(Reading time: 16 - 32 minutes)

 

சிவராமன் அவள் என்று சொன்னது நந்தினியை. அவனுக்கு உறவில் ஒன்றுவிட்ட மாமன் மகள். மூன்று சகோதரர்களுடன் பிறந்தவள். உடனே சின்னத்தம்பி படத்தில் வருவது போன்று பாசமான அண்ணன்கள் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு ஏமாற்றம்தான்.

சுயநலவாதிகளான அண்ணன்களுக்கு இடையில் பாசத்தை எதிர்பார்த்து வளர்ந்தவள். அந்த ஊரின் மிகப்பெரிய செல்வந்தர்தான் அவளின் அப்பா.

சின்ன வயதிலேயே நந்தினியை சிவராமனுக்கு மிகவும் பிடிக்கும். குண்டு கன்னங்களுடன் மருண்ட பார்வையோடு அவளைப் பார்த்த கணமே அவனுக்கு மிகவும் பிடித்துப்போனது.

அவன் நந்தினியை முதன் முதலில் பார்க்கும்போது அவளுக்கு ஒன்றரை வயது. அந்த வயதில் நடந்த மற்றவை மறந்திருந்தாலும் நந்தினி விசயம் அவன் மனதில் ஆழப் பதிந்து போனது.

அவர்கள் குடும்ப வகையறாவில் நடந்த திருமணம் அது. மணமகன் வெளியூர். அதனால் மணமகள் வீட்டில் பேருந்து ஏற்பாடு செய்து உறவினரை திருமணத்திற்கு அழைத்துச் சென்றனர். அவனும் தன் பெற்றோருடன் சென்றிருந்தான்.

அப்போது தாய் மடியில் அமர்ந்து குட்டி தேவதையாய் காண்போரை கவர்ந்திழுத்த அந்த குழந்தை அவனைக் கவர்ந்ததில் வியப்பில்லை.

அவன் பார்க்கும் போது அவளுக்கு என்ன தோன்றியதோ தன் தாயின் மார்பில் முகம் புதைத்துக்கொள்வாள். சிறிது நேரம் கழித்து தலையை மெதுவாக அவன் பக்கம் திருப்பி பார்ப்பாள். அவன் அவளையே பார்க்கிறான் என்றதும் மீண்டும் மறுபக்கம் திருப்பிக்கொள்வாள்.

மணமகன் இல்லத்தை அடையும் வரை இந்த நாடகம் தொடர்ந்தது. அவனுக்கு அவளை மிகவும் பிடித்திருந்தது.

“அம்மா! எனக்கு இதே மாதிரி பாப்பா வேணும்மா.”

“என்ன அண்ணி? மருமகன் ஆசைப்படறாப்பல. பதில் சொல்லுங்க.”

அவன் தாயிடம் கேட்க அருகில் நாத்தனார் முறையில் அமர்ந்திருந்த பெண் ஒருத்தி கேலியுடன் சாரதாவிடம் சொல்ல அவளின் முகம் சிவந்தது.

“ஏய்! சும்மா வாடா. போக்கிரி.” என்று செல்லமாய் மகன் முதுகில் தட்டினாள்.

அவளுக்குமே பெண் குழந்தைகள் என்றால் இஷ்டம். அதன் பிறகு அவன் தந்தையும் இறந்துவிட அவன் ஆசை நிறைவேறாமலே போனது.

ஒரே தெருவில் வசித்ததால் அடிக்கடி அவளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சில நேரங்களில் அவள் சகோதரர்கள் அவள் பக்கத்திலேயே அவனை நெருங்க விடமாட்டார்கள். அவன் சாரதாவிடம் வந்து முறையிடுவான்.

“அவங்களுக்கு உரிமையிருக்குப்பா. அவங்களோட தங்கை.” என்று சாரதா சமாதானப்டுத்துவது எதுவும் அவன் மனதில் ஏறாது. அவன் மனதில் பதிந்தது எல்லாம் அவள் அவனுக்கு உரிமையுள்ளவளாக மாற வேண்டும் என்பதுதான்.

அவள் கொஞ்சம் வளர்ந்தபிறகு அவளுக்கு அவன் பாடம் சொல்லி தந்திருக்கிறான். அவள் அண்ணன்கள் அவளிடம் வம்பிழுத்து அழ வைக்கும்போது சமாதானப் படுத்துவான். அவளை அழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அப்போதே அவன் ஆழ்மனதில் பதிந்துவிட்டது.

கல்லூரிப்படிப்பின் போது விடுதியில் தங்கியிருந்தாலும் அவளை பார்க்காமல் தாங்க முடியாததாய் வாரம் ஒருமுறை ஓடி வந்துவிடுவான். தகப்பன் இல்லாமல் வளர்ந்ததால் தன் தாயிடம் அவனுக்கு பாசத்துடன் ஒரு நட்புறவும் இருந்தது. அதனால் அவன் தாய் சாரதாவிற்கு மகனின் எண்ணம் புரிந்தது.

அவன் விருப்பம் ஈடேறாவிட்டால் மகன் தாங்குவானா? என்ற கவலை சாரதாவிற்கு இருந்தது. அவர்களோ பெரிய இடம். இவர்கள் சாதாரணமானவர்கள்.

சாரதா அவனிடம் புரிய வைக்க முயல வழக்கம் போல் தன் தரத்தை உயர்த்திக்கொண்டால் அவளுக்கான உரிமை தனக்கு கிடைக்கும் என்று புரிந்துகொண்டான்.

முழுமூச்சாக படிக்க ஆரம்பித்தான். அவளுக்காக தன் தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்ற வெறி அவனுள் எழுந்தது. அவளை சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற வைராக்கியம் பிறந்தது.

அவளுக்காக அவளுக்காக என்று பொருளைத் தேடி ஓடினான். ஜெயிக்கவும் செய்தான். ஆனால் காலம் கடந்துவிட்டது.

நந்தினியின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதால் ஏற்கனவே தாயும் இல்லாததால் தனக்கு பிறகு மகளுக்கு நல்ல வாழ்க்கை அமையுமா என்ற சந்தேகத்தில் அவள் படிப்பை முடிக்குமுன்னே அவள் திருமணத்தை முடித்துவிட்டார்.

மிக விமர்சையாக பெரிய இடத்தில் அவளின் திருமணம் நடந்தது. அதை அறிந்த சிவராமன் துடித்துப் போய்விட்டான்.

அதன்பிறகு அவனுக்கு ஊருக்கு வரவே பிடிக்கவில்லை.

தன் மகளின் எதிர்காலத்தை நல்ல முறையில் அமைத்துக்கொடுத்த திருப்தியில் நந்தினியின் தகப்பனார் மறைந்துவிட்டார். தங்கையின் திருமணத்திற்கு தந்தை வாரி இறைத்துவிட்டதாக அவர் மேல் ஏற்கனவே கோபமாய் இருந்த நந்தினியின் சகோதரர்கள் தந்தை இறந்த பிறகு தங்கையுடனான உறவை அறவே தவிர்த்துவிட்டனர். ஊருக்கு வரும் நேரங்களில் இதை தெரிந்துகொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.