(Reading time: 9 - 17 minutes)

வல்லவனுக்கு வல்லவன் - ஜான்சி

ஹாய் குட்டீஸ்...

உங்களுக்கெல்லாம் நான் இப்போ ஒரு கதை சொல்லப் போறேன்.

ஒரு கிராமத்தில 2 வருசமா மழையே இல்லாம இருந்ததாம், அதனால விவசாயம் செய்ய முடியாமல், சாப்பாட்டுக்கே வழியில்லாமல்  அந்த ஊர் மக்கள் எல்லோரும் ரொம்ப கவலையா இருந்தாங்களாம்.கொஞ்சம் கொஞ்சமா அவங்க எல்லோரும் அந்த ஊரிலிருந்து புறப்பட்டு பக்கத்திலிருக்கிற மற்ற ஊருகளிலோ இல்லை கொஞ்சம் தூரத்தில் இருக்கும் நகரத்துக்கோ போயி வேலை செய்ய ஆரம்பித்தாங்களாம்.

Lionஅதே மாதிரி அந்த ஊரிலே இருந்த ஒரு கணவன் மனைவி அவங்க பேர் என்ன சொல்லுங்க பார்ப்போம்....................... ஓ நான் இன்னும் சொல்லவே இல்லில்ல........... அவங்க பேர் வேலன், வேலாயி சரியா....அவங்க பக்கத்திலிருந்த நகரத்துக்கு போய் வேலை தேட ஆரம்பிச்சாங்க எப்படியோ ரொம்ப முயற்சி செய்து அவங்களுக்கு ஒரு வேலை கிடைச்சுதாம் அந்த வேலை என்னன்னா இரவு நேரத்தில் அந்த நகரத்தில இருக்கிற ரோடுகளை துப்புரவு செய்கிற வேலை, அது ஏன் இரவில் வேலை? பகலில துப்புரவு செஞ்சா என்னன்னு தான  கேட்கறீங்க.......ரொம்ப சரியாதான்  கேட்டிருக்கீங்க........ அது ஏன்னா பகலில அந்த ரோடுகளில் வாகனங்கள் மிக அதிகமாக போவதும் வருவதுமாக இருக்குமாம் அதனால இரவில அந்த வேலை ..இப்போ புரிஞ்சதா.

இப்படி வெவ்வேறு ரோடுகளில் துப்புரவு வேலை செய்யும்  வேலனும், வேலாயியும் நள்ளிரவு தாண்டிய பின்னால் அவங்க குடிசைக்கு வந்து ஓய்வெடுப்பார்களாம்,அவர்களுக்கு ரொம்ப குறைவான  சம்பளம் தான் கிடைத்தது அதனால அவங்களால வித விதமா சாப்பிட முடியலையாம்.சாதத்துக்கு மட்டும் தான் அவங்க கிட்டே பணம் இருந்ததனால தினமும் அவங்க 2 வேளையும் கஞ்சியும் வெங்காயமும் தான் சாப்பிடுவாங்களாம். ஆனால் அவங்களுக்கு மனசில ரொம்ப நாளாவே ஒரு ஆசையாம். வேலன் நினைச்சுப்பாராம் " எனக்கு சப்பாத்தி சாப்பிட ரொம்ப ஆசையா இருக்கு, என்ன செய்றது". அதே மாதிரி வேலாயி நினைச்சுப்பாங்களாம் " எனக்கு தோசை சாப்பிட ரொம்ப ஆசையா இருக்கு, சரி பரவாயில்லை ஊரில மழை பெய்ததும் ஊருக்கு போயி விவசாயம் செய்து நல்ல கவலை இல்லாமல் தோசை சுட்டு சாப்பிடனும்" என்று  இப்படியே சில நாட்கள் சென்ற பின்னால ஒரு நாள் இரவு அவங்க இரண்டு பேருக்குமே ஒரு ஆச்சரியமான விசயம் நிகழ்ந்ததாம்.வேலாயி துப்புரவு செய்து வந்த அந்த ரோட்டில பெருசா ஏதோ கல்லு மாதிரி கிடந்ததாம் எவ்வளவு  நீளம்னா உங்க கையை மேலே தூக்கி காண்பிங்க............ம்ம் ரொம்ப சரி அப்படித்தான் உங்க கை அளவு நீளம் எவ்வளவு பருமன் தெரியுமா உங்க கைகள் இரண்டையும்  முன்னே நீட்டி கோர்த்துக் கொள்ளுங்க........ம்ம் அவ்வளவு பருமன் ஆனா அது கல்லு இல்லை .............அது என்ன தெரியுமா அது ஒரு  நெல்மணி..............நெல்மணியா அது என்னன்னு தானே கேட்கிறீங்க...அது வேற ஒண்ணுமில்ல அரிசி இருக்கில்ல அது விளையும் போது ஒரு பிரவுன் கலர் தோலால மூடியிருக்கும் அதை தான் நாம நெல்மணின்னு சொல்லுவோம் சரியா.. அப்படின்னா வேலாயிக்கு ஒரு பெரிய அரிசி கிடைச்சிருக்கு அதை பார்த்த அவளுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்ததாம். உடனே அவள் அந்த நெல்மணியை பத்திரமா கொண்டு போய் ஒரு மரத்தின் அடியில் வைத்து மேல கொஞ்சம் இலைகள் போட்டு மூடி வைத்து விட்டு வேலையை முடித்து விட்டு வந்து சுமக்கவே முடியாமல் அந்த பெரிய நெல்மணியை மிக சந்தோசமாக வீட்டுக்கு கொண்டுச் சென்று அதை தோல் நீக்கி அரைத்து,சரி நாம் இனி மேல் தோசை வார்க்கலாம் என நினைத்தாளாம்.

