(Reading time: 33 - 65 minutes)

 

நியூ இயர்.

இன்னும் 7 நாளில் திருமணம்.

ஈ சி ஆர் ரைட். மாமல்லபுரம் வரை சென்று திரும்பினோம். மாமல்லபுரத்தில் கூட நிற்கவில்லை. காரில் ஒரு சுற்று அவ்வளவே. மீண்டும் சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தோம்.

“இன்னும் நம்ம வெட்டிங் 6 டேஸ்தான் இருக்குது. 7த் டே வெட்டிங்“

“ம்”

“உன்ட்ட ஒன்னு பேசனும்..இப்ப பேசலாம்னு நினைக்கேன்..”

“சொல்லுங்க..”

“மேரேஜுக்கு அப்புறம் ஒரு ஒன் இயர் குழந்தை வேண்டாம்னு நினைக்கிறேன்....”

“...............”

“உனக்கு வேற ஒப்பினீயன் இருந்தா சொல்லு.”

“..........................”

“நாம ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்க இந்த ஒன் இயர்.

பின்னால நீ கன்சீவா இருக்கிறப்ப உன்னை நான் நல்லா பார்த்துக்க, அது யூஸ்ஃபுல்லா இருக்கும்”

“................”

அதனால ஃபமிலி ப்ளா....”

அவன் சலனம் உணர்ந்து திரும்பி பார்க்கும்போது நான் அழுது கொண்டிருந்தேன்.

“ஹேய்....என்னாச்சு ஜுஜ்ஜூ”

என் அழுகை குறையவில்லை.

“வீட்டுக்கு போகனும்.”

“என்னாச்சுடா...”

“இதெல்லாம் நீங்க பேசுனா எனக்கு பிடிக்கல...”

வீட்டில் கொண்டு வந்து விட்டான்.

னக்கு ஜுரம் ஆரம்பித்தது.

ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்தேன், படுத்துவிட்டேன். இரவெல்லாம் மனதில் அலை. குழப்பம். பிரட்டி எடுத்த கடும் ஜுரம்.

இவனோடு வாழ முடியாது. அதுதான் நான் கண்ட முடிவு.

மறுநாள் ஜுரத்தில் இழுத்து போர்த்தி சுருண்டு உட்கார்ந்திருந்தேன். எப்படியும் இத்திருமணத்தை நிறுத்த சொல்ல வேண்டும். எப்படி சொல்ல?

அம்மாவும் அக்காவும் என் கட்டில் மெத்தை முழுவதும் திருமணத்திற்காக எனக்கு வாங்கி இருந்த நகை பெட்டிகளை திறந்து வைத்து எதை எப்பொழுது போட வேண்டும் என ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.

இடையிடையே என்னிடம் ஏதாவது சொல்லியபடி. அறை கதவு அடைத்திருந்தது. அதில் தட்டலின் சத்தம்.

யார்?

தயங்கி அக்கா சிறு இடைவெளியாக எட்டி பார்க்க நின்றது அவன்.

பட்டென திறந்து “வாங்க வாங்க” என்றவள்

என்னிடமாக திரும்பி “ஸ்வரூப்” என்றாள்.

முதன் முறையாக என் அறைக்குள் அவன்.

என்னை கண் இமைக்காமல் பார்த்தான்.

“ஹாலோ ஆண்டி, ஹலோ அண்ணி...”

“வாங்க வாங்க” அம்மா மருமகனை உபசரிக்க

என் வாயில் கொழுகட்டை.

சிறு அளவளாவளுடன் மற்றவர் வெளியேறே அவன் என் முகம் பார்த்தபடி மௌனம் காத்தான் சிலநொடி.

“ஃபீவர்னு அங்கிள் சொன்னாங்க....” தகவல் என் வழியாக செல்லவில்லை என்ற குறை கூறல் அதில் இருப்பது எனக்கு தெளிவாக புரிந்தது.

“ம்.....அது வந்து எனக்கு இந்த மேரேஜ் சரி வராது.....நாம மேரேஜ நிறுத்திருவோம்......”

இதற்குள் என் கண்ணில் மழை. ஐயோ இப்போ எதுக்கு அழுகை வருது?

அவன் ரியாக்க்ஷன் நான் எதிர்பார்த்த எப்படியும் இல்லாமல் புன்னகையாக வெளிப்பட்டது.

“இப்படி கூட ஐ லவ் யூ சொல்ல வழி இருக்கா? செம” ....என் ஆரம்பித்தவன் சொல்ல வந்ததை சொல்லாமல் நிறுத்தினான்.

நான் பேந்த விழித்தேன்.

“உன் அம்மா அக்கா ரெண்டு பேரும் இங்க தான இருந்தாங்க...வெட்டிங் அரேன்ஜ்மென்ட் தான பேசிட்டு இருந்தாங்க....அவங்கட்டல்லாம் எல்லாத்துக்கும் தலை ஆட்டிட்டு உன் மனசில என்ன இருக்குன்னு என்ட்ட மட்டும் சொல்றியே இதுக்கு என்ன அர்த்தம்?”

நிச்சயமாய் இது நான் யோசிக்காத விஷயம் தான்.

இத்தனை நாள் பழக்கத்தில் மற்ற அனைவரை விடவும் இவனிடம் மனம் திறப்பது எளிதாயிருக்கிறது என்பதை நானும் உணர்ந்திருந்தேன். காரணம் கடித்து குதற மாட்டான் என்பதிலிருந்து எனக்கு பிடித்தமான முடிவுகளை செயல்படுத்துவான் என்பது வரை பல.

அப்பாட்ட அம்மாட்ட காரியம் சாதிக்ககூட இவன் தான் வழி.

இவன் எனக்கு என்னதாய் இருக்கிறான்? கடலில் அலைந்து வந்த கப்பலுக்கான சுக துறைமுகம்?

அடைக்கல பாறை?

இதுவரை இவனால் எனக்கு மன கஷ்டம் வந்ததில்லை. பிறர் மூலம் வரும் தொல்லைகளும் இவனைத்தாண்டி என்னை தீண்டும்போது அதன் வலுவிழந்திருக்கும்.

என்னை சூழ்ந்து நிற்கும் கோட்டை? அரண்? பூமி காக்கும் வளி மண்டலம்?

ஓ காதலிக்கபடுதலென்பது இது தானா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.