(Reading time: 29 - 57 minutes)

ப்ரபாத் காரை அரண் வீட்டிற்குள் சென்று நிறுத்திய போது அவர்கள் எவ்வளவோ பேசி இருந்தார்கள். அவனை ஜோனத் என அழைக்கப் பழகி இருந்தாள் சங்கல்யா. காரணம் அரண் சுகவிதா வீட்டில் போய் திடீரென இவளால் அவனை ஜோனத் என அழைக்க எப்படி வரும்?

அனவரதன் மீதும் வல்லராஜன் மீதும் அடக்க முடியா கோபம் கொதித்துக் கொண்டு இருந்தாலும் அன்று அவளுக்கு ப்ரபாத் மேல் அப்படி எதுவும் பெரிதாக இருக்கவில்லை. அவன் ஒரு  குடும்பத்தை இணைக்கத்தானே இதை செய்கிறான் என்ற நினைப்பு

ஆனால் மறுநாள் அவனோடு கோலாகலாமாக நிச்சயதார்த்தம் நடந்தபோதும் அதன் உள்நோக்கத்தை சங்கல்யா அறிந்தபோதும் உலகில் உள்ள அனைத்து மனிதர்களைவிடவும் அவனை அதிகமாக பிடிக்காமல் போனது அவளுக்கு.

ரவில் ஹயா தூங்கியபின் அவளை அவளுக்கான பேபி பெட்டில் படுக்க வைத்துவிட்டு அரண் படுத்திருந்த அதே மெத்தையில் படுக்கச் செல்லும் போது, இனம் புரியா ஒரு தயக்கம் இருந்தாலும், சுகவி மனதிற்குள் பரவி இருந்தது ஒரு வகை திருப்தியும் தாய்மையுமே.

மீண்டும் விழிப்பு வரும் போது மனதில் அத்தனை ஒரு இலகுவான உணர்வு, பாதுகாப்பு நிலை. நிம்மதி. சுகம். கண் திறக்கும் முன்னே வந்த அரை குறை உணர்விலேயே புரிந்துவிட்டது அவள் படுத்திருக்கும் நிலை.

அரணை அரணாக்கி அவன் மார்புக்குள் இவள் முதுகை பதித்து, அவனுக்குள் இவள் சுருண்டிருக்க, இவள் இடைவழியாய் ஓடிய அவன் கை இவளை அரவணைப்பாய் தாங்கி என் நிலையிலும் உன்னை கைவிடேன், விலகேன் என்ற காதல் செய்தியை செயலாய் பகர்ந்திருக்க

அந்த அவன் கை மீதே அவன் செய்திக்கு பதில் செய்கையாய் இவள் கை ஓடி அவன் கையை இவள் இடையோடு சேர்த்து இணைத்திருந்தது. தூக்கத்தில் அவளை அறியாமல்…..

கிழக்கிலிருந்து மேற்கு எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் விலகிப் போயிருந்தது மனதிலிருந்த காயம் கோபம், கேள்வி குழப்பம் யாவும். அவர்களுக்குள் உள்ள  காதல் தவிர அனைத்தும் கண்காணா செவி கேளா தொலைவு தூரமாகிப் போயிருக்க

மெல்ல கண்விழித்துப் பார்த்தாள். அவன் முகத்தை எப்படி எதிர் கொள்வதாம்? வெட்கம் வருகிறதே…..

அவள் கண்ணில் தெரிந்தது எதிரிலிருந்த வாற்றோபிலிருந்த கண்ணாடி. அதில் இவள் முகமும், இவள் பின் படுத்திருக்கும் அவன் முகமும். அவன் இன்னமும் தூங்கிக் கொண்டுதான் இருக்கிறான்.

எழுந்திரு என்கிறது நியாயம்…..ம்கூம் என்கிறது காதல்….அவன் இதை எப்படி கையாள்வான் என பார் என்கிறது அறிவு.

அறிவும் காதலும் அரை விழுக்காடு ஒத்துப் போனதால் அப்படியே கண்மூடிப் படுத்துக் கொண்டாள்.

அவன் இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். என்னதான் கண் மூடிப் படுத்திருந்தாலும் விழித்த பின் சலனமின்றி எவ்வளவு நேரம் படுத்திருக்க முடியும்? இவள் சலனம் உணர்ந்தோ அல்லது இயல்பாகவோ அவனும் விழித்தான்.

இவளைப் போல விழித்தபின்தான் அவனும் நிலை அறிந்தான் போலும். சிறு கீற்றாய் கண் விழித்து கண்ணாடியில் அவன் முக பாவம் பார்த்திருந்தவளுக்கு அது சந்தேகமின்றி புரிகிறது.

முதலில் ஒரு கணம் பதறியவன் மெல்ல எட்டி இவள் முகம் பார்த்தான். கண்களை மூடி தூங்கும் பாவம் இவளிடம். இவள் தூங்குவதை உறுதி செய்து கொண்டவன் மீண்டுமாய் அவன் படுத்திருந்த அதே நிலையில் படுத்துக் கொண்டான். அவன் முகத்தில் இப்போது  நிம்மதி.

அதே நேரம் இவள் மனமெங்கும் சந்தோஷம். அவன் எதிலும் நடிக்கவில்லை. இவளைப் போல இயல்பாக இந்த வினோத சூழ்நிலையை, இவர்கள் உறவை எதிர்கொள்ளத்தான் முயல்கிறான் என்ற புரிதல்.