அதே நேரம் வீட்டிற்க்குள் நுழைந்த வேலன் கையில் ஒரு பெரிய கோதுமை மணியை பார்த்து ஆச்சரியப்பட்டாள், உடனே வேலன் ரொம்ப மகிழ்ச்சியாக," வேலாயி பார்த்தாயா? நான் ரொம்ப நாளாக சப்பாத்தி சாப்பிட வேண்டும் என்று ஆசைப் பட்டேன் இல்லையா அது தான் எனக்கு கடவுளாக பார்த்து இந்த கோதுமை மணியை வழியில் போட்டிருக்கிறார்... இனி கொஞ்ச நாளைக்கு நாம இந்த மாவில சப்பாத்தி செஞ்சு சாப்பிடலாம் என்ன"........... என்றதும், அவளும் அந்த நெல்மணியின் தோலை காட்டி (அந்த தோலை என்ன சொல்வாங்கன்னு உங்களுக்கு தெரியுமா? உமின்னு சொல்வாங்க)...அந்த உமியை காட்டி ,"எனக்கும் ஒரு பெரிய நெல்மணி கிடைத்தது நான் அதை அரைத்து வைத்து இருக்கிறேன், வாங்க அதில் கொஞ்சம் மாவில் தோசை சுட்டு நாம சாப்பிடலாம்" என்று சொன்னாள். அவனுக்கு அதை கேட்டு மிக மகிழ்ச்சியாக இருந்தது. "சரி, நீ தோசை சுட ஆரம்பித்து விடு நான் இந்த கோதுமை மணியை சுத்தம் செய்து மாவாக அரைத்து வைக்கிறேன் கூடவே ஒன்றிரண்டு சப்பாத்தியும் நீ சுட்டு தந்தால் நாம் இருவரும் சந்தோசமாக சாப்பிடலாம்" என்று சொல்லி இருவரும் தத்தம் வேலைகளில் மூழ்கினார்கள். அவர்கள் கொஞ்ச நாளைக்கு அவர்கள் விருப்பப் படி சாப்பிட வாய்ப்பு கிடைத்தது எண்ணி மிக மகிழ்ந்தார்கள்.

ப்போது இன்னமும் விடிந்து இருக்கவில்லை, அவர்கள் வசித்து வந்தது காட்டிற்க்கு அருகிலுள்ள ஒரு இடம் அந்த இடத்தில் ஒரு போக்கிரி சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது அது காட்டிற்க்குள் சென்று வேட்டையாடுவதை விரும்பாமல் யார் வீட்டிற்காவது சென்று அவர்கள் சமைத்து வைத்து இருப்பதை சாப்பிட்டு விட்டு வந்து விடும்....என்னது உங்க க்ளாஸில இப்படி ஒரு பையன் இருக்கிறானா? அவனும் இப்படித்தான் உங்க டிஃபனை எடுத்து சாப்பிடுவானா...ம்ம் இந்த அசிங்கமும்....இல்லையில்லை சிங்கமும் அப்படித்தான் ஆனால் வேலன் வேலாயி வீட்டில இது வரை அப்படி எதுவும் சாப்பிட இருக்காததனால அது  அங்கே போகவில்லை...ஆனால் அன்னைக்கு ரொம்ப சந்தோசமா வேலாயி சுர்ர்..........சுர்ர்ருனு தோசை மாவை கல்லில் ஊற்றி வார்த்துக் கொண்டு இருக்க அந்த வாசம் சிங்கத்தின் மூக்கை சென்று அடைந்தது அவ்வளவுதான் எங்கேயிருந்து வாசம் வருதுன்னு தேடி அது அவங்க வீட்டிற்க்கு வந்திட்டதாம்.

