(Reading time: 16 - 32 minutes)

தன்பிறகு நந்தினியைப் பற்றி அவன் தெரிந்துகொள்ள முடியவில்லை. முயன்றிருந்தால் நடந்திருக்கும். அவளை இன்னொருவன் உரிமையாக பார்ப்பதை அவனால் தாங்கிக்கொள்ள முடியுமா? என்று அவன் மீதே அவனுக்கு சந்தேகம் இருந்தது. அதனால் அவன் அந்த முயற்சியை எடுக்கவில்லை.

திருமணமான பிறகு அவர்களுக்கு முதலில் பெண் பிறந்த போது தனது பெயரையும் நந்தினி பெயரையும் சேர்த்து ‘சிவநந்தினி’ என்று வைத்தான். அடுத்து பையன பிறந்த போதும் ‘சிவநந்தன்’ என்று வைக்க வசந்தி நொந்து போனாள்.

“ஏங்க! உங்களுக்கு வேற பேரே கிடைக்கலையான்னு எல்லாரும் கிண்டல் பண்ணப்போறாங்க.” தனது ஆதங்கத்தை கேலி போல் வெளிக்காட்டியவள் வேறு வழியில்லாமல் ‘நந்தகுமார்’ என்று பெயரிட்டாள்.    

முதல்நாள் பேருந்து நிலையத்தில் பார்த்து அவளை தவறவிட்டிருந்த அதே இடத்திற்கு சென்றான். அவன் நினைப்பு பொய்க்கவில்லை. நந்தினி நின்றிருந்தாள்.

அவள் அருகே சென்று காரை நிறுத்தினான். அவளுக்கு ஆச்சர்யம்.

“சிவா!” விழிவிரித்து ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.

விவரம் தெரிந்த வயதில் அவள் அவனுடன் பேச வந்த போது

“அ..” என்று அவள் ஆரம்பிக்கும்போதே எங்கே தன்னை ‘அண்ணன்’ என்று அழைத்துவிடுவாளோ என்ற பயத்துடன்

“அண்ணேன்னு சொல்லி என்னை வயசானவா ஆக்கிடாதம்மா. சும்மா பேர் சொல்லியே கூப்பிடு.” உரிமை கொடுத்தான்.

“ஐய்யே! உங்களை எப்படி அண்ணன்னு கூப்பிடுவேன். நீங்க எனக்கு அத்தான்ல. ஆனா நீங்க என்னை அம்மான்னு சொல்லி ரொம்ப பெரியவளாக்கிட்டீங்க.”

போலித்தனமில்லாமல் சிரித்தவளை பார்த்து அசடு வழிந்தான். அதன்பிறகு அவள் அவனை சிவா என்றுதான் அழைத்தாள். அந்த அழைப்பு அவளுக்கே உரியது. மற்றவர்கள் அவனை ‘ராமன்’ என்றோ ‘ராமு’ என்றோ அழைத்தனர்.

“வா! வண்டியில் உட்காரு.”

தயக்கத்துடனே ஏறி அமர்ந்தாள். அவளது வீட்டு முகவரி கேட்டு அங்கே அழைத்துச்சென்றான்.

கோபமாக வீட்டிற்குள் நுழையும் கணவனை கண்ட வசந்திக்கு எதுவுமே புரியவில்லை. தொழிலில் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் அதை வீட்டளவுக்கு கொண்டு வரமாட்டான்.

அவன் பின்னேயே தங்கள் அறைக்கு சென்றாள்.

“என்னாச்சுங்க?”

“அவ தேவதை தெரியுமா? அவளை எப்படி வச்சிருக்கான்.”

யார் என்பதை சொன்னான். அவன் கோபம் நந்தினியின் கணவன் பிரசாத் மீது. நண்பனை நம்பி தொழிலில் இறங்கியிருக்கிறான். அவன் எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு கம்பி நீட்டிவிட்டான். அந்த அதிர்ச்சியில் அவனுக்கு பராலிசிஸ் அட்டாக் வந்து கை கால் செயலிழந்து படுத்த படுக்கையில் இருக்கிறான். கடன்காரர்களுக்காக இருந்தவற்றை எல்லாம் கொடுத்து விட்டு இப்போது ஒரு ஒண்டிக்குடுத்தனத்தில் கஷ்டப்படுகிறாள்.

வருமானத்துக்காக வேலை பார்க்கும் இடத்தில் அழகான பெண்களுக்கு உண்டாகும் அத்தனை தொல்லைகளும் கிடைக்க நொந்து கொண்டு வாழ்க்கையை நடத்துகிறாளாம்.

“அவளை எப்படி எல்லாம் வச்சிருக்கனும்னு ஆசைப்பட்டேன் தெரியுமா? அவளைப் போய் இந்தளவுக்கு கஷ்டப்பட வச்சிட்டான் அந்த முட்டாள்.”

கேட்கும் போதே வசந்திக்கு கஷ்டமாக இருந்தது. நந்தினினை நினைத்து மட்டுமல்ல. தன்னை நினைத்தும்தான். கணவனின் மனதில் தனக்கான இடம் என்ன? என்று தெரியாமல் இருப்பது மிகப்பெரிய கொடுமை.

“நான் அவளுக்கு நம்ம கம்பெனியிலேயே வேலை கொடுத்துட்டேன். இனி கொஞ்சம் கொஞ்சமா அவ புருசன்கிட்டயிருந்து பிரிக்கனும்.” கண்கள் பளபளக்க சொன்னவனை கண்டு கணவன் என்ன அர்த்தத்தில் பேசுகிறான் என்று திகிலடைந்தாள்.

கொஞ்சமாக அந்த நந்தினியின் மீது பொறாமையோடு சினமும் உண்டானது.

‘இந்த அத்தை இவருக்கு ராமன் என்று மட்டும் வைத்திருக்க கூடாதா?’ என்று ஏங்கினாள்.

கணவன் ஏகபத்தினி விரதனாக இருப்பானா என்று பயம் எழுந்தது.

குடும்பத்தோடு நந்தினி வீட்டிற்கு வந்திருந்தனர். அவர்களை விட்டுவிட்டு சிவராமன் சென்றுவிட்டான்.

நந்தினியை பார்த்த கணமே அவள் மேல் கொண்டிருந்த பொறாமை, கோபம் எல்லாம் கரைந்துவிட்டது. இன்னும் குழந்தைத்தனம் மிச்சமிருப்பதாகவே தோற்றமளித்த அவள் மேல் கோபத்தை இழுத்துப்பிடித்து வைக்க முடியவில்லை.

கணவனின் மேல் உயிராய் இருந்தாள். இவர்கள் குழந்தைகளின் பெயரைக் கேட்டுவிட்டு

“என்ன வேற பெயருக்கே பஞ்சமாகிவிட்டதா?” என்று சிரித்தாள்.

அவளுக்கு ஒரே பெண் குழந்தை.

நந்தகுமார் செல்போனை வைத்து விளையாடிக்கொண்டிருந்தான்.

இருவரும் சேர்ந்து சமைத்தனர். சாப்பிட்டு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.