(Reading time: 3 - 6 minutes)

ஆரோக்கியக் குறிப்புகள் - சர்க்கரை (நீரிழிவு) நோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன?

ங்கள் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் (ஒரு வகையான சர்க்கரை) அதிகமாவது தான் சர்க்கரை நோயின் அறிகுறிகள் தெரிய காரணம் ஆகிறது.

 

இந்த எச்சரிக்கை அறிகுறிகள் மிகவும் லேசானவை. அவற்றை நீங்கள் கவனிக்கவில்லை என்றால் பல ஆரோக்கிய குறைப்பாட்டை சந்திக்க வேண்டி வரும்.

 

நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள்

பசி மற்றும் சோர்வு.

நீங்கள் உண்ணும் உணவை, உங்கள் செல்கள் ஆற்றலுக்காக பயன்படுத்தும் குளுக்கோஸாக உங்கள் உடல் மாற்றுகிறது. ஆனால் உங்கள் செல்களுக்கு குளுக்கோஸை எடுக்க இன்சுலின் தேவை.

உங்கள் உடல் போதுமானதாக இன்சுலினை உருவாக்கவில்லை என்றால், அல்லது உங்கள் செல்கள் உங்கள் உடல் உருவாக்கும் இன்சுலினை எதிர்த்தால், குளுக்கோஸ் அவற்றில் சேர முடியாது.

உங்களுக்கு எதையும் செய்ய சக்தி இருக்காது.

அதனால் அடிக்கடி பசி எடுக்கும் உணர்வு தோன்றும், கூடவே வழக்கத்தை விட அதிகமாக சோர்வும் இருக்கும்.

 

அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் தண்ணீர் தாகம் எடுத்துக் கொண்டே இருப்பது.

சராசரி நபர் வழக்கமாக 24 மணி நேரத்தில் நான்கு முதல் ஏழு முறை சிறுநீர் கழிக்க வேண்டும். ஆனால் நீரிழிவு நோயாளிகள் இன்னும் அதிகமாக சிறுநீர் செல்லக்கூடும். ஏன்?

பொதுவாக, குளுகோஸ் சிறுநீரகங்கள் வழியாக செல்லும் போது நம் உடல் அதை மீண்டும் உறிஞ்சிக் கொள்கிறது. ஆனால் நீரிழிவு உங்கள் இரத்த சர்க்கரையை அதிகமாக்கும் போது, சிறுநீரகங்களால் எல்லா குளுகோஸையும் எடுத்துக் கொள்ள முடியாமல் போகலாம். இதனால் தான் அதிக சிறுநீர் கழிக்க நேர்கிறது. மேலும் இப்படி அதிக சிறுநீர் கழிப்பதால், உடலில் இருக்கும் திரவங்கள் அதிகமாக வெளியேறுகிறது.

அப்படி அதிக சிறுநீர் கழிப்பதால், மிகவும் தாகம் ஏற்படும். அதனால் தண்ணீர் அதிகமாக குடிக்க, குடிக்க, இன்னும் அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டி இருக்கும்.

 

வறண்ட வாய் மற்றும் தோல் அரிப்பு

உங்கள் உடல் சிறுநீர் கழிக்க திரவங்களைப் பயன்படுத்துவதால், மற்ற விஷயங்களுக்கு ஈரப்பதம் குறைவாக இருக்கும். அப்படி நீரிழப்பு ஏற்படுவதால் உங்கள் வாய் வறண்டு போகும். அதேப்போல சருமமும் வறண்டுப் போகும். அதன் பயனாக சருமத்தில் அரிப்பு ஏற்படும்.

 

மங்கலான பார்வை.

உடலின் திரவ அளவு மாறுவது கண்களில் உள்ள லென்ஸ்களை வீக்கமடைய செய்யும். இதனால் அவற்றின் வடிவம் மாறும், நல்ல கவனம் செலுத்த இயலாது.

 

நீரிழிவு நோயின் மற்ற அறிகுறிகள்

ஈஸ்ட் நோய்த்தொற்றுகள்.

ஈஸ்ட் குளுக்கோஸை உண்கிறது. எனவே க்ளூகோஸ் நிறைய இருக்கும் இடத்தில் அவை செழித்து வளரும். கீழே குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டுமல்லாமல் உடலில் எந்தவொரு சூடான, ஈரப்பதம் இருக்கும் தோலிலும் இந்த தொற்று வளரலாம்.

கை விரல்கள், கால்விரல்களுக்கும் இடையில்

மார்பகங்களின் கீழ்

பாலியல் உறுப்புகளில் அல்லது அதைச் சுற்றி

 

மெதுவாக குணமாகும் புண்கள்

காலப்போக்கில், உயர் இரத்த சர்க்கரை உங்கள் இரத்த ஓட்டத்தை பாதிக்கும் மற்றும் நரம்பு சேதத்தை ஏற்படுத்தும். இதனால் உங்கள் உடல் காயங்கள் குணமாவது கடினமாகும்.

 

உங்கள் பாதங்களிலோ, கால்களிலோ வலி அல்லது உணர்வின்மை.

இது நரம்பு சேதத்தின் மற்றொரு விளைவாகும்.

 

நீங்கள் 45 வயதை கடந்தவர் என்றால் சர்க்கரை நோய்க்கு பரிசோதனை செய்வது முக்கியம். இதனால் வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உங்களின் ஆரோக்கியத்தை சீர் ஆக்கலாம்.

    

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.