(Reading time: 2 - 3 minutes)

கவிதை - நானும் தலையணையும் - புவனேஸ்வரி கலைசெல்வி

huggingPillow

(கண்ணீர் சுமக்காததால்

என் தலையணை கொண்டது

முதல் ஏக்கம்!

இதோ அவளின் எண்ணங்கள் மொழியாக்கம்! )

 

தலையணை:

சகியே, என் பிரிய சகியே,

என் மேனி நடுங்க செய்தவளே,

இறுக்கி அணைத்து என்னை நெருக்கியவளே,

இது என்ன மாயமோ?

 

உன் விழிகளின் மழை போக்கி

வெயில் தந்த வள்ளல் எவரோ? நிலைக்குமோ?

நிஜமாகிடுமோ? இல்லை காற்றில் ஒரு மேகமாய்

இதுவும் கடந்திட மீண்டும்

ஈரமாக்கி என்னை பாரமாக்கிடும்

எண்ணமும் உண்டோ?

 

நான் :

அன்பே என் பேரன்பே,

என் மூச்சுக் காற்றில் இதம் கண்டவளே,

கரைந்த கண்மையினால் சாட்சி கையெழுத்திட்டவளே,

ஓட முடியாமல், முகம் ஒளிப்பதற்கு இடம் தந்த வள்ளலே!

 

வந்தது என்னவோ பேரன்புதான்!

கொடுத்தவருக்கு இல்லை எதிர்ப்பார்ப்புதான்!

நெகிழும்போதெல்லாம் மெழுகாகி,

தனிமையில் நம்பிக்கையை உண்ணும் கழுகாகி,

நான் போடும் இரட்டை வேஷம் எல்லாம்,

அவ்விடத்தில் வெட்டவெளிச்சமாகிட கண்டேன்!

 

நேற்றின் சோகம் மறக்கிறேனடீ,

நாளைய கனவுகளையும் துறக்கிறேனடீ!

இன்றை நம்பி நான் அழ நினைத்தாலும்,

அன்பால் அதட்டிட என்செய்வேன்?

 

உடன் வருவேன் ; நம்பிக்கை கொண்டிடு என்கிறார்;

மாறும் நோக்கமில்லை: பிரிவதற்கு இணையவில்லை என்கிறார்!

நீயும் காத்திரு என்போல!

இன்பம் என்றால், சேர்ந்தே கதகதப்பை உணர்வோம்!

துன்பம் என்றால் சேர்ந்தே ஈரமாகிடுவோம்!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.