(Reading time: 18 - 35 minutes)

ன்ன ஆனாலும் சரி இன்றைக்கு முழு உண்மையும் தெரிந்துக்கொள்ளாமல் விடக்கூடாது. தேவை ஏற்பட்டால், அவளை நேரடியாக எதிர்கொண்டுனாலும் அறிந்து விட வேண்டும் என்ற உறுதி பூண்டான்.

கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்களாக அவர்களை பின் தொடர்கிறான். ஆனால் அவர்கள் செல்ல வேண்டிய இடத்தை சென்றடைந்ததாக தெரியவில்லை. இதில் இரண்டு முறைவேறு அவள் திரும்பி இவன் வண்டியை பார்த்து விட்டாள். தன்னை அவள் அறிந்துக்கொள்ள வாய்ப்பில்லை என்று நூறு சதவிகிதம் உறுதியாக தெரிந்திராவிட்டால் சிறிது அச்சமடைந்திருப்பான். இருந்தாலும் எதற்கும் முன்னெச்சரிக்கையாக இருக்கட்டும் என்று வண்டியை ஓரம் கட்டி போனை எடுத்து கால் வந்ததை செக் பண்ணுவது போல் நடித்தான். அவளின் வண்டி வெகுதூரம் செல்லும் வரை போனை நோண்டிகொண்டு இருந்துவிட்டு பிறகு அதை பாக்கெட்டில் வைத்து விட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான். தூரத்தில் அவள் திரும்பி பார்ப்பது போல் தெரிந்தது. தலையை உலுக்கி “சும்மா கற்பனை செய்யாதே” என்று தனக்குள் கூறியவன், அவர்களை தொடர ஆரம்பித்தான். அவன் அப்படி உறுதியாக நம்பவும் காரணம் இருந்தது. ஏனெனில் அவன் எங்கு சென்றாலும் காரில் செல்லும் வழக்கம் உள்ளவன். அவனுக்கும் காரில் போவதே பிடிக்கும் அதிகாலை வேளை தவிர. அப்பொழுது மட்டும் ஆளரவமற்ற சாலையில் அதிக வேகத்தில் பைக்கில் பயணிக்க மிகப்பிடிக்கும். அதற்காகவே அவனும் அவன் நண்பர்களும் மகாபலிபுரம் செல்லும் ரோட்டில் மாதம் இரு ஞாயிறு பைக் ரேஸ் வைப்பர். இன்றும் அதற்காக கிளம்பியவன் தான் அவர்களை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறான். அவனது ரேஸ் பற்றி அவன் வீட்டினர் கண்டிப்பாக பெண் வீட்டில் சொல்லியிருக்க மாட்டார்கள். பெண்ணின் பெற்றோர் பயப்படுவர் என்பது ஒருபுறமிருக்க திருமணம் ஆனால் அவன் அந்த ஆபத்தான(!) விளையாட்டை நிறுத்தி விடுவான் என்ற அவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை மற்றொரு காரணம். தேவையில்லாமல் இதை சொல்லி திருமணத்திற்கு எந்த பங்கமும் வரவேண்டாம் என்று அவன் தந்தை கூறிவிட்டார். ஆகையால் அவனிடம் பைக் இருப்பது அதுவும் ரேஸ் பைக் இருப்பதை அவள் கற்பனை கூட செய்திருக்கமாட்டாள். ஹெல்மெட் அணிந்திருப்பதால் அவனை அடையாளம் காணவும் வாய்ப்பில்லை என்று தன்னையே சமாதானம் செய்து கொண்டான். இல்லையேல் அவன் அவர்களை நெருங்கும் போது அவளின் வண்டி ஓரமாக நின்று கொண்டிருக்க அந்த வாலிபன் போன் பேசிக்கொண்டு இருந்ததை கண்டு சந்தேகப்பட்டிருப்பான். வண்டியை ஸ்லோவாக்கி அவர்களை கடந்து சென்றவனை சிலநிமிடங்களிலேயே அவர்கள் முந்தி சென்றனர்.

