(Reading time: 18 - 35 minutes)

போன வாரம் நீங்க பவி(சுதாகரனின் தங்கை) கிட்ட கோபப்பட்டு சண்டை போட்டிங்களாம், நான் அவ கூட மட்டும் பேசுறேன்னு. அப்பதான் பவி சொன்ன எங்க அண்ணன் ரொம்ப நல்லவன். ஆனா அவன்கிட்ட ரெண்டு கெட்டகுணம் உண்டு அதை யாராலையும் மாத்தமுடியலை என்று” என்றவள் சிறிது இடைவெளி விட்டு “என்னன்னு யோசிக்கறீங்களா” என்றாள்.

இல்லை என்று தலையாட்டியவன் “எனக்கே தெரியும்.... ஆனா நீ சொல்ல வந்ததை சொல்லு” என்றான் பதிலாக.

“ஓகே.” என்றவள் “ஒண்ணு உங்க பொசசிவ் குணம், அதுவொண்ணும் பெரிய பிரச்சனையில்லை, அளவிற்கு அதிகமா போகாதவரை. ஆனா ரெண்டாவது விசயமா அவ சொன்னது... நீங்க ரொம்ப சுத்தம் பார்ப்பீங்க. சின்னப்பிள்ளையிலேயே  சாப்பாடு விசயத்துல அத்தை கிட்ட கூட எச்சில் கையால கொடுத்தா எதையும் வாங்கமட்டீங்க. அது வளர வளர அதிகமாக போய் மனிதர்களிடமும் சுத்தம் பார்த்து பழக ஆரம்பிச்சீங்கன்னு சொன்னா. சுத்தமா இல்லைன்னா அவங்க கூட பழக கூட யோசிப்பீங்கன்னு சொன்னா.” என்றவள் நிறுத்தி “இதோ இந்த வீட்டை பாருங்க, இந்த தெருவை பாருங்க, ரொம்ப அசிங்கமா இருக்குல்ல. நீங்க இங்க வரகூட யோசிப்பீங்கல்ல... ஆனா இந்த வீடும், இந்த மனிதர்களும் தான் அன்றைக்கு எங்களை தாங்கி நின்னு காப்பாதினாங்க. எங்களால முடிஞ்சது அவங்க வீட்டை சுத்தப்படுத்த உதவினோம். அதுக்கும் மேல எதையும் அவங்க ஏத்துக்கலை.அண்ணி அவங்க தாலி செயினை வித்து தான் சமாளிச்சாங்க” என்றவள் “ஆனா அன்றைக்கு நான் முடிவு பண்ணினேன். வெள்ளத்துல பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவுவது மட்டுமல்ல, சாதாரணமாகவும் கஷ்டபடுறவங்களுக்கு உதவணும்” என்று சொல்லிக்கொண்டே போனவளை இடையிட்டு “நான் அப்படி செய்யக்கூடாதுன்னு சொல்லலையே... நீ செய்ய நினைக்கிறது ரொம்ப நல்ல காரியம், நமக்கு பணம் ஒரு பொருட்டே அல்ல. நீ பிறருக்கு உதவுறதுக்கு நான் கணக்கு பார்க்க மாட்டேன்” என்றான் பெருந்தன்மையாக.

