(Reading time: 24 - 47 minutes)

காலையில் எழுந்த ஜோதி இளவரசனை எங்கும் காணாததால் தங்கையின் அறைக்கு வந்தாள்.

இனியா அப்போது தான் எழுந்து அமர்ந்து கொண்டிருந்தாள்.

“என்னடி. இன்னும் அப்படியே உட்கார்ந்திருக்க. கிளம்பலையா. வெளியே போகணும் இல்ல.”

“எங்க போகறதுக்கு இப்ப கிளம்ப சொல்ற”

“என்னடி இப்படி பேசற. இப்ப நீ வெளிய போற ஐடியால இல்லையா”

“எதுக்கு போகணும்”

“உனக்கு என்னவோ ஆகிடுச்சி டீ. சரி இளவரசன் எங்கே. என்ன உனக்கும் அவருக்கும் திரும்ப சண்டையா”

“அதெல்லாம் ஒன்னும் இல்லை. அவர் நைட்டே கிளம்பி சென்னைக்கு போய்ட்டாரு”

“என்னடி சொல்ற”

“ஆமாக்கா. அவருக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்காம். அதான்”

“ஓ அதான் மேடம். சோகமா இருக்கீங்களோ.”

“இருக்காதா பின்ன”

“ம்ம்ம். இந்த ட்ரிப் பிளான் பண்ணி உங்க சண்டையை முடிக்கலாம்ன்னு பார்த்தா அது முடியாம போயிடுச்சே”

“சண்டையா. யார் சண்டையை நீ சமாதனம் பண்ண போற”

“அடிப்பாவி, என்னடி சமாதானம் ஆகிட்டீங்களா. ஓவர் நைட் ல இவ்வளவு சேன்ஜஸ்”

“பின்ன எப்படி. அவர் ஊருக்கு போனது எல்லாம் நான் சொல்றேன். இன்னும் சண்டைலையே இருந்தா எந்நேரமா இருந்தாலும் உங்களை எழுப்பி இல்ல சொல்லிட்டு போயிருப்பாரு”

“ம்ம்ம். சரி சரி. நீ நடத்து. அதை விடு. உங்க மாமாக்கு ஒரு ஒன் அவர் மட்டும் தான் வேலை இருக்காம். நாம வேணும்னா அப்புறம் வெளியே போகலாமா”

“இல்லக்கா. வேண்டாம். நாம வீட்டுக்கே போகலாம். வேற எங்கயும் வேண்டாம்”

“ஏன் டீ இப்படி சொல்ற. அப்புறம் நம்ம இங்கே வந்ததே வேஸ்ட். இப்படியே ரூம்ல இருக்கறதுக்கா நாம வந்தோம்”

“ஹிஹி. நான் வந்த வேலை முடிஞ்சிதுக்கா. சோ நோ ப்ராப்லம்”

“எல்லாம் என் நேரம் டீ. போயும் போயும் உனக்கு போய் ஹெல்ப் பண்ணேன் பாரு. என்ன தான் சொல்லணும்”

சிறிது நேரம் கழித்து வந்த பாலுவும் “ஏன் மா நாம வேணும்னா எங்கயாச்சும் வெளியே போகலாமே” என்றான்.

“இல்ல மாமா” என்ற இனியாவின் முகம் சரியில்லை.

“சரி விடுங்க. அவ தான் வேண்டாங்கறா இல்லை” என்றாள் ஜோதி.

“ஏய் நீ தானே. பாருங்க. அவ எங்கயாச்சும் போலாம்ன்னா கூட வர மாட்றான்னு பீல் பண்ண. இப்ப என்ன இப்படி பேசுற”

“ம்ம்ம். அப்ப சொன்னேன். பட் எனக்கும் இப்ப எங்கயும் போக வேண்டாம். நாம நைட் இங்கிருந்து கிளம்பினா அபி நாளைக்கு ஸ்கூல் போக முடியாது. இப்பவே கிளம்பலாம்” என்றாள்.

“ஏதோ நினைச்சி நினைச்சி பேசு” என்று கூறிவிட்டு பாலு போய் விட்டான்.

தங்கையிடம் வந்த ஜோதி “என்னடி. ஏன் ஒரு மாதிரி இருக்க. உங்களுக்குள்ள எல்லாம் சரியாகிடுச்சி இல்ல”

“ம்ம்ம். சரியாகிடுச்சிக்கா. ஆனா எனக்கு ஒரு மாதிரி இருக்குக்கா. மே பி அவர் நைட் கிளம்பாம இருந்தா ஒன்னும் தெரிஞ்சிருக்காதுன்னு நினைக்கிறேன். என்னவோ நேத்து தான் சண்டை சரியாச்சி. உடனே அவர் போன உடனே ஏதோ பிரிஞ்சிட்ட மாதிரி கஷ்டமா இருக்கு”

“ஹேய் லூஸ் மாதிரி எல்லாம் தின்க் பண்ணிக்கிட்டு இருக்காத. உங்க மாமா எங்கயாச்சும் போனா எனக்கு கூட தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். அதுக்காக இப்படி எல்லாம் நீ ரொம்ப ஓவரா யோசிச்சி உன்னையே கஷ்டபடுத்திக்காத. நாமளும் இன்னைக்கே சென்னைக்கு போக போறோம். அதுக்குள்ளே ஓவரா பீல் பண்ணிக்கிட்டு”

“ம்ம்ம். நான் போய் அபியை ரெடி பண்றேன்க்கா”

சென்னை திரும்பி வந்த பிறகும் இனியாவால் இளவரசனை பார்க்கவோ, அவனிடம் வெகுநேரம் பேசவோ இயலவில்லை. ஆனால் அதற்காக பேசாமலும் இல்லை. என்ன தான் வேலை இருந்தாலும், அவன் உணவு அருந்தும் முன்பு இனியாவிற்கு அழைத்து பேசுவான். ஆனால் சிறிது நேரத்திலேயே அவனுக்கு ஏதோ வேலை வந்து விடும். இவ்வாறே நடந்து கொண்டிருந்தது.

