(Reading time: 18 - 35 minutes)

ரூபின் தொடர்ந்தான், “நீ வேகமா வந்திருந்தாலும் வண்டி என் மேல மோத நானே தான் காரணம்.  அவளை தூரத்திலிருந்து ஃபாலோ பண்ணிட்டே வேற எதையும் கவனிக்காம சட்டுனு உங்க வண்டி முன்னால வந்துட்டேன்”

“முதல்ல என் மேல தப்புன்னு சொன்ன… இப்போ உன் மேல தப்புங்கிற… நான் எதை நம்புறது”

“உன் மேல தப்பே இல்லை, சஞ்சய்.  நான் தான் வண்டிய கவனிக்காம சட்டுனு வந்துட்டேன்” என்று உண்மையை சொன்னான் ரூபின்.

மற்ற இருவரும் சிரித்து தங்கள் வெற்றியை ஹை ஃபை கொடுத்து வெளிப்படுத்தினர்.

ரூபின் கேள்வியும் குழப்புமுமாக அவர்களை நோக்கினான்.  இவங்களுக்கு திடீர்னு என்னாச்சு? இவ்வளவு நேரம் நல்லாதான இருந்தாங்க? ஒருவேளை இப்படியிருக்குமோ… நம்ம வாழ்க்கையில முதல் முறையா உண்மைய சொல்லி தப்பு என்னோடதுன்னு ஒத்துக்குன அதிர்ச்சி தாங்காத கடவுள், இவங்களை லூசா மாத்திட்டாரோ….

“ரொம்ப யோசிக்காத ரூபின்.  உன்னோட இல்லாத மூளை கசங்கிற போகுது” என்றான் ஜெய்.  இருவரும் மறுபடியும் சிறிது நேரம் சிரித்தனர்.

“என்ன முழிக்கிற? நீ வண்டில மோதி கீழே விழுந்தப்பவும் உன்னோட கண்கள் சௌம்யாவை ஃபாலோ பண்ணப்பவே நாங்க உஷாராயிட்டோம்.  நீ க்ளாஸ் பங்க் பண்ற ஸ்டைல் நல்லாயிருந்தது.  ஸோ ஒரு சின்ன விளையாட்டு” என்று சரயூ கண்களை சிமிட்டினாள்.

ச்சே… இது தெரியாம கடவுள் எனக்கு உதவிட்டாருன்னு நினைச்சிட்டனே..

“இன்ஃபேக்ட் சௌம்யா இங்க இல்லை”

“அப்போ... நானா தான் உளரிட்டேனா?”

“ஆமா!” என்று இருவரும் சேர்ந்து கூவி சிரித்தனர்.

இவங்க ரெண்டு பேரும் இந்த ‘லாஸ்ட் பென்ஞ்சு கிங் ரூபின்’ யே கவுத்திட்டாங்கன்னா… இனிமே இவங்கட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும்.

“அப்பவே சொன்னனே… உன்னோட இல்லாத மூளையைக் கசக்காதேன்னு..”

“அதை விடு சஞ்சு!” என்றவள் ரூபினிடம் திரும்பி, “சௌம்யாவை எப்போ ப்ரபோஸ் பண்ண போற?” குரலில் குதூகலம் கூடியிருந்தது.

ஜெய், அவளின் இந்த செயலை மனதில் குறித்து கொண்டான்.

“இப்போயில்லை” ரூபினின் முகத்தில் லேசான வெட்கம் தெரிந்தது.

“வேற எப்போ?”

“தெரியலை சரயூ.  சௌம்யாக்கு என்னை பிடிக்குமான்னு முதல்ல தெரிஞ்சிக்கனும்… அப்புறம்…” என்று அவன் இழுக்கவும்

“ஏன் பிடிக்காம? சௌம்யாக்கு உன்னை நிச்சயமா பிடிக்கும்” என்று சரயூ உறுதியான குரலில் சொல்லவும்

கண்கள் மின்ன, “நீ எப்படி இவ்வளவு உறுதியா சொல்லுற சரயூ” என்றான் ரூபின்.

