(Reading time: 5 - 9 minutes)

பொது - திருநங்கைகள் - ஜான்சி

transGenders

திரு நங்கைகள் மூன்றாம் பாலினம். இவர்களுக்கு நாம் நம் சமூகத்தில் கொடுத்திருக்கும் இடம் (எழுதும்போதே அதுதான் இடம் கொடுக்கவே இல்லியே அதென்ன கொடுத்திருக்கும் இடம்னு எழுதறே? என்று என் மனசாட்சி இடித்துரைக்கின்றது.)

திருநங்கை மறுவாழ்வு , மலர்ச்சி எல்லாம் எளிதில் நிகழும் ஒன்று என்று எனக்கு சற்றும் நம்பிக்கையில்லை.

இதை வாசித்ததும் என்னடா இது இப்படி ஒரு எதிர்மறைக் கருத்தா? என்று எண்ணுவீர்கள்.

நீங்கள் எல்லாம் குறிப்பிடுவது போல திருநங்கை சமாச்சாரம் வெகு எளிதானது அல்ல.

அது ஏன் அப்படி எனக் கேட்பீர்களானால், அதைச் சொல்லும் முன்னர் காலச் சக்கரத்திற்குள் புகுந்து ஒரு 30-50 வருடங்கள் முந்தைய பெண்கள் வாழ்வை நிதானித்துப் பார்ப்போம்.

அப்போதெல்லாம் பெண்கள் விடுதலை என்று  அடிக்கடி முழங்கிக்கொண்டு இருந்தோம்/ இருந்ததாக அறிந்தோம் சரிதானே.

இப்போது என்னவாயிற்று? இப்போது முன்பை விடவும் பெண்கள் வாழ்க்கை முன்னேறி இருக்கிறது.

அந்த முன்னேற்றத்தோடு பிரச்சனைகள் புதிது புதிதாக முளை விட்டுள்ளன. அவற்றைக் கையாளும் முறைகளும் அறிந்துள்ளோம்.

ஏனென்றால் தேவையான மாற்றம் நமது குடும்பங்களில் இருந்து வெளிப்பட்டது.துயரத்தை அனுபவித்த ஒரு தலைமுறை அது இன்னொரு தலைமுறைக்கு பரவாமல் காத்துக் கொண்டது.

திருநங்கை வாழ்வு அப்படிப்பட்டதொன்றா? இல்லையே. அவர்கள் உடற் மனக் கூறு அறிந்த பின்னர் முதல் புறக்கணிப்பு அவர்கள் பெற்றோரிடமிருந்து அல்லவா வருகின்றது.

வீட்டில் வளர்க்கும் நாய் பூனையைக் கூட சட்டென்று வீட்டை விட்டு விரட்டி விடாமல் காக்கும் மக்கள் தான் திருநங்கை என்றதும் முதலில் புறக்கணிக்கின்றனர்.

முதல் மாற்றம் வரவேண்டியது வீட்டிலும், சுற்றத்திலும் தான்.

சரி அதன் பின்னர் என்னவாகின்றது? அவர்கள் தங்களைப் போன்றோருடன் அதாவது மற்ற திரு நங்கைகளுடன் இணைந்து வாழத் தொடங்குகின்றனர். அவர்கள் கையில் பொருளீட்ட உதவியோ, படிப்போ, வங்கி கடனோ கிடையாது. 

#அப்படியானால்  அவர்கள் சார்ந்த குழுவினர் செய்யும் வேலைகள் என்ன?

பிச்சை எடுப்பதுவும் , விபச்சாரமும் தான் அவர்கள் செய்யும் வேலைகள். அதன் காரணம் அவர்களுக்கு வேறு வேலைகள் தெரியாது. அதற்கு அவர்கள் பயிற்சி பெறவில்லை. கல்வி பெறவில்லை.ஆதரவு அளித்துக் காப்பாரும் இல்லை. ஒருவரையும் காக்காத அரசு அவர்களையும் காப்பது இல்லை.

#அவர்களுக்கு இல்லற வாழ்வு/ குடும்பம் அமைவதுண்டா?

ஒரு சிலர் திருமணம் செய்து கொள்கின்றனர். திருநங்கையின் கணவர்கள் அவர்கள் பிச்சைக் காசிலும் , விபச்சாரத்தில் வரும் பணத்திலுமே வாழ விரும்புகின்றவர்கள்.

#அவர்கள் எதிர்கால வாழ்க்கை/ முதிய வாழ்விற்கான ஏற்பாடு என்ன செய்கிறார்கள்?

தனக்கு ஜீனியராக ஒரு திருநங்கையைத் தேடி தன் மகளாக வளர்த்து பிச்சை எடுப்பதையும், விபச்சாரத்திலும் ஈடுபடுத்துகிறார்கள்.

#திருநங்கையாக இருப்பவர்கள் அனைவருமே பிறப்பால் திரு நங்கைகளா?

இல்லை பெரும்பாலானவர்கள் ஆண்களே. தனக்கு சிஷ்யை ( முதிய காலத்திற்கு பணம் சம்பாரித்துக் கொடுக்க) வாலிபர்களைக் கடத்தி அவர்களை செயற்கை முறையில் திருநங்கைகளாக்கி அவர்கள் வாழ்வை அழிக்கின்றனர்.

இந்த சுழற்சி மாற்றி மாற்றி இந்த உலகம் இருக்கும் மட்டும் இருந்துக் கொண்டே இருக்கும். இதில் மாற்றத்தை எதிர்பார்ப்பது கடல் அலை ஓயக் காத்திருப்பது போலத்தான்.

விபச்சாரத்தாலும், பிச்சைக் காசாலும் உண்டுக் கொழுத்துக் கொண்டு இருக்கும் திரு நங்கைகளுக்கு பின்னால் நிற்கும் அசுர நிழல்கள் இருக்கும் வரைக்கும் இதில் எந்த மாற்றமும் இருக்க போவதில்லை.

மாற்றம் வேண்டுமா? நான் குறிப்பிடுபனவற்றை நாம் எல்லோரும் பின்பற்றுவோம்.

  1. உங்கள் வீட்டில் திருநங்கையாக குழந்தை பிறந்துள்ளதா? அந்த குழந்தையை வீட்டை விட்டு வெளியேற்றாதீர்கள். அவர்களுக்கு கல்வி கொடுங்கள். சம்பாதிக்க வழி வகை அமைத்துக் கொடுங்கள்.
  2. உங்கள் வீட்டிலோ பக்கத்திலோ பெண்மை உரு/ நடைக் கொண்ட ஆண்கள் உள்ளனரா? அவர்களை இகழாதீர்கள்/ கிண்டலடிக்காதீர்கள். அவர்களும் இறைவனின் படைப்பே.
  3. உங்கள் வீட்டிலுள்ள குழந்தைகளை அது ஆணோ, பெண்ணோ கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ளுங்கள். இன்றைய நாட்களில் பொருட்களை விடவும் அதிகமாக களவு போவது குழந்தைகள் தான்.

இவையெல்லாம் செய்யச் செய்ய நாம் விரைவில் திருநங்கைகளுக்கான வாழ்வில் முன்னேற்றம் காணலாம்.

சமூகமும் நாமும் வேறல்ல.

மாற்றம் நம்மிலிருந்து மட்டுமே ஆரம்பிக்க வேண்டும்.

அனைவருக்கும் வாழ்த்துகள் 

வணக்கங்கள்.

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.