அவனது பதிலை தலையசைத்து மறுத்தவள் “ நீங்க இன்னும் புரிஞ்சுக்கலை, நான் பணத்தை பற்றியே பேசலை. பணம் மட்டும் தான் விசயம்னா நான் எங்க அப்பாகிட்ட கூட வாங்கிக்குவேன். இல்லைன்னா என் வருமானத்துல உதவிட்டு போவேன்.... எப்படி சொல்ல... நிறைய பணக்கார பெண்களை போல ஏதாவது ஒரு சோசியல் கிளப்ல சேர்ந்துட்டு பணத்தை மட்டும் கொடுத்துட்டு விளம்பரம் தேடிக்க நான் விரும்பலை. கஷ்டப்படுறவங்களை நேரடியா சந்திச்சு அவங்களுக்கு என்ன உதவி தேவையோ....அது பணமோ, இல்லை வேறு ஏதாவது உதவியோ அதை செய்ய முடிவெடுத்திருக்கிறோம். இந்த பதினைந்து நாட்களில் உயிர் பிழைத்த நாங்க அஞ்சு பேர் மட்டுமல்ல எங்க மத்த ப்ரெண்ட்ஸ்சும் சேர்ந்து ஒவ்வொரு பகுதியா போய் உதவுறோம், சேரி பகுதியிலும் கூட. எனக்கு தெரியும் உங்களுக்கு இந்த மாதிரி காரியம் பிடிக்காது என்று. ஆனா என்னால பணத்தை மட்டும் கொடுத்துட்டு ஒதுங்கிக்க முடியாது. ஒன்றரை நாள் மழையிலும், சாக்கடை நாற்றத்திலும், பட்டினியிலும் இருந்த போது.... ஒவ்வொரு வினாடியும் உயிர்பயம் இருந்த போது.... நிறைய விசயங்கள் ஒரு பொருட்டேயில்லைன்னு ஆயிடுச்சு. ஏன் அப்ப மீட்புகுழு நெருங்கி வரமுடியாம கொஞ்சம் தள்ளியிருந்து கிட்டு கயிறு மூலமா எங்களை மீட்க முயன்றிருந்தா, நான் சாக்கடை தண்ணீரில் நீந்தி போக கூட தயங்கியிருக்க மாட்டேன். அந்த அனுபவம்... அது கற்று தந்த பாடம்.... இப்பவும் அதை நான் மறக்கலை. மறக்கவும் விரும்பலை. நான் உங்களுக்காக சுத்தம் பார்த்துக்கிட்டு ஒதுங்கி போனா கடவுள் எனக்கு மறுஜென்மம் கொடுத்ததை கொச்சைபடுத்தற மாதிரி நான் நினைக்கிறேன். அதுக்கு தான் உங்களை இங்கே வரவழைச்சேன். இந்த பகுதியை பார்த்துட்டே நீங்க அருவருப்பு படுறீங்க. ஆனா இதைவிட இன்னும் மோசமான பகுதிகளுக்கு நாங்க போறோம். இனிமேலும் போவோம். உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா...” என்று சொல்லிக்கொண்டே வந்தவள் பாதியில் நிறுத்தி வறண்ட தொண்டையை செருமிக்கொண்டு “நம்ம கல்யாணத்தை” என்று முடிக்கும் முன் கரத்தை உயர்த்தி அவளை மேற்கொண்டு சொல்ல விடாமல் தடுத்தான்.

அவள் கல்யாணத்தை நிறுத்த சொன்னதில்.... நெஞ்சடைக்க, வார்த்தை வராமல் தொண்டையில் சிக்கியது. தொண்டையை செருமி சரிசெய்து “ நீ என்ன ஆசைப்படுற” என்றான் உணர்ச்சியை வெளிப்படுத்தாத குரலில்.

அவன் கண்களையே சிலநிமிடங்கள் ஆராய்தலாக பார்த்தவள், துணிந்து, “உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கலைன்னா நான் இவ்வளவு தூரம் மெனக்கெட்டிருக்க மாட்டேன். போன் மூலமாகவோ.. மெயில் மூலமாகவோ.. சொல்லிட்டு கல்யாணத்தை நிறுத்தியிருப்பேன்” என்றாள் அவன் முகத்தையே பார்த்து.

அவள் பதிலில் நிம்மதியுற்றவன் முகத்தில் புன்னகை தோன்ற “உனக்கு என்னை புடிச்சிருக்க மட்டும் தான் செய்யுது. ஆனா இந்த ஒரு மாசத்துல நீ எனக்கு எல்லாமுமாய் ஆகி போனாய்... அப்படியிருக்க உன் உயிர் எனக்கு முக்கியமல்லவா, என் எல்லாவற்றையும் விட உன் உணர்வு எனக்கு முக்கியம். நீ சொன்ன மாதிரி சின்னபிள்ளையில இருந்து உள்ள பழக்கம், ஏன் அப்படி என்று கூட எனக்கு தெரியாது, என்னையும் மீறி நடப்பது.. ஒரேநாளில் மாற்ற முடியாது. ஆனா உனக்காக நான் முயல்வேன்.” என்றவன் “ஆனால் நான் யாரையும் மரியாதை குறைவா நடத்துனது இல்லை. சுத்தமில்லைன்னா அவர்களிடம் பழகமாட்டேனே ஒழிய அவர்களை அவமதித்ததில்லை.” என்று கூறிக்கொண்டே சென்றவன் அவள் இடையிட முயன்றதை கரத்தை உயர்த்தி தடுத்து “என் தரப்பையும் சொல்ல வேண்டும் அல்லவா? அதான் சொன்னேன்” என்று முடித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.