(Reading time: 12 - 24 minutes)

 

வர்களும் வீடு வந்து சேர்ந்தார்கள்.அம்மாவிடம் அந்த பேசும் தக்காளியை கொடுத்து விபரம் கூறினார்கள்.அம்மாவிற்க்கு மிக மிக சந்தோசமாக இருந்தது.அம்மா அந்த தக்காளியை தன்னுடைய மகனைப் போலவே பாவித்து அன்பாக கவனித்துக் கொண்டார்கள், அதை குட்டி என்று அழைக்க ஆரம்பித்தார்கள் . குட்டி நாள் முழுவதிலுமாக பல்வேறு கேள்விகளை கேட்டாலும் அம்மா பொறுமையாக பதில் சொல்லி நிறைய விசயங்களைக் கற்றுக் கொடுத்தார்கள்.அமர், சமருக்கு இப்போது கவலையின்றி வேலைக்கு சென்று வர முடிந்தது. குட்டி தக்காளி அம்மாவுக்கு மிகவும் உதவிகரமாகவும் இருந்து வந்தது.

இப்படி எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்து வந்த போது அந்த ஊருக்கு ஒரு முனிவர் வந்தார்.அந்த முனிவர் பார்க்க மிக பரிதாபத்திற்க்கு உரிய வகையில் எலும்பும் தோலுமாக பரதேசியை போன்று காட்சியளித்தார்.அவர் பல்வேறு ஊர்களில் சுற்றியலைந்து அன்பான , சுயநலமில்லாத ஒரு குடும்பத்தை கண்டடைய வேண்டும் என்று தேடிக் கொண்டு இருந்தார், ஏனென்றால் அவரிடம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மந்திரக் கோல் இருந்தது, அந்த மந்திரக் கோலால் எவரும் தனக்கு வேண்டிய எல்லாவற்றையும் அடைந்துக் கொள்ளலாம், ஒருவேளை அந்த மந்திரக் கோல் சுயநலமிக்க எவர் கையிலாவது அகப்பட்டால் அவர்களால் உலகிற்கே கெடுதல் உண்டாகி விடும் என்பதால் நல்ல மனிதர்கள் கையில் அந்த மந்திரக் கோலை கொடுக்க காத்துக் கொண்டு இருந்தார்.

அவரது தோற்றத்தை பார்த்த மக்கள் அவரை வரவேற்க விருப்பப் படவில்லை, இரவில் எவர் வீட்டின் திண்ணையில் இளைப்பாறச் சென்றாலும் அவரை அவர்கள் விரட்டினர்.அந்த முனிவர் ஓரிரண்டு மன்னர்களையும் நாடிச் சென்றிருந்தார்,ஆனால் அவர்களும் மிக சுயநலமானவர்களாக காணப் பட்டார்கள், அதிலும் அழகூரின் மன்னனாகிய மகேந்திரனோ மிகவும் கொடியவனாக இருந்தான், தன் மக்கள் நலம் பேணாமல் தன்னுடைய வசதிகளை மட்டும் பெருக்கிக் கொண்டு வாழ்ந்து வந்தான்.

ரு நாள் இரவு  லக்ஷ்மி அம்மாவின் வீட்டின் அருகே வந்து சேர்ந்த அந்த முனிவர் அவ்வீட்டின்  திண்ணையில் சற்றுப் படுத்து இளைப்பாற எண்ணினார், அந்த நேரம் அங்கு வந்த லக்ஷ்மி அம்மா அவரைப் பார்த்து, அவர் பசியோடு இருப்பதை அறிந்து, வீட்டிற்க்குள்  வரவேற்று உணவு பரிமாறினார்.வீட்டில் இருந்த மற்றவர்களும் சாப்பிட அமர்ந்தனர், முனிவருக்கு பரிமாறியதால் அம்மாவிற்க்கு சாப்பாடு குறைவாக இருப்பதை கண்ட அமர், சமர் மற்றும் குட்டித் தக்காளி தங்கள் தட்டிலிருந்து அம்மாவிற்கு சாப்பாடு எடுத்து வைத்தார்கள், அம்மா வேண்டாம் என்று சொல்லியும் கேட்கவில்லை.இதை பார்த்துக் கொண்டிருந்த முனிவருக்கு தான் தேடிய சுயநலமில்லாத குடும்பம் இது தான் என மனதிற்கு தோன்றியது. அதனால் அன்றிரவே அந்த முனிவர் அந்த மந்திரக் கோலை அவர்களிடம் கொடுத்தார். அந்த மந்திரக் கோலால் அவர்கள் தனக்கும் , பிறருக்கும் நன்மைகள் செய்துக் கொள்ளலாம் என்றும், ஆனால் மந்திரக் கோல் பற்றி யாருக்கும் சொல்லக் கூடாது, எவர் கையிலும் அகப் படாமல் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறிச் சென்றார்.  

