(Reading time: 33 - 65 minutes)

டெக்ஸ்டைல் படித்த என்னை அவனது ஆட்டோ மொபைல் தொழில் நிறுவனத்திற்கு தினமும் அழைத்துக் கொண்டு போவான்.

அத்தனை பற்றியும் என்னிடமும் விளக்கி அவன் கருத்தையும் தெரிவித்து அதன் மீது என் பார்வையையும் கேட்ப்பான்.

“இதில எனக்கென்னப்பா தெரியும்...?”

“தெரிஞ்சிருக்க வேண்டியது நிர்வாகம்தான் ஆட்டோ மொபைல்ஸ் இல்ல..”

அவன் பார்வை சூழலைத் தாண்டி இருக்க இதுவரை நேர்ந்ததில்லை.

தினமும் இரவு வீடு வந்ததும், டின்னருக்குப் பின், சோஃபாவில் படுத்துக் கொண்டு டி.வி பார்ப்பான். நியூஸ்.

அவன் தலைப்புறம் அமர்ந்து முடியை காலைப்பதில் எனக்கும் ஆர்வமே. சில நாட்கள் கலைத்த என் கரம் பற்றியபடி அப்படியே தூங்கியும் போயிருக்கிறான். அவன் தாயை சில மணி நேரங்கள் அவனுக்கு திருப்பி கொடுத்த உணர்வு தோன்றும் என்னுள். அப்படி அவன் என் கைபிடித்து தூங்கிய ஒரு நாள் அவனாய் விழிக்கும் வரை காத்திருந்ததற்குதான் முதன் முதலாய் அவன் கோபத்தைக் காண நேர்ந்தது. சிரிப்பு வந்தது எனக்கு.

“போடி என்னைப் பார்த்தா கோமாளியாவா தெரியுது....கோபபட்டா சிரிக்கிற...”

என் வீட்டில் வாடி போடி என்று டி போட்டு பேசும் வழக்கம் தபூ. என் முன் மற்றவரை பேசினாலே எரிச்சல் படுவேன். என்னை யாராவது பேசிவிட்டால் பாவம் அவர்கள். கடி நாயை என்னில் பார்க்க நேரிடும். ஆனால் இவன் சொல்லும் இந்த போடி மனதிற்குள் உரிமை நிலை, கிளர்வு மழை எல்லாவற்றையும் கொண்டு வருகிறது.

தினமும் படுக்கையில் மனதிற்கு தோன்றியதை எல்லாம் அலசுவோம். அப்படி ஒருநாள்.

“என்னை முதல்ல எப்படிப்பா தெரியும்? எப்ப பார்த்தீங்க? எப்படி கல்யாணம் செய்யனும்னு முடிவு செய்தீங்க...“

முன்பும் இதுபோல் கேட்டிருக்கிறேன் தான். ஆனால் ஏதோ ஒன்று இல்லாமல் ஒன்று என இதற்கு பதில் கேட்கும் சூழல் இல்லாமலே போயிருக்கிறது.

இன்று என்னை இழுத்து அணைத்தான். திருமண இரவிலிருந்து இப்படி ஒரு பழக்கம். அவ்வப்பொழுது அணைப்பான்தான். என் மனம் கனியுமே தவிர இப்படியாய் பதறியதில்லை. இன்றைய அணைப்பு என்னை எதிலிருந்தோ பாதுகாப்பதற்கான ஆயத்தம். ஆக வரப்போவது துன்பமா?

“சொல்றதை சரியா புரிஞ்சிகிடனும்டா....தப்பா எடுத்துக்க கூடாது...”

“ம்” வாய்சொல்ல மனமோ என்ன வரப் போகிறது என்ற தவிப்பில் நின்றது.

“மெட்டில்டா மேரேஜ்க்கு நானும் போயிருந்தேண்டா....”

தாய் பறவை இறகிற்குள் சிறைப் பட்டிருந்த குஞ்சாய் அவனுக்குள் இருந்த நான் தலை நிமிர்த்தி விழி உயர்த்தி அவன் கண்பார்க்க முயற்சித்தேன்.

இன்னுமாய் இறுகியது அவன் பிடி. முதல் முறை சொன்னான்.

“ஐ லவ் யூடா”

என் உச்சந்தலையில் முதல் முத்தம்.

அவன் மார்பிற்குள் கண் மூடிக் கொண்டேன்.

நிச்சயம் விஷயம் பெரிது. ப்ரின்ஸ் பற்றியது.

திருமணத்திற்கு முன்பும் ஸ்வரூப்பிடம் ப்ரின்ஸ் பற்றி குறிப்பிட்டு இருந்தேன். அலுவலகத்தில் உடன் வேலை செய்தவர். நண்பர். இறந்து விட்டார் என்பதாக.

காதலை மறைத்ததின் காரணம் திருமணத்திற்கு நான் சம்மதித்த நாளிலிருந்துதான் என் மீது உரிமை என்னை மணக்க இருப்பவனுக்கு வருகிறது. பழைய கதை அறிந்து தேவை இல்லாமல் எங்கள் வாழ்வை அவன் ஏன் வலியுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம். அதோடு ப்ரின்ஸ் பற்றி நான் அணைத்தையும் குறிப்பிடவில்லையே தவிர பொய் என்றும் எதுவும் சொல்லவில்லை.

