற வேலையை என்னை நம்பி தந்திருக்கிறார்....நான் அதை ஒழுங்கா செய்யனும்...”

இயல்பாய் அவன் பேசிக் கொண்டு போக விக்கித்து நின்றேன்.

இப்படி ஒரு குறிக்கோளோடு ஒருவனை அனுப்பியது நீதானா தெய்வமே. ஆனாலும் என் உணர்வுகள் இவனோடு உலை ஏறவில்லையே?

இது காதலின் முகவரி கிடையாதே!

வீடுவரை கொண்டு வந்துவிட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.