றுநாள்  காலையில் அந்த மந்திரக் கோலை என்ன செய்வது என்று விவாதித்தனர். அப்போது அமரும் , சமரும் ஒருமித்த கருத்தோடு அம்மா நாங்கள் இந்த மந்திரக்கோலின் உதவியால் வாழ விரும்பவில்லை எப்பவும் போலவே வேலைக்கு சென்று நம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் ஆனால் இந்த மந்திரக் கோலால் பிறருக்கு ஏதாகிலும் நன்மை செய்ய முடிந்தால் செய்யுங்கள் என்று சொன்னார்கள்.

அம்மா அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார்கள், பிறருக்கு பல்வேறு வகையில் உதவ ஆரம்பித்தார்கள். ஏழைகள் வறுமையான நிலையில் லக்ஷ்மி அம்மாவிடம் கேட்டால் அவர்களுக்கு தேவையான உணவு தானியங்கள், குளிர் நேரத்தில் கம்பளிகள் , போர்வைகள், என தேவையான எல்லாவற்றையுமே அந்த மந்திரக் கோலால் வருவித்து கொடுத்தார்கள்.இந்த விபரம் ராஜா மகேந்திரனுக்கு தெரிய வந்தது, ஏழையாக இருக்கும் இந்த குடும்பத்தினரால் பிறருக்கு எப்படி உதவ முடிகின்றது என்று அவருக்கு தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது. அதனால் இரவில் ஒரு முதியவரைப் போல வேடமிட்டு அவர்கள் வீட்டிற்க்கு  போய் உதவி கேட்டார், அவர் கேட்டபடியே ஒரு போர்வையை கொண்டு வந்த அம்மாவிடம் அவர் தான் இரவு அவர்கள் வீட்டிலேயே தங்க அனுமதிக்கும் படி வேண்டிக் கொண்டார்.

அவரைப் பார்த்து மனம் இரங்கியதால் அவரை தங்க அனுமதித்தனர்.இரவில் எல்லோரும் தூங்கியப் பின்னர் மன்னர் மகேந்திரன் எழுந்து லக்ஷ்மி அம்மா போர்வையை எடுத்து வந்து தந்த அந்த அறையை அடைந்தார்,வெகு நேரம் தேடிய பின் அங்கு மிகப் பத்திரமாக மந்திரக் கோல் ஒரு பேழையில் வைக்கப் பட்டு இருந்ததை கண்டார், உடனே இந்த மந்திரக் கோல் காரணமாகவே அவர்களால் பிறருக்கு உதவ முடிகின்றது என்று புரிந்துக் கொண்டார். அதை ஒரு கள்வனைப் போல பத்திரப் படுத்திக் கொண்டு அங்கிருந்து தப்பி  சென்று விட்டார்.

காலையில் எழுந்து மந்திரக் கோலை காணாமல் அனைவரும் மிகவும் திகைப்புக்கு உள்ளாகினர், இரவில் வந்தது யார் என்று புரியாமல் சிந்தித்துக் கொண்டு இருந்த போது குட்டி ஒரு சிறு துணியை கண்டு பிடித்து கொண்டு வந்தது, அதில் ராஜ முத்திரை இருந்தது, இரவில் தப்பித்துச் செல்லும் போது மன்னர் மகேந்திரன் கையிலிருந்து அது தவறி விழுந்திருந்தது.

அதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர் நாட்டை காக்கும் மன்னரே இப்படி செய்யலாமா? என்று எண்ணி வருந்தினர். அவர் நாட்டின் மன்னராயிற்றே அவரிடம் சென்று எப்படி கேட்பது என்று அமரும், சமரும் தயங்கினர், ஆனால் குட்டிக்கு மிகவும் கோபமுண்டாயிற்று அம்மா தடுத்தும் கேட்காமல் அது விறு, விறு என்று அரசவைக்கு சென்று மந்திரக் கோலை தரச் சொல்லிக் கேட்டது.மன்னன் மகேந்திரனோ முதலில் தனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது என்று மறுத்தான்.