மெல்ல தன் கையை அவள் மேலிருந்து மென்மையாக எடுத்துக் கொண்டான். பின் குழந்தை படுக்கை இருந்த திசையை திரும்பிப் பார்த்தான் அரண். ஹயா அழகாய் தூங்கிக் கொண்டிருந்தாள். மீண்டுமாய் தன் அருகில் தூங்கும் மனைவியைப் பார்த்தான்.

“ஐ லவ் யூடா விதுக்குட்டி….” வார்த்தைக்கு வலிக்குமோ என்பதுபோல் மிக மிக மென்மையாய் சொன்னான். பின் ஒரு பெருமூச்சு ஒன்று புறப்பட்டது அவனிடமிருந்து.

 “ரொம்ப கஷ்டமா இருக்குது விது…..நீ என்னையவே அடையாளம் தெரியாம அன்னியமா பார்க்கிறதும்……அதோட நானே உன்னைய ஒரு தூரம் விலக்கி நிறுத்தி, எதையும் மனசுவிட்டு பேச முடியாம பழக வேண்டி இருக்கிறதும்….தாங்க முடியலைடா…..” சொல்லியவன் மெல்ல அவள் நெற்றியை நோக்கிக் குனிந்தான்

“விலகி நில்லுங்கன்னு யார் சொன்னதாம்…..?” எதிர்பாரா நேரத்தில் கண்விழித்துக் கேட்டாள் சுகவிதா.

நிச்சயமாய் இதை எதிர்பார்த்திருந்திருக்கவில்லை அரண். ஒரு கணம் அதிர்ந்து விலகியவன் பின்தான் அவள் வார்த்தையின் பொருள் உணர்ந்தான் போலும்….

உச்ச நிலை சந்தோஷம் அவன் முகத்தில்.

“விது!!!!!!!!!!! உனக்கு எல்லாம் ஞாபகம் வந்துட்டா விது….? என் விது….என் விது” அவளை நோக்கி சந்தோஷ புயலாக குனிந்தான்.

“இல்ல…..” இவள் எதிர்மறை சொல்லில் அவன் அப்படியே நின்று போனான்.

“பட் நீங்க என்னை லவ் பண்றீங்கன்னு புரியுதே….”

அப்படியே அசந்து போய் அவளைப் பார்த்தான்.

“நான் உங்களை லவ் பண்றேன்னு தெரியுதே…..”

“விதுக் குட்டி…” அவன் குரல் காதலின் விம்மலாய் வெளி வந்தது.

ஏனோ இவளுக்கு இன்னொரு “விழனும் டி நீ” கொடூரமாய் காதில் கேட்டது. சில்லிட்டது முதுகுத் தண்டு.

இப்பொழுது நிஜத்தில் இவளை நோக்கி காதல் கணவனாய் குனிகிறான். முகம் காதல் உரு. “காதல் இவ்ளவு பவர்ஃபுல்லானதுன்னு எனக்கு தெரியாது விதுக் குட்டி”

ஆனால் மனதிலோ வேறு ஒரு காட்சி. மன காட்சியில் இவளைப் பிடித்து இழுக்கிறான் அரண். மீசை முளைக்கா அவன் முகம் முழுவதும் கோப தாண்டவம் கொடூரம்.

நிகழ்வில் முத்திரையிட மிக அருகில் வந்த அவன் இதழ்கள் பாதியில் நின்றன. “பால்குட்டி இருக்ற இடத்துல…………..இது சரியில்லடா…….அதனால…..” சொல்லியபடி படுக்கையைவிட்டு இறங்கி இவளை கைகளில் அள்ளினான்.

மன காட்சியில் தரையில் அமர்ந்து “ஐயோ விடுங்க என்ன…….எனக்கு தண்ணினா பயம்…” என கத்தி கதறும் இவளை தரதரவென இழுத்துச் செல்கிறான்.

“நம்ம பெட் ரூம் போகலாமாடா….? பெருசா எதுவும் இல்ல… ஜஸ்ட் வான்ட்டு பி வித் யூ….அதோட அங்க உன் மனசு கஷ்டபடுற மாதிரி எதுவும் நடந்ததே கிடையாது…..வெளிய போகாம அடுத்த ரூம் போக அது மட்டும்தான் வழி….” இவள் அறையின் பக்க கதவிலிருந்த லாட்ச்சை திறக்கிறான் நிகழ்வில்.

மன காட்சியில் பள்ளி நீச்சல் குளத்திற்கு இழுத்துப் போகிறான். அவனும் பள்ளி சீருடையில், இவளும் தான். டார்க் க்ரே ஸ்கர்ட், வைட் ஷர்ட், டை.

நிகழ்வில் அடுத்த அறை அதாவது இவர்கள் படுக்கை அறைக்குள் நுழைந்து படுக்கையில் வைத்தான் இவளை மெத்தென மெதுவாக.

“ஐயோ…ப்ளீஃஸ்…..என்ன விட்றுங்க….எனக்கு ஸ்விமிங்க் தெரியாது….தண்ணினா ரொம்ப பயம்…ப்ளீஸ்….ப்ளீஸ்…” கெஞ்சியபடி இவளை பிடித்து ஸ்விமிங் பூலின் உள் தள்ள முயலும் அவன் கரத்தை பிடித்துக் கொண்டு போராடுகிறாள்.  பயம்….. தவிப்பு…..

நிஜத்தில் மெல்ல குனிந்து நெற்றியில் முத்த விதைகள் நட்டான். “விதுக் குட்டிமா….” காதல் தாய்மையுடைத்து.

மனதில் “விடுறி என்ன…..விடு நீ….” அவன் கையைப்பிடித்துப் போராடியவள் கையை ஆக்ரோஷமாக உதறினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.