மற்றபடி ப்ரின்ஸ் பற்றி பேசிக்கொண்டதில்லை.

மெட்டில்டா மேரேஜ் சென்று திரும்பும் வழியில்தான் ப்ரின்ஸ் இறந்ததே.

ப்ரின்ஸ் பற்றி இவனுக்கு தெரிந்திருக்கிறது.

இனி வரப் போவது என்ன?

விழுமோ இடி தலையில் நான் ஆயத்தம் இவன் கரத்தில். இறுகினேன்.

மேரேஜ் முடிஞ்சு திரும்பி ஈசி ஆர் ல வந்துட்டு இருந்தப்ப என் கார்க்கு முன்னால போன கார் ஆக்ஸிடெண்ட் ஆகிட்டு. இடிச்ச லாரி நிக்காம போய்ட்டான்.

மேரேஜ் முடிஞ்சதும் நாங்க அதாவது நானும் ப்ரின்ஸும் அவங்க அவங்க கார்ல கிளம்பி இருந்தோம்....மத்தவங்க ரிஷப்ஷ்னுக்காக வெயிட்டிங். ரோட்ல எங்களை தவிர வேறு கார் கிடையாது. அவர் அதுக்கு முன்ன அறிமுகம் கிடையாதுன்னாலும் கல்யாண வீட்டுக்கு வந்தவர்னு தெரியும்.

அவசரமா போய் ஃபர்ஸ்ட் எய்ட் செய்து ஆம்புலன்ஸ் போலிஸ் எல்லாத்துக்கும் ஃபோன் செய்தேன். உனக்கு தெரியும்னு நினைக்கிறேன். ப்ரின்ஸ் இறந்தது ஸ்பைனல் கார்ட் இஞ்சுரியில்.

சோ அப்ப அவர் லைஃப்க்காக ஸ்டரகிள் பண்ணிட்டு இருந்தார். அவர் பர்ஸில் இருக்கிற ஃபோட்டோவை எடுத்து டிஸ்கார்ட் செய்ய சொன்னார். அவரால.... அது முடியல.

தான் இறந்திடுவோம்னு அவருக்கு தெரிஞ்சிட்டு....அந்த போட்டோ போலிஸ் கைக்கோ மத்தவங்கட்டயோ போறது அவருக்கு இஷ்ட்டமில்லை. அதனால நான் எடுத்து வேகமா கிழிச்சு போட்டேன். அந்த நேரம் ஒரு செகண்ட் அந்த பொண்ணு ஃபேஸ் கண்ணில பட்டுது......

இயல்பில அந்த நேரம் இப்படி யாருக்கும் தோணுமான்னு தெரியல. ஆனா எனக்கு தோனிச்சு. அதுதான் என் வைய்ஃப்னு....

அடுத்த முத்தம் என் உச்சந்தலையில் பதித்தான் ஐஸ் கட்டியாய் பட்டது அவன் உதடுகள். என் தலை கொதித்துக் கொண்டிருந்ததே காரணம்.

ப்ரின்ஸ்க்கு ஃபைனல் ப்ரேயர்... நானும் சேர்ந்து செய்தேன்....உனக்காகவும் அவர் செய்துகிட்டார்....”

சுட சுட விழுந்தது என் தலை மேல் கண்ணீர். ஸ்வரூப் அழுகிறான்.

“நான் எதுவும் சொல்லலை ஆனா அவருக்கு என்ன புரிஞ்சிதுன்னு தெரியலை நதிய பார்துபீங்கன்னு தெரியுது என்றார். நிச்சயமான்னு சொன்னேன். சிரித்தபடியே ப்ரேயர் செய்துகிட்டே ஜீசஸ்ட்ட போய்ட்டார்.....

உன்னை ட்ரேஸ் பண்றது ஒன்னும் கஷ்டமா இல்ல. நீ ரெக்கவர் ஆகனும்னு ஒரு மூனு மாசம் கழிச்சு உங்க அப்பாட்ட பெண்கேட்டேன்....இல்லனா உங்கப்பா வேற மாப்ள பார்ப்பாங்களேன்னு.....”

ஆனா உங்கப்பா வச்ச சுயவர டெஸ்ட்தான் எனக்கு பக் பக்குனு இருந்தது. அத்தனை கேள்வி அத்தனை ஆராய்ச்சி. ..அப்புறம் நீ எனக்கு மெயில் பண்ண பிறகுதான் நான் செலக்ட் ஆகி இருக்கேன்னு...”

அவன் கைகளில் இருந்து என்னை உருவிக் கொண்டு கட கட வென அறையைவிட்டு வெளியேறினேன்.

“போங்க என்ட்ட பேசாதீங்க....எனக்கு உங்கள பிடிக்கல....சுத்தமா பிடிக்கல...நான் போறேன்...”

“ஹேய்...என்னாச்சுடா...” அவன் பதறியபடி பின் வருவது புரிந்தது. அவசரமாக கீழ் தளத்திலிருந்த அறைக்குள் அடைந்து தாழிட்டேன்.

“உன்ன இரக்கபட்டெல்லாம் நான் கல்யாணம் பண்ணல ஜுஜ்ஜு...”

நெக்ஸ்ட் ஃப்ளைட்டில் டிக்கெட் புக் செய்யனும் இனி இவனைப் பார்க்கவே கூடாது....அது மட்டும்தான் அறிவில் ஓடிக் கொண்டிருக்கிறது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.