அதை பார்த்து வேலனும் வேலாயியும் மிரண்டு போயி நின்னாங்களாம், உடனே சிங்கம் கர்ஜித்து, "ஏய் என்ன சமைச்சுக்கிட்டு இருக்கிறீங்க?" என்று மிரட்டலா கேட்டதாம், அவங்க ரெண்டு பேரும் நடுங்கி கிட்டே "நாங்க தோசையும் , சப்பாத்தியும் சமைக்கிறோம்"என்றதும் சிங்கம் வீட்டிற்க்கு  உள்ளே அடாவடியாக நுழைந்து சுற்றிப் பார்த்த போது அங்கே 2 பெரிய பாத்திரத்தில் அரிசி மாவும் , கோதுமை மாவும் இருந்ததாம், அதை பார்த்த சிங்கம் நாக்கை சப்புக் கொட்டிக்கொண்டு, " நீங்க ரெண்டு பேரும் இன்னும் ஒரு 1 மணி நேரத்தில இந்த மாவு எல்லாத்தையும் தோசையாவும் , சப்பாத்தியாவும் சுட்டு என்னோட குகைக்கு கொண்டு வர்றீங்க என்ன சொன்னது புரிஞ்சதா? இல்லைன்னா நான் என்ன செய்வேன்னு தெரியுமில்ல? என்று மிரட்டி விட்டு சென்று விட்டதாம்.

இப்போ அவங்க ரெண்டு பேரும் ரொம்ப சோகமாக இருந்தாங்களாம், நாம எவ்வளவு ஆசையாக இருந்தோம் இப்படி ஆகி போச்சே.......என்ன செய்யலாம்னு ரொம்ப கவலையா இருந்தாங்களாம். அப்போ வேலனுக்கு ஒரு யோசனை வரவும் வேலாயியை பார்த்து நீ கவலையே படாதே வேலாயி இந்த சிங்கத்திற்க்கு நாம இன்று நல்லதொரு பாடம் கற்பித்து ஆக வேண்டும், நம்மை போன்ற ஏழைகள் வீட்டில போய் தினமும் எல்லா சாப்பாட்டையும் சாப்பிட்டு விட்டு வந்து விடுகின்றது அவர்களுக்கு எவ்வளவு வருத்தமாக இருக்கும். இன்று நம் வீட்டிலேயே வந்து நம் ஒரு வாரத்திற்கான சாப்பாட்டையும் கொடுக்க சொல்கின்றது நீ 6 தோசைகளும் 6 சப்பாத்திகளும் ம்ட்டும் சுட்டு வை நான் இப்போ வருகிறேன் என்று புறப்பட்டு சென்றான். கொஞ்ச நேரத்தில் திரும்பி வ்ந்தவன் அவள் சுட்டு தந்தவைகளை ஒரு பாத்திரத்தில் அடுக்கினான் எப்படி அடுக்கினான் தெரியுமா? முதலில் ஒரு தோசையை கீழே வைத்தான் அதன் மேலே ஒரு சப்பாத்திக் கள்ளியை தோசை அளவில் செதுக்கி வைத்தான் அதன் மேலே இன்னொரு தோசையை வைத்தான், இப்படியே தோசையையும், சப்பாத்தியையும் சப்பாத்திக் கள்ளியின் ஊடே அடுக்கி வைத்தான், வெளிப் பார்வைக்கு ஒரு வித்தியாசமும் தெரியவே இல்லை....சரி இந்த சப்பாத்திக்கள்ளின்னா என்னன்னு கேட்கறீங்களா உங்க ஸ்கூலில் படிச்சிருப்பீங்களே "Cactus" னு அந்த கள்ளிச்செடியில் ஒரு வகை கொஞ்சம் வட்டமா, தட்டையா இருக்கும் அதைதான் சப்பாத்திக் கள்ளின்னு சொல்வாங்க...இப்போ புரிஞ்சதா குட்டிங்களா...

