(Reading time: 2 - 3 minutes)

அம்பும் நீதான்! எய்தவனும் நீதான்! - புவனேஸ்வரி
Money

காகிதமாகிய பணத்திற்கு,

என் வாழ்த்துக்கள்!

நெடுங்காலத்திற்கு பின், நீ வெறும் காகிதம்தான்,

என்ற நிதர்சனம் ஒரு நொடியேனும்

எம்மக்களின் எண்ணத்தில் பதிந்ததிற்கு மகிழ்ச்சி!

 

அனேக மக்களின் அயர்வான குரலில்,

அடியவளின் சிரிப்பு கேட்காமல் இருந்திருக்கலாம்!

உனக்காகவே மீண்டும் சிரிக்கிறேன்..

சென்று வா காகிதமே!

இன்று தொடங்கிய உன் அழிவு,

சர்வ தேசமெல்லாம் பரவட்டும்!

 

வாழ்க்கை எனும் நியதி,

முடிவில் இருந்துதான் தொடங்குமாம்!

நீயும் சென்று வா! வேண்டும் பழைய பண்டமாற்றம்!

ஏன் உன்மீது இத்தனை வெறுப்பு?

குற்றப்பத்திரிக்கையை வாசிக்கிறேன் கேள்!

 

உன்னால்,

வருமையில் வாழ்ந்தவர்கள் வாடினார்கள்!

நடுத்தரவர்கத்தினரோ நாடோடிகளாய் ஓடினார்கள்!

சொகுசாய் வாழ்பவர் மட்டும் சொத்துகளை தேடினார்கள்!

 

உன்னால்,

எத்தனை உத்தமன்கள் திருடர்கள் ஆகினர்?

எத்தனை புதல்வர்கள் வீட்டைப் பிரிந்து

அயல் நாடு சென்றனர்?

எத்தனை பெண்கள் விலைமாதுவாய் விற்கப்பட்டனர்?

அறிவாயா நீ ?

 

நீ இல்லாததால்,

எத்தனை உயிர்கள் மயிரிழையில் சொர்க்கம் சேர்ந்தன?

எத்தனை புத்திமான்கள் புத்தகத்தை அடகு வைத்தனர்?

அறிவாயா நீ?

 

பணம் பணமென உன்னை தலையில் தூக்கி வைத்தும்,

உனக்கென்று என்ன சக்தி உள்ளது?

செல்வந்தர்களின் வீட்டில் இரும்பு பெட்டியில் மறைந்து வாழ்ந்தாயே!

உன் சக்தியால் ஏழையின் வீட்டில் இடம் பெயர்ந்திருந்தால்,

சுருக்குப்பையில் தெய்வமாய் தெரிந்திருப்பாய்!

 

நீ இருக்க வேண்டிய இடத்தில் இருந்திருந்தால்,

சொர்கமென்பது பூமியிலேயே அமைக்கப்பட்டிருக்கலாம்!

கொலையும் கொள்ளையும் உன் பிள்ளைகள்!

திருட்டும் களவாடுதலும் உன் பேரப்பிள்ளைகள்!

வாழ்க்கை எனும் போர்க்களத்தில்

வீழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையில்

அம்பும் நீதான்! எய்தவனும் நீதான்!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.