(Reading time: 16 - 32 minutes)

மா! உங்களுக்கு முன்னாடியே கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொன்னாங்க. ரொம்ப நாள் கழிச்சு குழந்தை பிறந்ததா?”

“ஓ! என்னைப் பற்றி எல்லாம் பேசுவாரா?” ஆச்சர்யமாக கேட்டாள்.

‘உன்னைப் பற்றி பேசாமல் இருந்தால்தான் ஆச்சர்யம்.’ மனதுக்குள் நினைத்துக்கொண்டவள் சிரித்தாள்.

நந்தினியின் முகம் ஒளிர்ந்தது. அவள் பேசத்தயாரானாள்.

“எனக்கு சின்ன வயசுலேயே கல்யாணம் ஆயிடுச்சு. இவரும் அப்பாவோட நிலையை புரிஞ்சுக்கிட்டு உடனே என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். ஆனால் என்னை மனைவியா நடத்தலை. ஒரு குழந்தை மாதிரிதான் நடத்தினார். நான் என்ன சொல்ல வர்றேன்னு உங்களுக்கு புரியுதா? விட்டுப்போன படிப்பை தொடர வச்சார். இன்னும் சில கோர்சில் சேர்ந்து படிக்க வச்சார். நானும் இவர் தொழிலுக்கு உதவுமேன்னு படிச்சேன். அத்தையும் மாமாவும் எனக்கு இன்னொரு அம்மா அப்பாவா இருந்தாங்க. இதோ இவ பிறந்ததை பார்த்து சந்தோசத்துடனேயே எங்களை விட்டு போயிட்டாங்க. இவர் எல்லாரையும் நல்லவங்கன்னு நம்பிடறவர். அதனால்தான் இவருக்கு துரோகம் பண்ற நட்பை கண்டுபிடிக்க முடியவில்லை. இப்ப நான் உனக்கு பாரமா இருக்கேன்னு சொல்லி இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செஞ்சார். இவர் போனதுக்கப்புறம் எனக்கு இங்கே என்ன வேலை. அது புரியாம நடந்துக்கிறார். என்னை சின்னக்குழந்தைன்னு சொன்னவர் இப்ப சின்னக்குழந்தை போல் நடந்துக்கிறார்.”

அவள் பேசப்பேச பிரசாத்தின் கண்களில் கண்ணீர் வழிந்தது. பதறிப் போய் கணவனின் கண்ணீரை துடைத்தாள். அதிலேயே இருவரின் அன்யோன்யம் தெரிந்தது.

இது புரியாமல் சிவராமன் என்னவெல்லாம் பேசுகிறான்.

“எனக்கு ஒரு வயசிலேயே காது குத்திட்டாங்களாம். ஊரையே கூப்பிட்டு விருந்து வச்சாராம் அப்பா. இப்ப என் குழந்தைக்கு காது குத்த ஆசையா இருக்கு. ஆனால் அண்ணன் எல்லாம் விரோதியா பார்க்கிறாங்க. வேலைக்கு போயாக வேண்டிய கட்டாயம். அந்த நேரத்தில் வீட்டில் ஏற்கனவே வேலை பார்த்த தாத்தா ஒருத்தர் வந்து துணையா இருக்கார்.”

சற்று நேரத்திற்கெல்லாம் கிளம்பிவிட்டனர்.

வீடு வந்த பிறகும் வசந்திக்கு மனம் ஆறவில்லை. நந்தினி வாழ்வு எவ்வகையிலாவது சீர்பட வேண்டும் என்று ஆண்டவனை வேண்டினாள்.

சிவராமன் நினைத்தால் செய்ய முடியும். ஆனால் செய்வானா?

அன்றைய பொழுது அமைதியாக கழிந்தது. மறுநாள் மாலை சீக்கிரமாக வந்தவன் வசந்தியின் மடியில் படுத்து கதறித் தீர்த்தான். அவள் எவ்வளவு வற்புறுத்தி கேட்டும் சொல்லவேயில்லை. மறுநாளிலிருந்து ஏதோ வேலையாக அலைந்தான்.

டுத்த வாரத்தில் நந்தினி வந்தாள். அவள் முகம் மலர்ந்திருந்தது.

அவள் பொண்ணுக்கு காதுகுத்து விழாவாம். அது முடிந்ததும் பிரசாத்தை மருத்துவமனையிலேயே தங்க வைக்க ஏற்பாடாம். எல்லாம் சிவராமன் செய்தது என்று தெரிவித்தாள்.

‘ஓ! நிரந்தரமாக பிரிப்பதற்கான ஏற்பாடு ஆரம்பித்தாயிற்றா?’ கசப்புடன் நினைத்தாள்.

காது குத்து விழாவன்று ஏதோ சஸ்பென்ஸ் இருக்கிறது என்று சொன்னான் என்றாள்.

நந்தினி தன் கணவன் மேல் வைத்திருக்கும் அளவுகடந்த காதல் பற்றி தெரிந்தால் கணவன் என்னாவானோ? என்று கவலைப்பட்டாள்.

காதுகுத்து அன்று எளிமையாக நின்றிருந்த நந்தினிக்கு தனது நகைகளை அவள் மறுக்க மறுக்க அணிவித்துவிட்டாள். சிவராமன் அவளை மெச்சுதலாக பார்த்தான். வீல்சேர் கொண்டு பிரசாத்தும் அழைத்து வரப்பட்டிருந்தான்.

உரிய அழைப்பு கிடைத்தும் நந்தினியின் சகோதரர்கள் வரவில்லை. ஒரு தாய்மாமனாக காதுகுத்து, சடங்கு, கல்யாணம் என்று செலவு தொடருமாம். அதனால் ஆரம்பத்திலேயே உறவை துண்டித்துவிட்டார்களாம். அவர்களின் வாய்மொழியை யாரோ வந்து சொன்னார்கள்.

நந்தினியின் கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டன.

நல்லநேரம் போய்விட்டதாக பத்தர் கூற சற்றும் யோசிக்காமல் சிவராமன் குழந்தையை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்தான்.

கணவன் மனைவி இருவரும் நன்றியுடன் பார்க்க வசந்தியோ அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

விழா நல்லபடியாக முடிய அவன் ஒரு கவரை நீட்டினான்.

“இந்தா நந்தினி. அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர்.”

“வேலை கொடுத்த பிறகு ஆர்டர் கொடுக்கறீங்களே. இதுதான் சஸ்பென்சா?”

“பிரித்துப்பார்.”

பிரித்தவளின் கண்கள் வியப்பால் விரிந்தன.

பிரசாத்தை எந்த மருத்துவமனையில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதோ அங்கேயே அவளுக்கு நிர்வாகப்பிரிவில் வேலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“அங்கேயே தங்க வீடும் உண்டு. பிரசாத் சீக்கிரமே குணமாகி வந்துடுவார். வந்த பிறகு தொழிலுக்கான ஏற்பாடு செய்ய நானாச்சு.”

“கூடப்பிறந்தவங்களே என்னை கை விட்டுட்டாங்க. ஆனால் நீங்க…” கண்கள் கலங்க கூறினாள்.

“கூடப்பிறந்தாதான் பாசம் வருமா?”

அவள் தன் நகைகளை கழட்ட அதை தடுத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.