“உன்னோட காதல் உண்மைன்னா.. அதுவே அவளை உன்னிடம் சேர்த்திடும்.  சோ சௌம்யாக்கு உன்னை பிடிக்கும்” புன்னைகைத்தாள் சரயூ.

அவளுக்கே தெரியாமல் சஞ்சயின் காதலை ஊக்குவித்தாள், சரயூ.  ஜெய் அவளின் சின்ன முகம் மற்றும் குரல் மாறுதலின் மூலமாக அவளின் மனதை படித்து கொண்டிருந்தான்.  அதன் மூலமாக சரயூவின் காதல் மீதான உயர்ந்த எண்ணத்தை அறிந்து கொண்டான்.  அதுவே அவன் காதலுக்கான பச்சை கொடியானது.  தன்னுடைய உண்மை காதலை அவள் ஏற்பாள் என்ற எண்ணம் மலை போல் எழுந்தது அவனுள்.

“தேங்க்ஸ் சரயூ! நான் எப்படின்னு உங்க எல்லாருக்குமே தெரியும்.. ஆனா.. சௌம்யான்ன உடனே… என்னால நானா இருக்கமுடியல”

“இந்த சீரியஸ் லுக் உனக்கு சகிக்கலை” என்று சரயூ குமட்டுவதை போல் செய்யவும் ரூபின் சிரித்தான்.

“நீ எப்படி நாராயண் சாரை ரொம்ப சுலபமா சமாளிச்சி க்ளாஸ் பங்க் பண்ணுற? எனக்கும் கொஞ்சம் சொல்லி தாயேன்”

ரூபினின் தோள்கள் பூரிக்க நிமிர்ந்தவன், “அதெல்லாம் இந்த ரூபினுக்கு ஜுஜுபி” என்று காலரை தூக்கிவிட்டு, “இன்னைக்கு சஞ்சய் வைத்து க்ளாஸ் பங்க் பண்ணேன் தெரியுமா?” என்று நடந்ததை விளக்கினான்.

சரயூ, ரூபினின் முன் நின்று சற்று வளைந்து “இன்று முதல் என்னை உங்கள் சீடனாய் ஏற்ப்பீர்களாக” என்று நாடக பாணியில் கேட்கவும்

“அப்படியே ஆகட்டும் குழந்தாய்!” என்று தன் வலது கையை உயர்த்தி ஆசி வழங்கினான் ரூபின்.

மூவரும் சேர்ந்து சிரித்தனர். 

இதுப்போன்ற வேடிக்கயான பேச்சுகள், பாடங்கள், இண்டெர்னல்ஸ், அஸ்ஸைன்மென்ட், காலேஜ் ஃபெஸ்ட், அவுடிங்க், காஃபி ஷாப் அரட்டைகள் என மூன்று மாதம் ரெக்கை கட்டி பறந்தது.  அதே சமயம் வேதிக், சரயூ, ஜெய்யிடம் ஓர் அழகான நட்பு மலர்ந்திருந்தது.  ஜெய் மறக்காமல் சரயூவை ரகசியமாக ரசிப்பதும், அவளின் சின்ன சின்ன ஆசைகள், குறும்புகள், விருப்பு வெறுப்புகள், அவளின் குடும்பத்தினரையும் ஓரளவிற்கு அறிந்து கொண்டதோடல்லாமல் மைத்ரீயையும் சரயூவிற்கு அறிமுகம் படுத்தியிருந்தான்.  சரயூவிற்கு மைத்ரீயை மிகவும் பிடித்துவிட்டது.  அவளிடம் எளிதாக ஒட்டிக்கொண்டாள்.  மைத்ரீக்கும் சரயூவின் பேச்சு, பழக்க வழக்கங்களை பிடித்திருந்தது.  இப்போதெல்லாம் பெண்களிருவரும் போனில் பேசி கொள்வதும் அடிக்கடி ஷாப்பிங்க் போவதும் வழக்கமாகியிருந்தது.  ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி ஜெய் அவர்களோடு இணைந்துச் சுற்றினான். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.