அந்த தோசை, சப்பாத்தி பாத்திரங்களை சிங்கத்தின் குகைக்கு கொண்டுச் சென்று சிங்கத்தின் முன் வைத்த வேலன், ரொம்ப பணிவாக சிங்கம் சர், சிங்கம் சர் இதோ தோசையையும், சபாத்தியையும் கொண்டு வந்திட்டேன் என்று சொன்னாம். உடனே ரொம்ப சந்தோசமா எழுந்து சாப்பிட உட்கார்ந்த சிங்கம் "ம்ம்...ம்ம் சரி, கொஞ்சம் இங்க இருக்கு மீதி எங்கே?ன்னு மிதப்பா கேட்டுச்சாம். உடனே வேலன் "அதாங்க இது"....ன்னு பதில் சொல்லலாமான்னு ஒரு நிமிசம் யோசிச்சாலும் அப்படி சொல்லாம பவ்யமா," சிங்கம் சர் மீதியையும் இப்போ கொண்டு வறேன், ஆறிப் போயிடக்கூடாதுன்னு தான் உடனே கொண்டு வந்தேன் , இதை உடனே சாப்பிட்டு எங்களை கௌரவிக்கணும்"னு சொன்னானாம்."சரி நமக்கு ஒரு அடிமை சிக்கி கிட்டான் இனிமேல் கொண்டு இவனை வைத்து நம் சாப்பாட்டு பிரச்சனையை  சமாளித்துக்கொள்ளலாம்" என்று புளங்காகிதம் அடைந்த சிங்கம் அந்த தோசைகள் மேலயே சப்பாத்திகளையும் வைத்து நாமெல்லாம் பர்கர் சப்பிடுவோம் இல்ல அப்படி எடுத்துக் கொண்டு வாய் கிட்டே கொண்டு சென்றதாம், வேலனுக்கு சிங்கம் உண்மையை கண்டுபிடித்து விடக்கூடாது என்று பயமாக இருந்தாலும் கூட  இன்னும் விடியாமல் இருந்ததாலும், அந்த குகைக்குள் வெளிச்சம் இல்லாததாலும் தைரியமாக நின்றுக் கொண்டிருந்தான்.   

அப்போது சிங்கத்திற்க்கு மனம் இறங்கி," ஏம்பா நீ இன்னும் சாப்பிட்டிருக்க மாட்டியில்ல  ஒரு பைட் சாப்பிடுறியான்னு கேட்டதாம்", இது என்னடா வம்பா போச்சுன்னு நினைத்த வேலன்," வேண்டாம் சிங்கம் சர் நீங்க சாப்பிட்டா நான் சாப்பிட்ட மாதிரின்னு "சொன்னானாம், சரின்னு சொல்லி அந்த சிங்கம் அத்தனையையும் தன் வாயில போட்டு சாப்பிட ஆரம்பிச்சதாம் சப்பாத்திக்கள்ளியிலிருந்த முள்ளு எல்லாம் அதன் நாக்கு, வாய் எல்லா இடமும் தைத்து , முகமெல்லாம் ரத்தக் களறி ஆகிடுச்சு. எங்கேடா அவனனு வேலனை தேடினால் அவன் எப்பவோ அந்த குகையிலிருந்து தப்பித்து ஓடியிருந்தான். சரி அவனை பிடித்தும் தான் என்ன செய்ய முடியும்...வாயெல்லாம் முள் குத்தி ரணகளமாகிடுச்சே... "இந்த மனுசப்பய நம்மள விட கேடியா இருப்பான் போல இருக்கே....... இனிமேல் இந்த இடத்திலேயே நாம இருக்க கூடாது" ஆமான்னு புலம்பிகிட்டே அசிங்கப்பட்ட அந்த சிங்கம் காட்டிற்க்கு அந்த பக்கம் போயிடுச்சாம்.

இங்கே வேலனும் வேலாயியும் அவங்க குடிசையில் ஆசை ஆசையாய் அவங்களுக்கு விருப்ப உணவுகளை சாப்பிட்டு சந்தோசமா இருந்தாங்களாம்.

{kunena_discuss:875}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.