(Reading time: 24 - 47 minutes)

போடா. இப்படியே என்ன ஏமாத்திட்டிருக்க. நீ போகும் போதே சொன்னேன் இல்ல சீக்கிரம் வந்துடனும்ன்னு. ஆனா வரலை. இப்ப கேட்டாலும் கன்பார்மா எதுவும் சொல்ல மாட்டற:

“ஏய் பொண்டாட்டி. நீ எப்ப எனக்கு மரியாதை தர, எப்ப போட்டு தாக்கறன்னே தெரியலை டீ”

“அது அப்படி தான். பின்ன என்னவாம். இப்படி பொய் சொல்லிட்டே இருந்தா எப்படியாம்”

“என்னடா பண்றது. எனக்கும் கஷ்டமா தான் இருக்கு.”

“போங்க. எனக்கென்னவோ உங்களை பார்த்தே ஆகணும்ன்னு தோணுது. நீங்க என்னன்னா இப்படி பண்ணிட்டிருக்கீங்க”

“உனக்கு என்ன இப்ப என்னை பார்க்கணும். அவ்வளவு தானே. போ உன் லேப்டாப் எடுத்து ஆன் பண்ணு. வீடியோ சாட் வா. நானும் போய் லேப்டாப் எடுக்கறேன்”

அவசரமாக “ஓகே ஓகே” என்றவாறு போய் லேப்டாப்பை கொண்டு வந்து ஆன் செய்தவளுக்கு அப்போது தான் நெட் பேக் முடிந்து விட்டது என்பது நினைவு வந்து திரும்ப அவனுக்கு அழைத்தாள்.

“என்ன நான் ஆன்லைன் வந்துட்டேன். சாட்ல தானே வர சொன்னேன்”

“இளா. என் நெட் பேக் முடிஞ்சிடுச்சி. அது மறந்து போச்சி இளா” என்றாள்.

“போடி லூஸ்” என்றவன் “ஹேய் இரு. நம்பர் சொல்லு. நான் நெட்லயே ரீசார்ஜ் பண்றேன்” என்றான்.

“ஐயா ஆமால்ல. நான் மறந்தே போயிட்டேன்”

“ஆமா. எதுக்கெடுத்தாலும் மறந்தே போயிட்டேன். மறந்தே போயிட்டேன்னு சொல்லிக்கிட்டு என்னை திட்ட மட்டும் மறக்காத.”

“உங்களை... நேர்ல வாங்க பார்த்துக்கறேன். நான் உங்களை திட்ட வேண்டியது போய் நீங்க என்னை திட்டறீங்க இல்லை. பார்த்துக்கறேன் பார்த்துக்கறேன்”

“பார்த்துக்கோ போடி. ரீசார்ஜ் பண்ணிட்டேன். போய் நெட் கனெக்ட் பண்ணு. போன் கட் பண்ணாம அப்படியே போய் பண்ணு. நீ சேட் வந்த உடனே தான் நான் கால் கட் பண்ணுவேன்”

“ம்ம்ம். சரி சரி” என்றவளாக நெட் கனெக்ட் செய்து வீடியோ சேட்டிற்கு போனாள்.

“ஹேய் இந்த நைட் டிரஸ் நல்லா இருக்குடீ”

“இளா யாரும் நைட் டிரஸ் நல்லா இருக்குன்னு சொல்லியே இருக்க மாட்டாங்க” என்று கூறி விட்டு சிரிக்க ஆரம்பித்தாள்.

“சிரிடி சிரி. என்னை வாறர்துக்கு உனக்கு ஒரு சேன்ஸ் கிடைச்சா போதுமே. நீ விடுவியா”

அப்படியே பேசிக் கொண்டே போய் நான்கு மணி ஆகிவிட்டது. அப்போதும் இனியாவிற்கு போகவே மனசில்லை. இளவரசன் தான் வற்புறுத்தி தூங்க சொன்னான்.

“போங்க சோகமா போறேன்”

“ஏன் செல்லம். என் கிட்ட இவ்வளவு நேரம் பேசிட்டு இப்ப நீ சோகமா போற. என் செல்லம் சிரிச்சிட்டே போகுமாம். சிரி. குட் கேர்ள் இல்ல. சிரிச்சிட்டு போடா. நீ டல்லா போனா எனக்கு உன்னோட அந்த பேஸ் தான் மைன்ட்ல இருக்கும். சோ சிரிச்சிட்டே போகணும். சரியா”

“ம்ம்ம். ரொம்ப கெஞ்சறீங்க. போனா போறீங்க” என்றவாறு சிரித்தாள்.

“தான்க் யூ பொண்டாட்டி” என்றான்.

இனியாவின் முகம் உடனே கலவையான உணர்ச்சியை காட்டியது. முகம் சிவந்து வெட்கப்பட்டாள்.

அவளின் ரியாக்ஷனை பார்த்துக் கொண்டிருந்த இளவரசன் “யாஹூ” என்று கத்தி விட்டான்.

“என்ன” என்றாள் இனியா அவளுக்கே கேட்காத குரலில்.

