(Reading time: 3 - 5 minutes)

கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 65 - எண்ணங்களில் உழன்றபடி….!!!! - மீரா ராம்

Ilam poovai nenjil

அப்பப்பா…

எத்தனை நாட்கள் விளையாடிருக்கிறாய்…


எதுவுமே தெரிந்திடாது நான் திணறி நின்றதென்ன?...

அதை நீ தூரம் நின்று ரசித்தது தான் என்ன?...

கள்வா….

மனதினுள் செல்லமாய் திட்டியவாறு,

என் எதிரே அமர்ந்திருந்த உன்னைக்

கண்டுகொள்ளாதவாறு நான் அமர்ந்திருக்க

நீயோ யோசனையில் ஆழ்ந்தாய்…

“என்ன இது… நிமிரவே மாட்டிக்குறா?...”

“ஒருவேளை நாம பார்க்குறது அவளுக்கு தெரிஞ்சிட்டோ?...”

எண்ணங்களுக்கு இடையில் நீ சிக்கிக்கொள்ள

உனது அந்த குழப்பத்தை மனதினுள் எழுந்த

வருத்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன் நான் உனக்குத் தெரியாமல்…


கோவிலை விட்டு வெளியேறும் வரை

என் பார்வையினை நீ சந்தித்திட நான் இடம் கொடுத்திடவில்லை…

ஒரு கட்டத்தில் வெறுப்பாகி, முகத்தில் காட்டத்தை பிரதிபலித்தாய் நீ….

அதற்கும் நான் மசிந்திடவில்லை….

பூஜை முடிந்து கோவிலை விட்டு வெளியே வந்து

மெல்ல நடக்கையில் என் பின்னே வந்தாய் நீ

பத்தடி தொலைவிலேயே…

மென் நகை உதட்டில் உண்டாக, கண்டுகொள்ளாது

நானும் நடந்திட, உன் காலடி ஓசை அழுத்தமாய் பதிந்தது சாலையில்…

என் வீட்டை நானும் அடைந்து கதவை சாற்ற,

நீயோ தெருவின் ஓரத்தில் வந்து கொண்டிருக்கிறாய்…

மெல்ல பூனை போல் மொட்டைமாடிக்கு சென்று

நீ வருகிறாயா என நான் பார்த்திட,

வீட்டைக் கடந்து செல்கையில் உன் ஒற்றைப் பார்வை

கதவையும் தாண்டி உள்ளே நுழைந்ததே நிஜம்…

ஆத்திரம் பாதி, ஆதங்கம் பாதியாய்,

சாலையில் ஓங்கி காலை உதைத்திட்டாய் நீ வேகமாய்…

பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு பக்கென்று ஆகிட,

“பாருடா… கோபம் வருது சாருக்கு…”

மனமானது சிரிப்புடன் உரைத்திட,

அட என் கள்வா…

இதழ்களும் விரிந்து மலர்ந்து விகசித்தது உன்னைப் பார்த்துக்கொண்டே…

தெருமுனை வரை திரும்பாமல் சென்றிட்ட நீ

அந்த வளைவினை தொடப்போகும் முன்னர்,

சற்றே திரும்பி என் வீட்டைப் பார்த்திட்டாய் நீ…

ஏக்கம் கலந்த பார்வை ஒன்று நீ வீச

உருகி போனேன் நான் என்வசம் இல்லாது…

“இத்தனை காதலா?...”

“பின் ஏனடா இத்தனை நாள் மறைத்து வைத்தாய்…”

கோபமானது என்னுள் எழ, சட்டென

அக்கோபம் என் மீதே திரும்பியது வேகமாய்…

உன்னை காயப்படுத்திவிட்டேனே…

மனமானது விம்மி அரற்ற, கண்கள் கலங்க

தெருமுனையை நானும் பார்த்திட, நீயோ அங்கே இல்லை…

இதயமே வலிப்பது போல் இருக்க, கண்களை துடைத்துக்கொண்டு

நான் திரும்ப முயற்சித்த நேரம்,

மெல்ல தெரு வளைவில் எட்டிப் பார்த்திட்டாய் நீ சிரிப்புடன்…

பட்டென்று நானும் குனிந்து கொள்ள,

அதரங்களோ பூப்பூத்திட்டது அக்கணமே…

“அட வாலுப்பையா…”

சிரிப்பு என்னையும் மீறி வர,

முகம் மூடி மறைத்தபடி சுவரில் சாய்ந்து அமர்ந்தேன் நான்

உன்னைப் பற்றிய எண்ணங்களில் சுகமாய் உழன்றபடி…

பூ மலரும்

Ilam poovai nenjil 64

Ilam poovai nenjil 66

{kunena_discuss:1088}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.