(Reading time: 11 - 21 minutes)

மைதிலி ராமிடம், “ஒரு நிமிடம்” என்க, திரும்பி நின்றவனைப் பாராது சுவரைப் பார்த்தபடி “நேற்று இரவு நான் நடந்து கொண்ட முறைக்கு ஸாரி. ஷ்யாமின் பிறந்த நாளுக்கு என்ன ஏற்பாடு செய்யணுமோ செய்து விடுங்கள்;” என்றாள். அவளைப் பற்றித் திருப்பிய ராம் அவள் கண்ணோடு நோக்கி “நான் உன்னை எவ்வளவு வேதனைப் படுத்தியிருக்கிறேன் என்று புரிகிறது.  நீ வீட்டை விட்டு வெளியேறிய பிறகு என்னுடைய தவறை உணர்ந்தேன். ஆனால் நான் ஒரு விளக்கம் என்பதை விட என் மனதில் உள்ளதை உனக்கு சொல்ல வேண்டும். அதை சந்தோஷ் திருமணம் முடிந்தபின் சொல்கிறேன். அது வரை தயவு செய்து கடந்த 4 வருடங்களை மறக்க முயற்சி செய். இனி ஒருமுறை ஏன்தான் நம் திருமணம் நடந்ததோ என்று உன்னை வருத்தப்படவோ, வேதனைப்படவோ விட மாட்டேன். இது என் மீது சத்தியம்.” என்றான்.

மைதிலியும் அவனை நேராகப் பார்த்து விட்டு “சரி” என்றாள். அவன் சிரித்து விட்டு “நான் ஜாகிங் போய் வருகிறேன்” என்றான். அவள் தலையசைத்தளர்.

பிறகு கீழே சென்ற மைதிலியிடம் கௌசல்யா மைதிலியிடம் ஷ்யாமின் பிறந்த நாள் விழா ஏற்பாடுகளைப் பற்றி பேச ஆரம்பிக்க, அவள் மெதுவாக “அத்தை இவ்வளவு கிராண்டாக பண்ணணுமா ” என்றாள்.

கௌசல்யா “ஷ்யாமை நாம் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தணும்மா. நீ சென்ற பிறகு ஒரு மாதத்தில் ராமும் ஜெர்மன் சென்று விட்டான். சபரி வீட்டாரைத் தவிர கேட்ட உறவுகளிடம் ராம் இல்லாதாதால் நீ உன் சொந்தக்காரர்களோடு பிரசவத்திற்கு சென்று விட்டதாகவே சமாளித்தோம். குழந்தை பிறந்த பிறகு நீயும் ஜெர்மன் சென்று விட்டதாகக் கூறினோம். எங்கள் சஷ்டியப்தபூர்த்தியன்று கூட ஷ்யாமைப் பற்றி கேட்டவர்களிடம் நாங்கள் ஏதோ சமாளித்து வைத்தோம். அதனால் இப்போது அவன் பிறந்த நாளைக் கொண்டாடினால் வேறு எந்தக் கேள்வியும் எழாமல் பார்த்துக் கொள்ளலாம். அடுத்த வருடம் நீ எப்படி சொல்கிறாயோ அப்படியே செய்யலாம்மா” என்று விளக்கம் அளித்தார்.

மைதிலி “நீங்கள் சொல்லும்படியே செய்யலாம் அத்தை. ஸாரி. என்னால் உங்களுக்குப் பிரச்சினை ஆகிவிட்டது.” என்றாள். “அத்தை நான் உங்களிடம் ஒன்று கேட்கலாமா?”

“கேள் மைதிலி”

 “நான் யாருமில்லாதவள் என்பதால் உங்கள் எல்லோருக்கும் ராம் என்னைத் திருமணம் செய்து கொண்டதில் வருத்தம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் யாரும் என்னிடம் நேரிடையாகக் காண்பித்ததில்லை. அப்படியிருக்கும் போது எனக்கும் ராமிற்கும் பிரச்சினையான சமயத்தில் நீங்கள் ஏன் அப்படி நடந்து கொண்டீர்கள், உங்கள் இயல்பு அது இல்லை என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் ஏன் அன்று அவ்வாறு கூறினீர்கள்?’

“எனக்கோ நம் குடும்பத்திற்கோ அந்த சமயத்தில் கொஞ்சம் தயக்கம் இருந்தது உண்மைதான். தற்சமயம் எனக்கும் என் பிறந்த வழிச் சொந்தங்கள் யாரும் கிடையாது. ஆனால் அது கடந்த 10 வருடங்களாகத்தான். அதற்கு முன்னால் வருடாவருடம் லீவுக்குப் பிள்ளைகளை என் அப்பா வீட்டிற்கு அழைத்துப் போனோம். ராமின்  தாத்தா பாட்டியைப் பற்றி உனக்கும் தெரியும். சுபத்ராவும் என்னிடம் தோழி மாதிரிதான் பழகுவாள். இருந்தாலும் ஒரு அலுப்போ, உடம்பு முடியாத போதோ நமக்கு அம்மாவைத் தான் தேடும். இவர்கள் செய்தாலும் நம்மால் இவர்கள் கஷ்டப்படுகிறார்களே என்று தயக்கம் இருக்கும். நம் அம்மா செய்தால் நமக்கு அந்த தயக்கம் இராது. இதைத்தான் நான் அன்று யோசித்தேன்.