பின்னர் என்ன எண்ணினானோ குட்டியிடம் மிகவும் ஆணவமாக "ஆமாம் என்னிடம் தான் அந்த மந்திரக் கோல் இருக்கிறது. நான் எனக்கு பெரிய பெரிய மாட மாளிகைகளை கட்டிக் கொள்ளப் போகின்றேன், என் கஜானாவை செல்வங்களால் நிரப்பப் போகின்றேன்.

நீ ஒரு இத்தனூண்டு தக்காளி , நான் மிதித்தேன் என்றால் இப்பவே நசுங்கிப் போவாய். உனக்கு எத்தனை தைரியம் இருந்தால் என்னிடம் வந்து கேள்வி கேட்பாய்.உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது, பேசாமல் இங்கிருந்து போய் விடு "என்று கர்ஜித்தான்.

அதைக் கேட்ட குட்டிக்கு இன்னும் அதிகமாக கோபம் வந்து விட்டது, முகமெல்லாம் ஜிவு ஜிவு என்று செக்க செவேலென்று மாறி விட்டது.உடனே அரச மாளிகையிலிருந்து வெளியேறிய குட்டி அக்கம் பக்கத்திலிருந்த எல்லா நீர் நிலைகளிலும் சென்று அங்கு இருந்த தண்ணீரை எல்லாம் தன் மித மிஞ்சிய கோபத்தில் உறிஞ்சி குடித்து விட்டது. 

கிணற்றில் நீ நிரப்பிக் கொண்டிருந்த மக்கள் கிணறு வறண்டது கண்டு திகைத்தார்கள். குளத்தில் குளித்துக் கொண்டு இருந்த மக்கள் திடீரென்று  கட்டாந்தரையில் நிற்பது கண்டு மிரண்டு ஓடினார்கள். அவ்வூருக்கு நீர் தரும் ஏரியிலும் ஒரு துளியும் நீர் இல்லாமல் ஆனது.

மக்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக மன்னனிடம் முறையிட வந்தார்கள், அரசவையில் ஒரே கூச்சலும் குழப்பமும் நிலவியது. மன்னனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை அவன் எல்லோருடனும் ஆலோசிக்க தன் மாடத்தில் வந்து நின்று மக்களிடம் பேசிக் கொண்டிருந்தான்.அப்போது அங்கே நடக்கவே முடியாமல் உருண்டு திரண்டு வந்த குட்டி இப்போது மிக பிரமாண்டமான குண்டுத் தக்காளியாக இருந்தது , அதன் உருவம் அரச மாளிகையை விட பெரியதாகவும் பயமுறுத்துவதாகவும்  இருந்தது.அப்போதுதான் மன்னனுக்கு நீர் நிலைகளிலிருந்த தண்ணீர் என்ன ஆனது என்று புரிய வந்தது.

மன்னனிடம் வந்த தக்காளி "என்ன? இப்போது மந்திரக் கோலை தருகின்றாயா? இல்லையா? என்றுக் கேட்டது.மன்னன் அதன் உருவைக் கண்டு மிரண்டுப் போனவனாக உடனே மந்திரக் கோலை கொடுத்து விட்டான். குட்டிக்கும் கோபம் குறைந்து நீர் நிலைகளில் பழையபடி  தண்ணீரை விட்டு விட்டு தன்னுடைய வீட்டிற்க்கு சென்றது.

வீட்டிற்க்கு சென்று அம்மாவிடம் மந்திரக்கோலை கொடுத்த குட்டியை அனைவரும் பாராட்டினார்கள், தொடர்ந்து ஏழை எளியவருக்கு மந்திரக் கோலின் உதவியால் அவர்கள் தேவையானவற்றை கொடுத்து வந்தனர்.

மகேந்திர மன்னனும் யாரையும் உருவத்தை வைத்து எடை போடக் கூடாது, பிறரை குறைவாக எண்ணக் கூடாது என்று உணர்ந்து பேராசைகளை குறைத்து மக்களுக்கு ஏற்ற நல்லாட்சி நடத்த ஆரம்பித்தான்.

{kunena_discuss:875}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.