“இல்ல. ஒரு வார்த்தை சொன்னதுக்கே என் ஆளுக்கு எப்படி பேஸ் மாறிடுச்சி. அதான் ரசிக்கறேன்” என்றான்.

“போதும் போதும். நான் போறேன். பாய்” என்றாள்.

“பாருடா. சரி சரி. நீ வெட்கப்பட்ட அந்த பேஸ் தான் எனக்கு நியாபகம் இருக்கும். நீ போயிட்டு வா. பாய்”

காலையில் எட்டரை மணிக்கு இனியாவின் தாய் லக்ஷ்மி இனியாவின் அறைக்கு வந்து அவளை எழுப்பிக் (உலுக்கி) கொண்டிருந்தார்.

இனியாவால் கண்களை திறக்கவே முடியவில்லை.

“என்னாச்சி. ஏன் இவ்வளவு நேரம் தூங்கற மா. உடம்பு ஏதும் சரியில்லையா” என்றார்.

லேசாக கண்களை திறந்த இனியா “இல்லம்மா. நைட் தூங்க லேட் ஆகிடுச்சி. இன்னைக்கு சண்டே தானே. சோ கொஞ்ச நேரம் தூங்கறேன்.” என்றாள்.

“சரி” என்று அங்கிருந்து கிளம்பிய லக்ஷ்மிக்கு தான் மனதே சரியில்லை. என்ன தான் செய்வது. யார் மேல் தவறு. தன் பெண்ணை குற்றம் சொல்வதா. இல்லை தன்னை சொல்வதா. யோசித்து யோசித்து அவருக்கு தலை வலி வந்தது தான் மிச்சம்.

என்றும் இவ்வளவு நேரம் தூங்காத பெண். உடல் நிலை சரியில்லை என்றாலும் படுக்கையில் படுக்க பிடிக்காத பெண் இன்று இவ்வளவு நேரம் தூங்குகிறாள் என்றால் அவள் கூறியது போல் இரவு உறங்காதது தான் காரணமாக இருக்க முடியும்.

ஆனால் எப்போதுமே பண்ணிரண்டு மணிக்கு படுத்தாலும் காலையில் வழக்கம் போல் எந்திரிப்பவள் இன்று அவளால் கண்களை திறக்க கூட முடியவில்லையெனில் அவள் எவ்வளவு நேரம் முழித்திருக்க வேண்டும். கடவுளே. அவள் மனது எவ்வளவு வருத்தத்தில் இருந்தால் அவள் இவ்வாறு இரவு முழுவதும் யோசித்துக் கொண்டும், வருத்தப் பட்டுக் கொண்டும் உறங்காமல் இருந்திருப்பாள்.  (ஐயோ ஐயோ. ஒரே காமெடி இல்ல. உங்களுக்கு எல்லாம் எவ்வளவு சிரிப்பு வருதுன்னு எனக்கு தெரியுது. பட் சிரிக்க கூடாது. மம்மி பாவம் மம்மி பாவம். ஓகே)

அவளையும் குறை சொல்ல இயலாமல், தன்னாலும் தன் முடிவை மாற்றிக் கொள்ள இயலாமல் என்ன வாழ்க்கை இது என்று அவருக்கு கோபம் தான் வந்தது.

அவரவர் செயலுக்கு அவர்களிடம் ஒரு நியாயம் இருக்கும் என்பது உண்மை தான் போலும் என்று எண்ணிக் கொண்டார்.

9.30 மணி அளவில் இனியா குளித்து முடித்து கீழே வந்தாள்.

“வா. சாப்பாடு எடுத்து வைக்கறேன்” என்றவாறே லக்ஷ்மி அவளுக்கு டிபன் எடுத்து வைத்தார்.

இனியா மெல்ல தாயின் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

லக்ஷ்மி வந்து எழுப்பிய போதும் ஏதும் புரியாமல் தூங்கி வழிந்துக் கொண்டிருந்தவளுக்கு அவர் சென்ற சிறிது நேரத்திற்கு பிறகு தான் “ஐயோ நாம இவ்வளவு நேரம் தூங்கனதே இல்லையே. இன்னைக்கு இப்படி பண்ணிட்டோமே. அதுவும் அம்மா வந்து எழுப்பனதுக்கு அப்புறமும் இப்படி பண்ணிட்டோமே” என்பது உரைத்தது.

உடனே அவசர அவசரமாக எந்திரித்து குளித்து முடித்து இளவரசனுக்கு போன் செய்தாள்.

காலையில் எழுந்த உடனே ஒரு போன் செய்ய சொன்னான் அவன்.

“ஹலோ ”

“இளா. எந்திரிக்க லேட் ஆகிடுச்சி தெரியுமா. அதுவும் அம்மா வந்து எழுப்பற அளவுக்கு ஆகிடுச்சி. அவங்க ஏதும் நினைச்சிருப்பாங்களா”

“அடிப்பாவி. அத்தை வந்து எழுப்பற அளவுக்கு தூங்கினியா. போ போ. உன்னை முட்டி போடா வைக்க போறாங்க.”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.