இறுதியாக இந்த சேஸ்ஸிங்கிற்கு ஒரு முடிவு வந்து அவளின் வண்டி ஒரு வீட்டின் முன் நின்றது. அவளும் அந்த வாலிபனும் இறங்கி உள்ளே சென்றனர். அவர்களை கடந்து சென்றவன் பக்கத்தில் இருந்த தெருவில் நுழைந்து ஒரு ஓரத்தில் வண்டியை நிறுத்தி விட்டு அந்த வீட்டை நோக்கி நடந்தான்.

குண்டும் குழியுமாக இருந்த ரோட்டில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருக்க...... எல்லா வீடுகளையும் ஒட்டி ஓடிக்கொண்டிருந்த சாக்கடை, வாசலை தவிர மற்ற இடங்களில் திறந்து கிடக்க.... ஆங்காங்கே குப்பையும் கூளமுமாக இருந்த பகுதியை பார்த்து முகத்தை சுளித்தான்.

சரி தெருதான் அப்படி இருக்கிறது என்றால் வீடுகளோ அதைவிட மோசம். பாசம்பிடித்து, பாதி சுவற்றில் பெயின்ட் உதிர்ந்து மிக மோசமாக காட்சி அளித்தது. அவளை கையும் களவுமாக பிடித்து உண்மையை அறிந்து கொள்ளவேண்டிய நிர்பந்தம் இல்லையென்றால் அவன் இப்படியே திரும்பி சென்றிருப்பான். வேறுவழியில்லை என்பதால் கோபமூச்சு எடுத்து விட்டு அந்த வீட்டை நோக்கி நடந்தான்.

அவன் கதவை தட்டியதும் திறந்தது அம்ருதாவே தான். ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால் அவனை பார்த்து புன்னகைத்து “வாங்க...உள்ள வாங்க” என்றபடி விலகி வழிவிட்டது தான்.

தன்னை பார்த்து அதிர்ச்சியோ..ஆச்சர்யமோ இன்றி புன்னகையோடு நின்றவளை புருவம் நெரிய, கண்கள் இடுங்க பார்த்தபடி உள்ளே சென்றான். ஆக தன்னை உறுத்திக்கொண்டிருந்த சந்தேகம் சரிதான். “தான் பின்தொடர்வதை அறிந்தே இருந்திருக்கிறாள்.... சொல்லப்போனால் தன்னை திட்டமிட்டே வரவழைத்திருக்கிறாள்... ஆனால் ஏன்?.” சரி அவள் வாயிலிருந்தே விசயம் வரட்டும் என்று எண்ணியவனாய் அவள் காட்டிய இருக்கையில் அமர்ந்து வீட்டை சுற்றி பார்த்தான். வெளியே உள்ளபடி தான் உள்ளேயும் சுவர்கள் இருந்தன. ஆனால் மற்றபடி வீடு சுத்தமாக இருந்தது. ஒரு சின்ன ஹால். ஒரு சமையல் அறை. ஹாலில் ஒரு மூலையில் ஒரு கட்டில். கட்டிலில் புத்தம் புதிய போர்வையும் இரண்டு தலையணைகளும் இருந்தது. இன்னொரு மூலையில் ஒரு ஸ்டூலில் சின்ன கலைஞர் டிவி இருந்தது. இரண்டே இரண்டு சேர்கள் அவன் அமர்ந்து இருப்பதையும் சேர்த்து... மற்றபடி எந்த பொருட்களும் இல்லாமல் வீடு காலியாக இருந்தது. சமையல் அறையில் பேச்சு குரல் கேட்டதிலிருந்து அவளையும் அந்த வாலிபனையும் தவிர  மற்றும் ஒருவர் இருப்பது தெரிந்தது. யாராய் இருக்கும் என்று அவன் யோசித்து கொண்டிருக்கும்போதே அந்த வாலிபன் வெளியே வந்து கரங்களை கூப்பி “வாங்க.... நான் தியாகராஜன்” என்றான். பதில் வணக்கம் சொல்லாமல் தியாகராஜனை  முறைத்துக் கொண்டிருந்தவனை கலைத்தது ஒரு பெண்ணின் குரல். “வாங்க... நான் தான் இவரின் மனைவி. ப்ளீஸ் ஜூஸ் எடுத்துக்கோங்க” என்றபடி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.