இரண்டு நாட்கள் கழித்து இனியாவிற்கு போன் செய்து குஜராத் போவதாக கூறினான்.

இனியாவிற்கு தான் ஏதோ மிகவும் வருத்தமாக இருந்தது.

தாங்கள் அந்த சண்டைக்கு பிறகு சேர்ந்தும் இன்னும் ஒழுங்காக பேசிக் கொள்ள கூட நேரம் இல்லாமல் அவன் இருப்பது ஏதோ அவளுக்கு மன வருத்தத்தையே தந்தது.

அவன் ஏர்போர்ட் செல்லும் போது அடம் பிடித்து போய் பார்த்து விட்டு வந்தாள்.

இவள் கண்களில் வெளிப்படையாக தெரிந்த ஏக்கத்தை கண்ட இளவரசனுக்கு தான் மனம் பாரமாகி போனது.

“ஹேய் செல்லம். மாமா எங்கே போறேன்னு இப்ப உனக்கு இப்படி பீலிங்க்ஸ். திரும்ப வர தானே போறேன். வராமலா போக போறேன்”

“என்ன இளா இது. இப்படி பேசறீங்க.” என்று இனியா கண்கலங்கி விட்டாள்.

“என்னடா இது. நான் ஏதோ வாய் தவறி பேசிட்டேன். ப்ளீஸ் இப்படி பப்ளிக்ல போய் கண் கலங்கிக்கிட்டு” என்று கூறியவனாலும் அதற்கு மேல் பேச இயலவில்லை.

தனக்காக ஒரு பெண் கண்ணீர் சிந்துகிறாள் என்றால் எந்த ஒரு ஆண்மகனுக்கும் தெரியும், அப்பெண் அவனின் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாள் என்று. அதை நினைத்து அவன் சந்தோசப்படுவான், பெருமை படுவான், கர்வ படுவான், உணர்ச்சி வசப்படுவான்.

இளவரசனும் அந்த நிலையில் தான் இருந்தான்.

எவ்வளவோ நாட்களாக தெரியாத அன்பெல்லாம் தனக்கு எதிரிலிருக்கும் நபர் தனக்காக விடும் அந்த கண்ணீர் துளியில் அவர் நம் மேல் வைத்திருக்கும் ஒட்டு மொத்த அன்பும் காட்டாற்றை போல் தெரிய வரும்.

இத்தனை வருடங்கள் இவள் யாரென்றே தனக்கு தெரியாது. வெகு சில மாதங்களாகவே தெரியும். இருவரும் ஒருவருக்கொருவர் விரும்பியும், சண்டைக்கு மேல் சண்டை போட்டுக் கொண்டாயிற்று.

இப்போது ஏதோ வாய் தவறி பேசிய ஒரு வார்த்தைக்காக அவள் விடும் கண்ணீர் அவளின் அன்பை அவனுக்கு காட்டியது.

இளவரசன் கனவில் மூழ்கியவனை போல் இனியாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

இப்போது தான் பப்ளிக் ப்ளேஸில் இருக்கிறோம் என்ற நினைவு வந்தவளாக இனியா “என்ன இளா. இப்படி பார்க்கறீங்க” என்றாள்.

ஒரு பெருமூச்சை விட்ட இளவரசன் “பின்ன என்னவாம். மனுசனை இப்படி எல்லாம் பண்ணா அவன் எப்படி கிளம்பி போவானாம்” என்றான்.

“என்ன. நான் என்ன பண்ணேன்”

“இந்த மாதிரி அழுது வைச்சா. உன்னை நான் பப்ளிக்ல எப்படி சமாதானபடுத்தறதாம்.”

“நீங்க சமாதானம் பண்ண அழகை தான் நான் பார்த்தேனே. நீ அழுதா எனக்கு என்னடீன்னு தேமேன்னு பார்த்துட்டு நிக்கறீங்களே”

“ஐயோ அது இல்ல செல்லம். என் ட்ரீட்மென்ட் பப்ளிக்ல எல்லாம் பண்ண முடியாது”

“போங்க. போங்க. அழாதன்னு ஒரு வார்த்தை சொல்லலை, இல்லை இனிமே அப்படி எல்லாம் பேச மாட்டேன்னும் சொல்லலை. இதுல வாய் வேற”

“ஓ காட். நீ சொல்ற எல்லாத்தையும் இப்படியே எல்லாம் பண்ண முடியாது டா. இதுவே வீடா இருந்துச்சின்னு வச்சிக்க, அப்படியே ஒரு ஹக், அப்புறம் ஒரு கிஸ் அப்படின்னு உன்னை சமாதானம் பண்ணலாம். பட் இப்ப என்ன பண்றது. அதான்” என்றான் முகத்தை சோகம் போல வைத்துக் கொண்டு.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.