(Reading time: 24 - 48 minutes)

'டேய்... ஏன்டா???  கொஞ்சம் சிரி...' அவனிடம் கிசுகிசுத்துவிட்டு, அந்த தட்டில் இருந்து பூவை எடுத்து அபர்ணாவின் தலையில் சூட்டிவிட்டு அவள் கன்னம் வருடிவிட்டு வந்து அமர்ந்தார் அம்மா.

பேச்சை ஆரம்பித்திருந்தார் அருணின் அப்பா. அங்கிருந்து சட்டென கிளம்பி விடவும் முடியவில்லை பரத்தால். உயிர் கொஞ்சம் கொஞ்சமாக வற்றிப்போவதை போன்றதொரு உணர்வில் அமர்ந்திருந்தான் அவன். உயிரோடு நரகத்தை அடைந்து விட்ட தருணம் இதுதானோ???

என்ன தோன்றியதோ பரத்தின் அருகில் சென்று அமர்ந்துக்கொண்டாள் அஸ்வினி. தனது அப்பாவின் அருகில் அமர்ந்திருந்தாள் அபர்ணா. அவளது அம்மாவின் பார்வை மட்டும் அடிக்கடி பரத்தை அடைந்து அடைந்து திரும்பிக்கொண்டிருந்தது.

'இவன் இப்போவே கல்யாணம் நடக்கணும்ன்னு அவசர படறான். அதான் உடனே வந்தோம். அப்புறம் விஷ்வா யாரு உங்க சொந்த தங்கை பையனா??? என்றார் அப்பா. அபர்ணாவின் அப்பாவை பார்த்து.

விஷ்வாவின் பெயர் காதில் விழ விருட்டென நிமிர்ந்தான் பரத்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

'ஆமாம். விஷ்வாவுக்கென்ன???"

'அவருக்கு என் தம்பி பொண்ணை பிடிச்சிருக்குங்கிற மாதிரி கேள்விப்பட்டோம். பார்ப்போம் எல்லாம் சரியா நடந்தா ரெண்டு கல்யாணத்தையும் கூட ஒண்ணா முடிச்சிடுவோம்..'

'ஓ.. அப்படியா ரொம்ப சந்தோஷம். நான் பேசறேன் என் தங்கை கிட்டே. பத்து நாளிலே விஷ்வா அப்பாக்கு அறுபதாம் கல்யாணம் வருது. முடிஞ்சா அப்போ அவங்க கல்யாணத்தையும் நிச்சியம் பண்ணிடுவோம்...' சொன்னார் அபர்ணாவின் அப்பா.

'விஷ்வாவுக்கு திருமணமா??? அந்த இந்துஜாவுடனா??? அந்த நிலையிலும் குளிர்ந்துதான் போனது பரத்தின் உள்ளம். அப்பாவுக்கு அறுபதாம் திருமணமா??? அப்படியா??? பல நூறு உணர்வுகள் ஒன்று சேர்ந்து அழுத்த சிலையாக அமர்ந்திருந்தான் பரத்.

'அடுத்தது மார்கழி. அதுக்கு முன்னாடி இந்த டிசம்பர்குள்ளே கல்யாணம் முடிச்சிட்டா நல்லதுதான்..' அருண் அப்பா சொல்லிக்கொண்டிருக்க...

அபர்ணா மெல்ல விழி நிமிர்த்தி, ஒரு புன்னகையை தேடி அருணை பார்க்க என்ன நினைவில் இருந்தானோ அவள் பக்கம் திரும்பவே இல்லை அவன்.. சற்று முன் அம்மா அவனிடம் சொன்னவைகள் மறந்தே போயிருந்தன அவனுக்கு.

'எதுக்கு இவ்வளவு அவசரம்..' தயக்கத்துடன் கேட்டார் அபர்ணாவின் அம்மா.

'அருண் ஜாதகப்படி இப்போ நடந்தா ரொம்ப நல்லது. அபர்ணா ஜாதகம் இருக்கா. இருந்தா கொஞ்சம் குடுங்க. நான் பார்க்கணும். முக்கியமா அதிலே புத்திர பாக்கியம் இருக்கணும். அது இருந்தாதான் மேலே பேச முடியும். கல்யாணம் ஆகி ஒண்ணு ஒன்றரை வருஷத்துக்குள்ளே குழந்தை வரணும். அது ஒண்ணுதான் எங்க எதிர்ப்பார்ப்பு..' அவர் சொல்லிக்கொண்டே போக..

மெல்ல மெல்ல இறுகியது பரத்தின் முகம். ' புத்திர பாக்கியம் இருக்கணும். அது இருந்தாதான் மேலே பேச முடியும்!!!!. திருமணம் பேசும் விதமா இது???' அவர் வார்த்தைகளில் அருணின் முகத்தில் எந்த மாற்றமும் ஏற்படாதது இன்னமும் உறுத்தியது பரத்தை.

பரத் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டிருக்க கேட்டே விட்டாள் அஸ்வினி 'ஒரு வேளை புத்திரபாக்கியம் இல்லைனா???

அப்பாவின் கொதிப்பான முறைப்பை பரிசாக வாங்கிக்கொண்டு அவள் மௌனமாக

'புத்திர பாக்கியம் இல்லைனா.. 'கொஞ்சம் கஷ்டம்மா.' என்றார் அருண் அப்பா இடம் வலமாக தலை அசைத்தபடியே..'' 'அது இல்லாம கல்யாணம் பண்ணவங்க ரெண்டு மூண்டு பேர் நான் பார்த்திருக்கேன். அது சரியா வராது ..' அவர் சொல்ல வெயிலில் விழுந்த மலராக வாடி வதங்கியது அபர்ணாவின் முகம்.

ஒரு முறை அஸ்வினி சட்டென திரும்பி பரத்தை பார்த்தாள். இடம் வலமாக தலை அசைத்துக்கொண்டான் அவன்.

'இல்லை... இப்படியே, இந்த நொடியே சிறையெடுத்து சென்று விடுகிறேன் என்னவளை.' கொதித்தது அவன் உள்ளம். ஆனால் எதுவுமே செய்து விட முடியாமல் தன்னை தானே அழுத்தி பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான் அவன்.

'புத்திர பாக்கியமெல்லாம் இருக்கும். நீங்க வேறே... அபர்ணா அருணுக்குத்தான்..' சூழ்நிலையை காப்பாற்ற முயன்றார் அருண் அம்மா.

அதற்குள் வந்தது ஜாதகம். அதை ஆராய ஆரம்பித்தார் அவன் அப்பா.

'புத்திர பாக்கியம் இல்லை என்றால் வேண்டாமென்று விடுவார்களாமா??? எதுவுமே வேண்டாமென அங்கிருந்து எழுந்து சென்று விட வேண்டும் என ஒரு நொடி தோன்றியது  அபர்ணாவுக்கு. ஆனால் இயலவில்லை அவளால். என் அருணை எப்படி தூக்கி எறிவேன் நான்??? முள் இருக்கையின் மேல் அமர்ந்திருந்தாள் அவள்.

மெதுவாக நடந்து பரத்தின் அருகில் வந்து அமர்ந்துக்கொண்டான் அத்தனை நேரம் ஓரமாக நின்றுக்கொண்டிருந்த அஷோக்!!! அவனுக்குள்ளும் கோபக்கனல்.

முகத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லமல் அப்பாவையே பார்த்திருந்தான் அருண்!!!

மனதில் அவள் மீது கொண்ட நேசத்தை தவிர வேறெதுவுமே இல்லாமல் அபர்ணாவையே பார்த்திருந்தான் பரத்!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.