ராம் திருமணத்தைப் பற்றிப் பேசும்போது காதலைப் பற்றி பேசவில்லை. உன்னைத் தவிர யாரும் தன் மனைவியாகி விட முடியாது என்றான். நீங்கள் இருவரும் பழகி இரண்டு நாடக்ள் தான் ஆகியிருந்தது. ராம் என்னுடைய மகன். அவனைப் பற்றி எனக்குத் தெரியும். அவன் தப்பு செய்ய மாட்டான். அவன் மேல் தவறு என்று இதமாகச் சொன்னால் கேட்பவன், அதைக் கண்டித்தோ திட்டியோ சொன்னால் கோபப்படுவான். அவன் சொல்வதை சந்தேகப்பட்டால் அவன் தாறுமாறாக பேசுவான். இதெல்லாம் உனக்கு எந்த அளவு தெரியும்? இதை எல்லாம்தான் அன்று யோசித்தோம்.

ஆனால் வந்த கொஞ்ச நாளில் உன்னைப் பற்றியும் புரிந்து கொண்டேன். உனக்கு சுயமரியாதை அதிகம். ஆனால் வீண் பிடிவாதமோ, ஒரு வகையான அலட்டலோ கிடையாது.

உனக்கும் ராமிற்கும் என்ன பிரச்சினை என்று இதுவரை யாருக்கும் தெரியாது. ஆனால் பொதுவாக ராம் தவறு செய்பவனல்ல. ஆனால் அவன் கோபப்பட்டதால் நிச்சயமாக அவனைத் தவறாக நினைத்திருந்தாய் என்று புரிந்தது. மேலும் ராமின் ஜாதகப்படி அவனுக்கு ஐந்து வருடங்கள் திருமண வாழ்வில் பிரச்சினை இருக்கும் என்று தெரியும்.

இந்தச் சமயத்தில் உங்கள் இருவரிடையே பிரச்சினை வரவும், அந்தக் குழப்பதில்தான் நான் உன்னை அன்று அவ்வாறு பேசினேன். ஆனால் அதற்குப் பிறகு மிகவும் வருத்தப்பட்டேன். மேலும் நான் உனக்கு ஆதரவு அளிக்காமல் இருந்தால் ராம் கொஞ்ச நாளில் கோபம் குறைந்து உன்னைப் பார்த்துக் கொள்வான் என்று எண்ணிணேன். ஆனால் அதற்குள் சபரியின் திருமணம் வரவே என்னால் உன்னிடம் அமர்ந்து பேச முடியவில்லை.

நீ வீட்டை விட்டுப் போனதும், நீ என்ன செய்கிறாயோ என்று மனம் தவிக்கும். நீ நல்லபடியாக குழந்தை பெற்றெடுக்க வேண்டுமென்று தினமும் கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தேன். ராம் நீ சென்ற ஒரு மாதத்தில ஜெர்மன் சென்றுவிட்டான். ராம் எல்லோரிடமும் தன் மேல்தான் தவறு என்றும், தற்சமயம் அவளை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் கூறிவிட்டான். வீட்டில் யாருக்கும் வேறு எதுவும்  தெரியாது. அதிலும் சபரிக்கு வளைகாப்பு, டெலிவரி என்று பார்க்கும் போது, நான் துடித்துப் போனேன். தாயில்லாப் பெண்ணான உன்னை இப்படி அனாதரவாக விட்டு விட்டோமே என்று எண்ணி வேதனைப் படுவேன். 

ராமின் அப்பாவிடம் சொல்லி புகைப்படம் போட்டு விளம்பரம் கொடுக்கலாம் என்று நினைத்தாலும், உங்கள் இருவர் பிரச்சினையில் அவன் என்ன சொன்னான், அது உன்னை எவ்வளவு வேதனைப்படுத்தியிருக்கும் என்று தெரியாமல், உன்னை கஷ்டப்படுத்த மனமில்லை. அதனால்தான் ராம் உன்னைக் கூட்டி வர வேண்டும் என்று நினைத்தேன். நான் வேண்டிய கடவுள் என்னைக் கைவிடவில்லை.” என்று முடித்தார் கௌசல்யா.

தொடரும்

Episode 09

Episode 11

{kunena_discuss:887}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.