(Reading time: 4 - 7 minutes)

கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 56 - உன் கரமும் பற்றிடுவேனா….!!!! - மீரா ராம்

Ilam poovai nenjil

பதட்டமா?... பயமா?...

இரண்டுமே ஒருசேர்ந்தாற்போல்

நகத்தினைக் கடித்தபடி வாசலின் அருகே

குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தேன் நான்…

கண்கள் வாசலையும் தாண்டி சாலையில் நிலைத்திருக்க

கைகளை பிசைந்தபடி மீண்டும் நடந்தவள்

சற்றே திரும்பி சுவரில் மாட்டியிருந்த

கடிகாரத்தில் பார்வையை பதித்திட

“நேரமாச்சே….” உதடுகளும் முணுமுணுத்தது…

கரங்களை உதறியபடி முகச்சிணுங்கலும் கொண்டு

வெறிக்க வெறிக்க வெளியே பார்த்துக்கொண்டிருக்க

வாசற்படியிலேயே அமர்ந்துவிட்டேன்

கன்னத்தில் கைவைத்தபடி சோகமே தஞ்சமென…

சிறிது நேரத்திலேயே, குளிர்ந்த காற்று மேனியில் பட

வெளிச்சமானது என் வீட்டு திண்ணையினை நெருங்கியது…

சட்டென எழுந்தவள், சூரியனைக் கண்ட மலராய் புன்னகைக்க

என்னுள் எரிந்த தனல் அனைத்தும் அணைந்து போக

மனமெங்கும் உண்டான உவகையுடன் ஏறெடுத்து பார்த்தேன் நான்…

பார்த்த மாத்திரத்தில் முகத்தில் மலர்ச்சி ஏற்பட

மறுகணமே கோபமானது முகத்தினை சுருக்கியது…

பேசாமல் இருந்தவளின் பின்னேயே நீயும் தொடர்ந்து வர

“இதற்கொன்றும் குறைச்சல் இல்லை…”

மனமானது குறைபட்டுக்கொள்ள, நான் அப்படியே நின்றிட

நீயும் அக்கணமே நடையை நிறுத்திக்கொண்டாய்…

புன்னகை வந்த மறுகணமே அதை எனக்குள் புதைத்துவிட்டு

“இப்போதான் நேரம் கிடைச்சதா?...”

கோபத்தை குரலில் உண்டாக்கி நானும் கேட்டிட

நீயோ மௌனமாக தலைகுனிந்து கொண்டாய்…

“பேசாதீங்க… நானும் பேசலை… போங்க…”

சொன்ன மாத்திரத்தில் நீ அங்கிருந்து நகன்றிட

சட்டென இருள் சூழ்ந்தது என்னுள்…

“நான் சும்மாதான சொன்னேன்?... எங்க போனீங்க?... வாங்க…”

நான் கெஞ்சி கொஞ்சிட நீயோ மசியவில்லை…

உன் அரவம் இல்லாது மனமானது வெறுமையை சுமந்திட

உதடு துடித்து உணர்வை அடக்கிட்ட என் கண்களில்

கண்ணீர் இப்பவோ அப்பவோ என விழத்தயாராக

விழி நீர்ப்படலத்தின் நடுவே மங்கலாய்

வந்து நின்றாய் நீ சத்தமில்லாது…

“ஏன் இப்படி பண்ணுறீங்க?.. பயந்துட்டேன் தெரியுமா?...”

“போன்னு சொன்னா போயிடுவீங்களா?...”

முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு நான் கேட்டிட

முத்துப்பல் வரிசை காட்டி சிரித்திட்டாய் நீ….

“என்ன சிரிப்பு?...” நான் முறைத்துக்கொண்டு கேட்டிட

“நான் நிஜமாவே போயிட்டேன்னு நினைத்தாயா?...”

நீ என்னைப் பார்த்து கேள்வியாக கேட்டிட

“போகமாட்டீங்கன்னு தெரியும்… ஆனா ஒளிஞ்சுப்பீங்களே…

அதுதான் உங்களுக்கு கைவந்த கலையாச்சே…”

சொல்லியபடி நான் உன்னைப்பார்த்திட, அப்போது

எங்கிருந்தோ வந்த பெண் ஒருத்தி

உன்னை மறைத்துக்கொள்ள பார்க்க

“ஹேய்…” என கூச்சலிட்டு முடிப்பதற்குள்

அவளின் கரங்களுக்கு அகப்படாமல் நீ நழுவி வர

மூச்சே அப்பொழுது தான் வந்தது எனக்குள்…

“லூசு… அவளைப் பத்தி உனக்கு தெரியாதா?.. விடு….”

நீ இலகுவாக சொல்ல

என்னால் அது முடிந்திடவில்லை…

“உங்களுக்கு வேண்டுமானால் அது சகஜமாக இருந்திடலாம்…

எனினும் எனக்கு?...”

கேள்வியோடு நிமிர்ந்து பார்த்தவளின் முன்

விரிந்த வானமும், அது கொண்ட நட்சத்திரமும்

என்னவனான சந்திரன் நீயும், அந்த மேகவதியும் தென்பட

புன்னகை உதட்டில் இழையோடினாலும்

மனதின் ஓரம் ஒரு சிறு வலி இருந்தது உண்மையே…

ஆம்… தினம் தினம் நான் ரசித்திடும் என் அழகு மதி நீ…

சந்திரனாம், திங்களாம், குளிர்ந்தவனாம், அழகனாம்…

எத்தனை பெயர்களோ?...

எத்தனை இருந்தால் தான் என்ன?...

நிலவின் உருவில் உன்னை காண்கிறேனே தினமும்

அது ஒன்று போதாதா எனக்கு?...

என் அழகு மன்மதா…

இரவின் மடியில் நித்திரை கொள்ள

மனம் விழைந்திடவில்லையடா கண்ணா…

மாறாக எங்கே கண் இமைத்தாலும்

உன்னை தரிசித்திட முடியாதோ என்ற ஏக்கம் தான்

என்னுள் எங்கும் நிறைந்திருக்கிறது…

எப்பொழுதடா தீரும் எனது இந்த பரிதவிப்பு…

சொல்லடா என் சந்திரா…

தினமும் இரவில் நிலவாய் மட்டுமே தான்

உன்னைக் கண்டிடுவேனா?... இல்லை

நிலவை சேர்ந்த மங்கையாகி

உன் கரமும் நான் பற்றிடுவேனா?... 

பூ மலரும்

Ilam poovai nenjil 55

Ilam poovai nenjil 57

{kunena_discuss:1088}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.